März 29, 2024

ரோசமுள்ள யாழ்ப்பாண சட்டத்தரணிகள்?

கோரொனா அச்சத்தில் நாடு முடங்கியுள்ள நிலையில் கசிப்பு உற்பத்தியாளர்களுக்காக ஆஜராகுவதை தவிர்த்திடுமாறு
யாழ்ப்பாணசட்டத்தரணிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில்; கருத்து வெளியிட்டுள்ள சிவில் செயற்பாட்டாளர் பொன்ராசா வெளியிடங்களில்; இருந்து வந்து பொன்னாலை காட்டில் கசிப்பு உற்பத்தி செய்த நபர்களைத்தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
சந்தேக நபர்களின் வீடுகளுக்கு சென்ற பொலிஸார் அவர்களை உடனடியாக பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு குடும்பத்தவர்களிடம் கூறியிருப்பதாகவும் தெரியவருகின்றது.
இவர்களை பொலிஸார் விரைவில் கைது செய்வர் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆனால், கடந்த காலங்களில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி, சிறு குற்றப்பணத்துடன் அவர்கள் மீண்டும் வந்து இதே காரியத்தை செய்யக்கூடிய நிலை ஏற்படக்கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
கொரோனாவைப் போன்று உயிரைக்கொல்லும் கசிப்பு காய்ச்சிய மேற்படி நபர்களுக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணிகளும் ஆஜராகக்கூடாது என பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
ஏழை மக்களின் வீடுகளில் அடுப்பு எரிவதற்காகவும். ஏழைக் குடும்பங்கள் கல்வியில் உயர்வதற்காகவும் வலி.மேற்கு பிரதேச மக்கள் அனைவரும் குரல்கொடுக்க வேண்டும்.
ஒரே ஊரில், அதுவும் கிராமம் ஒன்றில் 15 வருடங்களுக்கு மேலாக இடம்பெறும் கசிப்பு உற்பத்தியை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முடியாமையானது பொலிஸ் தரப்பிற்கு பெரும் இழுக்காகும்.
கல்வியறிவில் குறைந்த நான்கைந்து முட்டாள்கள் நீதித்துறைக்கு சவால் விடுக்கும் நிலையை ஏற்படுத்தியமைக்கு பொலிஸ் தரப்பே பதில் கூறவேண்டும்.
தற்போதைய சம்பவத்துடன் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு பொலிஸ் தரப்பும் சட்டத்தரணிகளும் நீதித்துறையும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த விடயத்தில் வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் இருந்து மக்கள் நிறையவே எதிர்பார்க்கின்றனர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.