April 19, 2024

அரசியல் கைதிகளிற்கு விடுதலை இல்லை?

இலங்கையில் வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து 228 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பபட்டு இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களுள் அரசியல் கைதிகள் எவரும் உள்ளடங்கியிருக்கவில்லை.
சிறு குற்றங்கள் புரிந்தோர், 65 வயதை விட அதிகமானவர்கள், அபராதம் செலுத்த முடியாது சிறைவாசம் அனுபவித்த கைதிகள் போன்றோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் யாழ். சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்கு நீதிமன்றினால் தண்டப்பணம் விதித்து அதனைச் செலுத்த முடியாது தண்டனை அனுபவித்துவந்த 5 கைதிகளும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும் அவர்களில் ஒருவருக்கு பிறிதொரு வழக்கில் தண்டனைக் காலம் நிறைவடையாதுள்ளதால் அந்தக் கைதி மீளவும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இன்று விடுதலைசெய்யப்பட்டவர்கள் அனைவரும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதன் காரணமாக சிறைச்சாலை வாகனத்தில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்த போது அரசியல் கைதிகளென எவராவாது சிறையில் இருந்தால் அவர்களை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.