April 25, 2024

மீண்டும் இடைக்கால நாடாளுமன்று:ரணில்,கூட்டமைப்பு ஆதரவு?

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இரத்து செய்யப்படுமிடத்து மீண்டும் முன்னைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் இடைக்கால நாடாளுமன்றை கூட்ட கோத்தா தரப்பு தயாராகின்றது.
அவ்வாறு ஒரு சூழல் ஏற்படுமாயின் ரணில் தரப்பு அதற்கு ஆதரவளிக்க ஏற்கனவே முன்வந்துள்ளதாக தெரியவருகின்றது.
கூட்டமைப்பும் சஜித் தரப்பினை சேர்ந்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக தெரியவருகின்றது.
தற்போதைய சூழலில் எவ்வாறேனும் தேர்தலை நடத்த கோத்தா அரசு மும்முரமாகியுள்ளது.
எனினும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 2020 பொதுத்தேர்தலை இடைநிறுத்தும் வகையிலான தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட முதல் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை நாளை திங்கட்கிழமை (11)இடம்பெறவுள்ளது.
மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணைகள் இடம்பெறவுள்ளது.
நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா தலைமையிலான நீதிபதிகள் குழாமில் எஸ்.துரைராஜா மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.
எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடாத்த திட்டமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக் கோரி கடந்த 2 ஆம் திகதி, சட்டத்தரணி சரித்த குணரத்னவால் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அரசியலமைப்பின் 104 (அ ) சரத்துடன் இணைத்து வாசிக்கத்தக்கதாக 126,17 ஆம் சரத்துக்களின் அடிப்படையில் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஆணைக் குழு உறுப்பினர்களான என்.ஜே.அபேசேகர, ரத்னஜீவன் கூழ், ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தர, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக இதுவரை 12 அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு நீதிமன்ற தடை வருமிடத்து ரணில் தரப்பின் ஆதரவை பெற்று இடைக்கால அரசை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே அவ்வாறான அரரசு அமையுமிடத்து கூட்டமைப்பும்,சஜித் தரப்பினை சேர்ந்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆதரவை தெரிவித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.