März 28, 2024

ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டதை சொல்வதில் என்ன தயக்கம்!

உரிமைகள் மனிதத்தின் அடையாளம், அவை சலுகைகள் அல்ல, நாங்கள் கோழைகள் அல்ல, உண்மையை உரத்துச் சொல்ல

சமீப காலமாக தமிழர் சமூகத்தில் பொதுவாகவும், ஈழத்தமிழர் சமூகத்தில் குறிப்பாகவும், எழும் குழப்பமான கருத்துக்கள் அதிர்ச்சி தருகின்றன. முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான 11 ஆண்டுகளில், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, அறிவார்ந்த கருத்துக்கள் என விதைக்கப்படும் நச்சுவிதைகளில், வழுக்கி விழுபவர்கள் அதிகரிக்கின்றனரோ என்ற அச்சம் எழுகிறது.

1948இல் ஐ.நா சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமைகள் பட்டயம் பின்வருமாறு சொல்கிறது.

மனிதக் குடும்பத்தினைச் சேர்ந்த யாவரதும் உள்ளார்ந்த மரியாதையையும், அவர்கள் யாவரதும் சமமான, மாற்றத்திற்குட்படுத்த முடியாத உரிமைகளையும் அங்கீகரித்தலே உலகத்தில் சுதந்திரம், நீதி, அமைதி என்பவற்றுக்கு அடிப்படையாகவுள்ளதாதலாலும்,

மனித உரிமைகளை அவமதித்தலும் இகழ்தலும், மனிதகுலத்தின் மனசாட்சியை சீற்றத்திற்குள்ளாக்கியுள்ள காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு இடமளித்துள்ளதாதலாலும், பேச்சுச் சுதந்திரம், நம்பிக்கைச் சுதந்திரம், அச்சத்திலிருந்தும் வறுமையிலிருந்தும் விடுதலை ஆகியனவற்றை மனிதன் முழுமையாக அனுபவிக்கத்தக்க ஒரு உலகின் வருகையே சாதாரண மக்களின் மிகவுயர்ந்த குறிக்கோளாக எடுத்துச் சாற்றப்பட்டுள்ளதாதலாலும்,

கொடுங்கோன்மைக்கும், அடக்குமுறைக்கும் எதிரான இறுதித் தீர்வாக எதிரெழுச்சி செய்வதற்கு மனிதன் கட்டாயப்படுத்தப்படாமலிருக்க வேண்டுமெனில் சட்டத்தின் ஆட்சியால் மனிதவுரிமைகள் பாதுகாக்கப்படுவது இன்றியமையாததாக உள்ளதாதலாலும்,

சரி மனித உரிமைகள் பட்டயத்தின் அறிமுகரையின் முதல் மூன்று பகுதிகளே, உலகளாவிய மனித வாழ்வு பல சிக்கல்களுக்கு (குறிப்பாக முதலாம் உலகப்போர் இரண்டாம் உலகப்போர்) உள்ளான பின்னணியில், மனித வாழ்வை மேம்படுத்தவென பல முதன்மை மனித உரிமை விடயங்களை முதன்மைப்படுத்துகிறது.

முதலாம் பகுதி, சமத்துவமான மாற்றத்திற்கு உட்படுத்த முடியாத மனித உரிமைகளை வலியுறுத்துகிறது. இது நடந்தேறியிருந்தால் ஈழத்தமிழர்கள் உரிமைகளுக்காக போராடும் நிலை எழுந்திருக்குமா? இலங்கையில் என்று மாற்றத்திற்கு உட்படுத்த முடியாத சமத்துவமான உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன?

இரண்டாம் பகுதியில் குறிப்பிடுகின்ற, „மனிதகுலத்தின் மனசாட்சியை சீற்றத்திற்குள்ளாக்கியுள்ள காட்டுமிராண்டித்தனமான செயல்கள்“, ஈழத்தமிழருக்கு எதிராக நடந்தேறினவா? இல்லையா? எத்தனை ஆண்டுகளாக அவை நடந்தேறின? அவற்றைத் தானே 2011இல் ஐ.நா குழுவே, போர்க் குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் என வரையறுத்ததே! மக்கள் தீர்ப்பாயம் இனப்படுகொலை எனவும் பின்னர் அதை வகைப்படுத்தியதே.

மூன்றாம் பகுதி சொல்கிறது.. கொடுங்கோன்மைக்கும், அடக்குமுறைக்கும் எதிரான இறுதித் தீர்வாக எதிரெழுச்சியை கோடிட்டுக் காட்டுகிது. பேசியும் பார்த்தார்கள்.. ஒப்பந்தங்களை செய்தும் பார்த்தார்கள்.. அகிச்சையாக போராடியும் பார்த்தார்கள்… எல்லாம் ஆயுத வன்முறைக்கு உள்ளான போதும், சட்டத்தின் ஆட்சி பொய்துப் போன போதுமே, ஈற்றில் தமிழ்த் தலைவர்கள் 1976இல் பிரிந்து போகின்ற உரிமையை கையில் எடுத்தனர்.

அப்போது அதிகரித்த ஆயுத ஒடுக்குமுறையையும், அது சார்ந்த கொடுங்கோன்மையையும் எதிர்கொள்ளவே இளைஞர்கள் தற்காப்பு ஆயுத போராட்டத்தை எதிரெழுச்சியாக கையில் எடுத்தனர். அதுவும் தார்மீக அடிப்படையில், நாம் ஒரு உறுதியான அத்திவாரத்தில் நிற்கிறோம் என்பதைத் தெரிந்து, தமிழ் மக்களின் போராட்ட இலட்சியம் நியாயமானது: சர்வதேச மனித அறத்திற்கு இசைவானது. எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள். தனியரசை அமைக்கும் தகுதி பெற்றவர்கள். சர்வதேச சட்டத்தின் அடிப்படையில், இந்த உரிமையை எவரும் நிராகரித்துவிட முடியாது என்பதைப் புரிந்து அதை வெளிப்படையாக குறிப்பிட்டே முன்னகர்ந்தனர்.

உலகில் உரிமைப் போராட்டத் தலைமையாகப் இன்று போற்றப்படும் ஆயுத எதிரெழுச்சி தலைமை நெல்சன் மண்டேலா குறிபிடுகிறார், „எமது எதிரெழுச்சியின் வடிவத்தை ஒடுக்கப்படுகின்ற மக்கள் தீர்மானிப்பதில்லை. ஒடுக்குமுறையாளர்களே அதைத் தீர்மானிக்கின்றனர். அவர்கள் ஆயுத வன்முறையை ஏவிவிடுகின்ற போது வேறு வழியின்றி ஒடுக்கப்படுகின்ற மக்களும் ஆயுதவலுகொண்டே தம்மை தற்காத்துக் கொண்டாக வேண்டும்“, என்கிறார். இவ்வுல வழமையே ஈழத்திலும் நடந்தேறியது.

இதனை தமிழர் தலைமை தனது உரைகளில் பலமுறை சுட்டிக்காட்டியும் உள்ளார். „நாம் இனத்துவேசிகள் அல்லர். போர்வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ, விரோதிகளாகவோ கருதவில்லை. சனநாயக அரசியல் மரபிற்கு நாம் விரோதமானவர்கள் அல்லர். எமது மக்களின் அடிப்படையான சனநாயக அரசியல் உரிமைகளுக்காகவே நாம் போராடி வருகின்றோம்“.

„சிங்கள அரசின் தமிழின அழிப்புப்போர், தமிழரின் நிம்மதியான வாழ்வைக் கெடுத்து, தமிழரை அகதிகளாக்கி, தமிழரின் சமூக, பொருளாதார வாழ்வைச் சீரழித்து, தமிழருக்கு என்றுமில்லாத பேரவலத்தைக் கொடுத்திருக்கிறது. தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான் போரைத் திணித்திருக்கிறது“.

„சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கர வாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது“, என்கிறார்.

இதை உலகில் எவருக்கும் எந்தச் சூழலிலும் அடித்துச் சொல்வதற்கு எமக்குத் தயக்கம் ஏன் வேண்டும்? எதற்காக வேண்டும்? அறத்தை, உலகில் ஏற்க்கப்பட்ட நியதியை அதன் வழிநின்று விளக்கிச் சொல்ல வேண்டுமென்றால் நாம் முதலில் எம்மை அது குறித்த புரிதலுக்கும் அது சார்ந்த கருத்து வெளிப்பாட்டிற்கும் தயாரித்துக் கொள்ளவில்லை என்று வேண்டுமானால் உண்மையை ஒத்துக் கொள்வோம். அதைவிடுத்து யாருக்கும் பயந்து அவர்கள் எம்மை தப்பாக புரிந்துவிடுவார்கள் என நாமே எம்மை ஏமாற்றி எவ்வளவு நாட்கள் அடிமை வாழ்வே வாழப்போகின்றோம்?

உண்மையை உரத்துச் சொல்வதற்கே எமக்கு தயக்கம் என்றால், எதற்கு எமக்கு கல்வி? அதுவும் சிறந்த வழக்கறிஞர்கள் எனப் பீத்திக் கொள்பவர்களுக்குமா வாதத்தை கற்றுத்தரவேண்டும்? கல்வியாளர்களாக உலகின் உச்சாணிக் கொம்பில் உள்ள எம்மவர்களுக்குமா இந்தத் தடுமாற்றம்? வரலாறு எம்மை விடுவிக்குமானால் எமது வரலாற்றை முதலில் முழுமையாக படியுங்கள். முதுகெலும்பு உள்ள மனிதர்களாக உண்மையை நெஞ்சை நிமிர்த்தி உரத்துச் சொல்லுங்கள்! அது மனிதத்திற்கு அழகு!

-நேரு குணரட்ணம்-