April 19, 2024

கொரோனா நெருக்கடி… மக்கள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தும் உலக நாடுகள்… வலுக்கும் எதிர்ப்பு!

கொரோனா

கொரோனா

கொரோனா நெருக்கடியை உலகம் எதிர்கொள்ளும் அதே சமயத்தில், அரசுகள் மக்களின் மீதான கண்காணிப்பையும் தீவிரப்படுத்திவருகின்றன.

கொரோனா நெருக்கடியால் உருவான அவசரநிலை இன்னும் எவ்வளவு நாள்களுக்கு நீளும் என்று தெரியவில்லை. ஊரடங்கால் மக்கள் சந்தித்துவரும் இன்னல்கள் ஒருபுறமிருக்க, பொருளாதார வீழ்ச்சி, அதனால் ஏற்படவிருக்கும் வேலை இழப்பு எனப் பல பிரச்னைகள் தொடரவிருக்கின்றன. சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் சாமானியனைப் போலவே, உலக நாடுகளும் அசாதாரணமான நிலைக்கு முன் போராடிவருகின்றன. ’அசாதாரணமான நிலையை எதிர்கொள்ள, அசாத்தியமான நடவடிக்கைகளை எடுக்கும் அரசு தேவை என்ற முழக்கமும் வலுப்பெற்றுவருகிறது.

தொடரும் பேரழிவு நோயைக் கட்டுப்படுத்தியாக வேண்டும். மக்களிடையே எழுந்துள்ள அதிருப்தி நிலையை அடக்கியாக வேண்டும். ஆதலால், கட்டற்ற அதிகாரத்துக்கு அனைத்து அரசுகளும் தயாராகிவருகின்றன. தனியுரிமை, குடிமக்களின் மீதான அரசுகளின் கண்காணிப்பு அதிகரித்துவரும் நிலையில், கொரோனாவுக்குப் பிறகு இவை தொடரக்கூடும் என்கிற அச்சமும் வலுப்பெற ஆரம்பித்திருக்கிறது.

கொரோனா உலக நாடுகள்

கொரோனா உலக நாடுகள்

இன்று உலகமே ஊரடங்கால் முடங்கிப்போய் இருக்கிறது. இதுபோன்ற ஒரு நிலையை யாரும் யூகித்திருக்க மாட்டோம். பாதுகாப்பின் பெயரிலான அரசுகளின் இயல்பை மீறிய அதிகாரத்தை இயல்பானதாக உலகம் காண்கிறது. மொத்தத்தில் இந்த நெருக்கடி நிலையானது, இதுவரை கடைப்பிடித்த அனைத்து வரையறைகளையும் தகர்த்துள்ளது.

உதாரணத்துக்கு, சூழலியல் சட்டங்களை மீறும் அனுமதியை தொழிற்நிறுவனங்களுக்கு வழங்கினார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். தொழிலாளர் அமைப்புகளின் உரிமையைத் தகர்த்து, வாரத்துக்கு 60 மணிநேரம் வேலை செய்ய நிர்பந்தித்தார், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன். இவ்வாறாகத் தொடரும் நிலையில், இனி மூடி மறைக்க எதுவுமில்லை என நினைக்கும் அரசுகள் பரவலான கண்காணிப்பு அரசியலைக் கையிலெடுத்துள்ளன.

தற்போதைய பெருந்தொற்றுக்கு எதிராக மருத்துவர்கள், அறிவியலாளர்கள் மட்டும் போராடவில்லை, தொழில்நுட்பக் களத்தில் கணினி அறிவியலாளர்களும் தகவல் நிபுணர்களும் அதிக அளவில் களம் காண்கின்றனர். குறிப்பாக, முகத்தை நுண்ணறிதல் மூலம் ஒருவரின் உடல்நிலையை அறியும் முறையை சீனா நடைமுறைப்படுத்தியது. ரயில் நிலையம் போன்ற பொது இடங்களிலிருந்த தெர்மல் ஸ்கேன் இயந்திரங்கள் மக்களின் நோய் தாக்கத்தைக் கண்டறிந்தன. மொபைல் செயலிகள் மூலம் மருத்துவ அறிவுரைகள் கொடுக்கப்பட்டுவருகிறது. இந்திய அரசு, ஆரோக்கிய சேது செயலி, அனைத்து மொபைல்களிலும் கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என கோரிவருகிறது. அதே சமயத்தில், அதில் உள்ள பிரைவசி தொடர்ச்சி சிக்கலும் முன்வைக்கப்படுகின்றன.

ஊரடங்கு

ஊரடங்கு

கொரோனா நோய்க்கு எதிரான யுத்தத்தில், மக்களின் தனியுரிமை தொடர்பான சட்டங்கள் சமரசம்செய்துகொள்ளப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பின்னாட்களில், ‚அடிப்படை உரிமைகளைத் தகர்ப்பதற்கான‘ திட்டங்களின் முன்னோட்டமாக இவை அமையலாம் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கருதுகிறார்கள். 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டிகள், 2010-ம் ஆண்டு ஷாங்காய் எக்ஸ்போ போன்ற நிகழ்ச்சிகளில் சீனாவில் தனிநபர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய நெருக்கடி நிலையின்மூலம் கண்காணிப்பை நிரந்தரமாக்க அரசு முயல்வதாக அவர்கள் அச்சப்படுகிறார்கள்.

சீனாவைப் போல் தென் கொரியாவும் மக்களின் மொபைல்களை பின்தொடர்வதன் மூலம் தொற்று பரவுவதைக் கண்டறிந்தது. மேலும், சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங் போன்ற கிழக்காசிய நாடுகள் இம்முறையில் வெற்றிபெற்றன. இந்நாடுகள், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்திய நிலையில், தங்கள் வெற்றியைப் பெருமையாக வெளிப்படுத்துகின்றன. அதன் விளைவாக, அதிக பாதிப்படைந்த ஐரோப்பிய நாடுகள், தனிநபர் கண்காணிப்பு செயல்முறையை அனுமதிக்கத் தயாராகிவிட்டன. பலம்வாய்ந்த பாதுகாப்புப் பின்னணியைக் கொண்ட இஸ்ரேலின் மொஸாட் உளவு அமைப்பு, தன்னிச்சையான கண்காணிப்பை மேற்கொள்வதை உறுதிப்படுத்தியுள்ளது.

சீன அதிபர்

சீன அதிபர்

எனவே, மக்கள் தங்கள் தனியுரிமையைத் தியாகம் செய்துதான் தீரவேண்டும் என்று அரசுகள் முடிவுசெய்யத் தொடங்கிவிட்டன. பிரச்னை இதிலிருந்தே தொடங்குகிறது. ஏனெனில், நோய் பரவலுக்காக மொபைல்களைப் பின்தொடர்ந்த தென் கொரிய அரசு, அதன்மூலம் மக்களின் தனிப்பட்ட தகவல்களைக் கசியவிட்டதாக விமர்சனம் எழுந்தது. சீனாவில், சமூக ஒழுங்கை மீறுபவர்களைக் கண்டுபிடித்த அதிகாரிகள், அவர்களைத் தாக்கியதாகவும், சிறையில் அடைப்போம் என்று மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. நெருக்கடி நிலையின் தவிர்க்கமுடியாத விளைவைக் கடந்து, எதிர்காலத்தில் தனிநபர் மீதான அரசின் அத்துமீறலாக இவை உருவெடுக்கலாம். உலகம் முழுக்க கண்காணிப்பு அரசியல் அத்தகைய எதிர்வினைகளையே சந்தித்தது.

எல்லை பாதுகாப்பு, அரசுக்கு எதிரானவர்கள், அரசியல் புள்ளிகள் என ஒரு நாடு கடைப்பிடித்த கண்காணிப்பு, 70-களுக்குப் பிறகு தீவிரவாதத்துக்கு எதிராகப் பரவலாக்கப்பட்டது. உலகுக்கான அச்சுறுத்தலாக தீவிரவாதத்தை குற்றம் சாட்டிய அமெரிக்கா, கண்காணிப்பை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொண்டது. உட்சபட்சமாக, இரட்டைக் கோபுர தகர்ப்புக்குப் பிறகு தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்த, எதேச்சதிகாரத்தில் இறங்கியது அப்போதைய ஜார்ஜ் புஷ் அரசு. ‚தேசபக்தி சட்டம்‘ (Patriotic Act) என்ற சட்டத்தை 2001-ல் முன்மொழிந்தது. இந்தச் சட்டம் எந்தவித தார்மீக அடிப்படையுமின்றி, நீதிமன்றங்களின் அனுமதியின்றி குடிமக்களின் தனிப்பட்ட விஷயங்களைச் சோதனையிட அரசுக்கு அனுமதி வழங்கியது.

‚தேசத்தின் பெயரால் ஜனநாயகம் அளித்த சுதந்திர உரிமைகளைப் பறிகொடுக்க முடியாது‘ என்று எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், ‚நாட்டு நலனுக்காக உண்மையான தேசபக்தனாக இருக்கப் போகிறீர்களா அல்லது நாட்டை எதிர்க்கப்போகிறீர்களா‘ என்று கூறி, தன் அதிகாரத்தை நியாயப்படுத்தியது புஷ் அரசு.

ஸ்னோடன்!

ஸ்னோடன்!

‚தனிமனித பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்‘ என்று கூறி வென்ற ஜனநாயகக் கட்சியின் ஒபாமா அரசும், இந்தச் சட்டத்தை தொடரவே செய்தது. இந்த நிலையில்தான், அமெரிக்க தேசியப் பாதுகாப்பு மையத்தில் பணிபுரிந்த ‚எட்வர்ட் ஸ்னோடன்‘ என்பவர், அமெரிக்க அரசு செய்த தனிநபர் உரிமை மீறல்களையெல்லாம் ஊடகத்தின் மூலம் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

ஸ்னோடன் வாக்குமூலம் அளித்த 2013-ம் ஆண்டுக்குப் பிறகு, கண்காணிப்பு அரசியலுக்கு எதிரான போராட்டங்கள் உலகம் முழுக்க நடந்தன. மனித உரிமை அமைப்புகளின் முதன்மை செயல்பாடாக, பல உலக நாடுகளில் எதிர்ப்புகள் வலுப்பெற்றன. அமெரிக்காவைப் போலவே கண்காணிப்பில் தீவிரம் காட்டிய பிரிட்டனை, ஐரோப்பிய யூனியன் தீர்மானம் நிறைவேற்றிக் கண்டித்தது.

2016-ம் ஆண்டு, ட்ரம்ப்பின் தேர்தல் வெற்றி, தனிநபர் கண்காணிப்பை முறைகேடாகப் பயன்படுத்தியதில் முக்கிய பேசுபொருளானது. ட்ரம்ப்பும் தன்னை கண்காணிப்பின் தீவிர ஆதரவாளராகவே வெளிப்படுத்துகிறார். தன் வெறுப்பு பிரசாரத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் வாழும் கறுப்பர்கள், லத்தீன் அமெரிக்கர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் தகவல்களைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்று கோரினார். இத்தகைய கண்காணிப்பு அரசியலை இன்று அவசியத் தேவையாக ஒப்புக் கொள்ள வைத்துள்ளது கொரோனா பேரிடர்.

தோல்வியில் முடிந்த ஐ.நா-வின் போர் நிறுத்த முடிவு... ஒத்துழைக்காத உலக நாடுகள்!

Also Read

தோல்வியில் முடிந்த ஐ.நா-வின் போர் நிறுத்த முடிவு… ஒத்துழைக்காத உலக நாடுகள்!

இதன் விளைவு பிற்காலத்தில் எவ்வாறாக இருக்கும் என்று சமீபத்திய பேட்டியில் விளக்கியுள்ளார், எட்வர்ட் ஸ்னோடன். அதில், ‚பாதுகாப்பு நிறுவனங்கள் புதிய சட்டங்களை உருவாக்கும். நிலைமை சரியானாலும் கண்காணிப்புகள் தொடரும். இதன்மூலம், கருத்து வேறுபாட்டாளர்களும் அரசியல் எதிரிகளும் சுலபமாக முடக்கப்படுவார்கள். செயற்கை நுண்ணறிவின் அதிகப்படியான ஆற்றல், சுதந்திரத்துக்கான அச்சுறுத்தலாகவே இருக்கும். உங்கள் மொபைல் மூலம் உங்கள் மனநிலையைக் கண்டுபிடிப்பதில் உள்ள குறைபாடுகள், சமூக வன்முறைக்கே வழிகோலும்‘ என எச்சரிக்கிறார்.

“மக்கள் மீதான கண்காணிப்பை அடிப்படைத் தேவையாக்கவேண்டிய அவசியம் அரசுகளின் சுயநல போக்கிலேயே உருவாகிறது. ஏனெனில், தீவர கண்காணிப்புகள் இல்லாமலே ஜனநாயக ரீதியில் கொரோனாவின் தீவிரத்தைக் கட்டுப்படுத்திய தைவான் போன்ற நாடுகள், சிறந்த உதாரணங்களாக இருக்கின்றன“ என்கிறார்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்.

‚மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்புதல் என்பதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில், இன்றைய பிரச்னைக்கு முதன்மைக் காரணம் அந்த நிலைதான்’ என்று கூறிய பிரான்ஸ் அதிபர் மேக்ரோனின் வார்த்தைகள்தான் அனைத்து அரசுகளின் மனவோட்டமாகவும் உள்ளது. தொழில்நுட்பத்தின் திறனால் வென்ற சீனாவுக்கு இணையாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், இருமுனை அரசியலைக் கையாளத் தயாராக இருக்கின்றன. அதில், மக்கள் மீதான கண்காணிப்பு அரசியலே முதன்மைத் தூண்டுதலாக இருக்கும்.

ஆரோக்கிய சேது செயலி

ஆரோக்கிய சேது செயலி

இந்தியாவிலும் தனியுரிமை தொடர்பான அச்சங்கள், மக்கள் மீதான கண்காணிப்பு எனப் பல சர்ச்சைகள் இருந்துவருகின்றன. அரசு முன்னிறுத்திவரும் ஆரோக்கிய சேது செயலியும் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான சர்ச்சைகளும் எழுந்துள்ளன. சமூக ஊடகங்களுக்கு ஆதார் இணைப்பு என்கிற பேச்சுகளும் இந்தியாவில் அடிபட்டுவருகின்றன. இந்திய அரசும், தகவல் பாதுகாப்பை அலட்சியப்படுத்திவருகிறது என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.

அப்படியிருக்கையில், தற்போது உலகம் சந்தித்துவரும் அவசர நிலையில், கண்காணிப்பு அரசியல் தீவிரமாகத் தொடரவே செய்யும். கொரோனாவுக்குப் பிறகான காலத்தில் தனியுரிமை, குடிமக்களின் தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றின் இலக்கணம்கூட மாறியிருக்கும். அரசின் கண்காணிப்பிலேயே குடிமக்கள் இருக்க வேண்டும். மக்களின் அனைத்து நடவடிக்கைகளும் அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்பது யதார்த்தமாக்கப்பட்டுவிடும்.

இன்றைய அவசரநிலை, இனிவரும் காலங்களில் இயல்புநிலையாக மாறிவிடுமோ என்கிற அச்சமும் எழவே செய்கின்றன.