April 19, 2024

மலேரியாவுக்கான மருந்தை கொரோனாவுக்கு தருமாறு இந்தியாவிடம் கோரிய அதிபர் டிரம்ப்!

மலேரியாவுக்கான மருந்தை கொரோனாவை எதிர்த்து போராட வழங்குமாறு இந்திய பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரியுள்ளார்.

அமெரிக்கா, இந்திய இருநாடுகளும் கொரோனா நோயால் சிக்கி தவித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மலேரியா நோய்க்கான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்த வழங்குமாறு கோரியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளைமாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று தொலைபேசி வாயிலாக பேசினேன். அதில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை நம் நாட்டிற்கு வழங்க கோரினேன். அந்த மருந்தை நான் உட்கொள்ள தயார். இது குறித்து மருத்துவர்களுடன் அலோசிக்க வேண்டும்.

இந்தியாவில் இது அதிகம் தயாரிக்கப்படுகிறது. நான் வழங்குவதாக கூறியிருக்கும், டொலர்களுக்கு அவர்கள் ஒத்துக்கொண்டால் சிறப்பாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் நல்ல கலந்துரையாடல் நடந்தது. கொவிட்-19ஐ எதிர்த்து போராட இந்தியா-அமெரிக்கா கூட்டாசியின் முழு பலத்தை பயன்படுத்த ஒப்புக்கொண்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.