März 28, 2024

இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பம்?

இலங்கை முழுவதும் பாடசாலைகளை இரண்டு கட்டங்களாக ஆரம்பிக்க கலந்துரையாடப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தரம் -10 தொடக்கம் தரம் – 13 வரை முதல் கட்டமாக ஆரம்பிக்கத் திட்டமிடப்படுவதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம். ரத்நாயக்க, கொழும்பு ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.
“கோரோனா தொற்றுப் பரவலைத் தொடர்ந்து மார்ச் மாதம் 13ஆம் திகதி மூடப்பட்ட பாடசாலைகளை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு முன்னர் அனைத்துப் பாடசாலைகளுக்கும் கிருமித் தொற்று நீக்கி விசிறப்படவேண்டும். அத்துடன், ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் கிருமித் தொற்று நீக்கி விசிறப்படவேண்டும்.
அனைத்து தரங்களுக்கும் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படாது. தரம் 10 மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் கற்பித்தல் நடவடிக்கைகள் தொடங்கப்படும். தேசிய மட்டப் பரீட்சைகளை எதிர்கொள்ளும் வகைகள் அவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறும்” என்றும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.