April 18, 2024

1,500 க்கும் அதிகமான தாக்குதலுக்கு பயன்படுத்துகின்ற வடிவமைப்புக்களை சேர்ந்த துப்பாக்கிகளுக்கு தடை – பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ அறிவிப்பு..!!

2020 ஏப்ரல் 18, 19 ஆகிய திகதிகளில் நோவா ஷ்கோஷ்யாவில் துப்பாக்கி நபர் ஒருவரின் செயலால் 22 கனேடியர்கள் மரணமானார்கள். துப்பாக்கிகள் தொடர்புபட்ட வன்முறையான குற்றங்கள் கனடாவின் அனைத்துப் பகுதிகளிலும் சமூகங்கள் மீதும், இந்தக் குற்றங்களால் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் மீதும் பேரழிவான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. அண்மையில் நோவா ஷ்கோஷ்யாவில் இடம்பெற்ற அவலம், 2017 ஆம் ஆண்டு கியூபெக் சிட்டியில் Centre Culturel Islamique de Québec இல் இடம்பெற்ற தாக்குதல், 1989 ஆம் ஆண்டு மொன்றியோலின் இகோல் பொலிதெக்னீக்கில் (École Polytechnique de Montréal) இடம்பெற்ற படுகொலை போன்றன இடம்பெற்றிருக்கவே கூடாது.

கனடா கோவிட்-19 நெருக்கடியின் மத்தியில் இருந்தாலும், கனேடியர்களின் பாதுகாப்பு அனைத்து வழிகளிலும் உறுதிப்படுத்தப்படுவது முக்கியமானது. இதன் காரணமாகவே கனேடிய அரசு துப்பாக்கி வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும், கனேடியர்களைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கைகளை எடுக்கிறது. பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ, தாக்குதல் துப்பாக்கிகளின் பிரிவைச் (assault-style) சேர்ந்த 1,500 க்கும் அதிகமான வகைகளையும், அவற்றின் வேறுபட்ட வடிவமைப்புக்களையும் சேர்ந்த துப்பாக்கிகளைத் தடை செய்வதாக இன்று அறித்தார். கனடாவில் இராணுவத் தரமுள்ள, தாக்குதல் ஆயுதங்களின் கொள்வனவு, விற்பனை, கொண்டு செல்லல், இறக்குமதி, பயன்பாடு என்பவற்றின் மீது தடை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.

புதிதாக தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளும் அவற்றின் பகுதிகளும் சட்டப்படி பயன்படுத்தப்படவோ, விற்பனை செய்யப்படவோ, இறக்குமதி செய்யப்படவோ முடியாது. தற்போதைய உரிமையாளர்கள் அவற்றைத் தொடர்ந்தும் பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், மட்டுப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் மட்டும் அவற்றைக் கொண்டு செல்லவோ, வேறு ஆட்களிடம் ஒப்படைக்கவோ அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடவடிக்கைகள் படைத்துறைப் பயன்பாட்டுக்கென வரையறை செய்யப்பட்ட ஆபத்தான துப்பாக்கிகள் அனைத்தையும் எமது சமூகங்களில் இருந்து அகற்றுவதுடன், கனேடிய குடும்பங்களும், சமூகங்களும் துப்பாக்கி வன்முறையால் துன்பப்படாதிருப்பதை உறுதி செய்யவும் உதவியளிக்கும்.

புதிதாகத் தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளின் உரிமையாளர்கள் புதிய விதிகளுக்கு அமைவாகச் செயற்படும் வேளையில், குற்றவியல் ரீதியில் பொறுப்புக் கூறுவதில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் வகையில் இரண்டு வருட நிலைமாறு காலம் நடைமுறைப்படுத்தப்படும். குற்றவியல் சட்டத்தின் கீழான இந்த இரண்டு வருட மன்னிப்புக் காலம் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆந் திகதி வரை நடைமுறையில் இருக்கும். வேட்டையாடுவதற்கான பூர்வகுடி உரிமையை அல்லது ஒப்பந்த உரிமையை நிலைநிறுத்தும் பூர்வகுடியினருக்கும், தமக்கும் தமது குடும்பங்களுக்கும் வாழ்வாதாரத்துக்காக வேட்டையாடுவோருக்கும் விலங்குகளைப் பொறி வைத்துப் பிடிப்போருக்கும் இந்தப் பொது மன்னிப்பின் கீழ் விதிவிலக்குகள் உள்ளன. பொருத்தமான மாற்று ஏற்பாடுகள் முடிவு செய்யப்படும்வரை, புதிதாகத் தடை செய்யப்பட்ட துப்பாக்கிகள் மட்டுப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதற்கு இந்த விதிவிலக்குகள் அனுமதியளிக்கின்றன. பொது மன்னிப்புக் காலம் நிறைவுக்கு வரும்போது துப்பாக்கிகளின் உரிமையாளர்கள் அனைவரும் தடைக்கு அமைவாக நடந்துகொள்ளவேண்டும்.

நாடாளுமன்றத்துடன் இணைந்தும் மக்களது கருத்தை அறிந்தும், இந்தத் துப்பாக்கிகளைப் பாதுகாப்பாக அகற்றுவதற்கு அவற்றை மீளக் கொள்வனவு செய்யும் திட்டம் ஒன்றை இயலுமான விரைவில் நடைமுறைப்படுத்துவதும், உரிய சட்டமூலத்தை விரைவாக அறிமுகம் செய்வதும் கனேடிய அரசின் நோக்கங்களாக உள்ளன.