März 27, 2024

ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் கோடி திரட்டி தருகிறேன்… ப.சிதம்பரம் பாய்ச்சல்

 சென்னை: கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு ஆகும் செலவு விவரங்களை தன்னிடம் தந்தால் ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் கோடி திரட்டி தர முடியும் என தெரிவித்துள்ளார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம். மேலும், நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியை பிடித்தம் செய்வது தவறனான நடவடிக்கை என்றும், இந்தியாவில் ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறதா அல்லது அதிகாரிகள் ஆட்சி நடைபெறுகிறதா என ஆவேச கேள்வி எழுப்பியுள்ளார். செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா நிவாரண நிதியை மத்திய அரசிடம் மாநில முதலமைச்சர்கள் அழுத்தம் திருத்தமாக கேட்டு பெற வேண்டும் என்றும், கடிதம் எழுதியதோடு அந்த கடமை முடிந்தது என எண்ணக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். நாடு இப்போது உள்ள இந்த இக்கட்டான பேரிடரில் புதிதாக மத்திய அரசு அலுவலகங்கள் அமைக்க இருபது ஆயிரம் கோடி நிதியை அதற்கு செலவிடுவது தவறு என்றும், இப்போது அந்த கட்டிடங்களுக்கு என்ன அவசரம் வந்தது என்றும் வினவியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் கடந்த 10 நாட்களாக மத்திய மாநில அரசுகளை எந்த ஒரு எதிர்க்கட்சியும் விமர்சனம் செய்யாமல் பொறுமைக்காத்து அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கவனித்து வந்தது. இந்நிலையில் அதில் திருப்தி ஏற்படாத காரணத்தால் எதிர்க்கட்சிகள் மத்திய மாநில அரசுகள் மீது விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளன. தமிழக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருந்த நிலையில், ப.சிதம்பரம் தனது பங்கிற்கு மத்திய அரசு மீது பய்ச்சல் காட்டியுள்ளார்.