April 19, 2024

தீவகத்தில் தனிமைப்படுத்தல் மையங்கள்?

சிறிலங்கா இராணுவம் மத்தியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக புதிது புதிதாக தனிமைப் படுத்தும் முகாம்கள் வட தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் அதிகளவு கைப்பற்றப்படு வருகின்றது.
குறிப்பாக யாழ்ப்பாணம் முல்லைத்தீவு தீவகம் ஆகிய இடங்களில் பல எதிர்ப்புக்களை மீறி சிறிலங்கா இராணுவத்தினர் பாடசாலைகளையும் தனித்துவ முகாம்களையும் தனிமைப்படுத்தும் முகாம்களாக மாற்றி அமைக்கும் இவ் வேளையில் கடந்த இரண்டு நாட்களுக்குள் வேலணை மத்திய கல்லூரியின் மாணவர் விடுதியிலும் புங்குடுதீவில் கோகோ பாயிண்ட் முகாமிலும் கழுதபிட்டி முகாமிலும் இரவோடு இரவாக பேருந்தில் கொண்டு சென்று தனிமை படுத்தல் நடவடிக்கையில் நூற்றுக்கு மேலான நபர்கள் தனிமை படுத்தப்படுத்தப்பட்டுருப்பது தீவுப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பது சமூகத்திற்கு பெரும் ஆபத்து என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனோ வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் அந்த வைரஸ் தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்படுபவர்களைப் பாராமரிப்பதற்கு தனிமைப்படுத்தல் நிலையங்கள் புதிது புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்திலும் பல இடங்களிலும் இந்த நிலையங்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.
ஆனால் கொரோனோ சந்தேக நபர்களை பராமரிப்பதற்கான தனிமைப்படுத்தல் நிலையங்களை மக்கள் செறிவாக வாழ்கின்ற இடங்களில் அமைப்பது ஒருபோதும் பொருத்தமான செயற்பாடு அல்ல. ஆகையினால் அவ்வாறாக நிலையங்களை அமைப்பதென்பது சமூகத்திற்கு பல்வேறு வழிகளிலம் பல பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய ஆபத்து உள்ளது.
ஏனெனில் இந்த வைரஸ் தொற்று சந்தேகத்திலேயே அவர்கள் தனிமைப்படுத்தப்பட இருக்கின்றனர். அவ்வாறு மக்கள் செறிவுள்ள இடங்களில் தனிமைப்படுத்படுகின்ற போது சமூகத்திற்குள்ளேயே அது பரவி விடுவதற்கான அபாயங்கள் இருக்கின்றன. ஆகையினால் இத்தகைய நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டியது அவசியமானது.
குறிப்பாக தனிமைப்படுத்தல் நிலையங்கள் என்பது சனநடமாட்டம் இல்லாத பகுதிகளிலேயே அமைக்கப்பட வேண்டும். அப்போது தான் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார்கள். அதனை விடுத்து மக்கள் செறிவுள்ள இடங்களில் அமைத்தால் அது ஒட்டுமொத்த சமூகத்திற்கே பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்து விடுகின்ற பாரிய ஆபத்து உள்ளது.
இவ்வாறான நிலைமையில் தான் யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதற்கு அப்பகுதி மக்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அத்தோடு அமைப்பதால் ஏற்படும் பாதிப்புக்களையும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
ஆயினும் தற்போது அங்கு தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவில்லை எனக் கூறப்பட்டாலும் யாழ் மாவட்டத்தில் சாவகச்சேரி, அராலி, வடமராட்சி கிழக்கு, பருத்தித்துறை போன்ற பல இடங்களிலும் இவ்வாறான தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றது.
இதன் ஆபத்துக்களை மக்கள் உணர்ந்துள்ளதால் பெரும் அச்சத்திற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியிருக்கின்றனர். ஆகவே மக்கள் செறிவாக வாழ்கின்ற குடியிருப்புக்களின் மத்தியில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைப்பது பெரும் பாதிப்பை சமூகத்திற்கு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. குறிப்பாக சமூகத்திற்கே பரவி விடும் ஆபத்து ஏற்படும்.
ஆகையினால் தனிமைப்படுத்தல் நிலையங்களை சனநடமாட்டம் இல்லாத இடங்களில் அமைப்பதே பொருத்தமானது. எனவே மக்களைப் பாதிக்கின்ற வகையில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கின்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டுமென்று மணிவண்ணன் வலியுறுத்தியுள்ளார்.