April 19, 2024

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்த 17 லட்சத்து 18 ஆயிரத்து 20 பேருக்கு 5 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக 8 ஆயிரத்து 15 மில்லியன் ரூபாவுக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் பந்துல திலக்கசிறி தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி உதவி பெறுவோர் மற்றும் குறைந்த வருமானத்தை பெறும் 25 லட்சத்து 528 குடும்பங்களுக்காக 5 ஆயிரம் ரூபா நிவாரண நிதியை வழங்க 12 ஆயிரத்து 627 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

நிவாரணம் வழங்கப்பட வேண்டியவர்கள் அடையாளம் காணப்பட்ட மேலும் சில நபர்களுக்கு 5 லட்சம் ரூபாவுக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது.

5 ஆயிரம் ரூபா நிவாரண நிதியை பெற மேலும் பல விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் திலக்கசிறி மேலும் கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை அரசியல் ரீதியாக தெரிவு செய்யப்படும் நபர்களுக்கே வழங்கப்பட்டு வருவதாகவும், உண்மையில் அந்த உதவி தொகை கிடைக்க வேண்டிய நபர்களுக்கு கிடைக்கவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.