März 29, 2024

சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகை செலுத்த இயலாதோருக்கு அரசின் முக்கிய அறிவிப்பு,

சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகை செலுத்த இயலாமல் தவிப்போருக்காக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அரசு!

கொரோனா அச்சம் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் வேலையில்லாமல் தவிப்பதையடுத்து, வீட்டு வாடகை செலுத்துதல் பல குடும்பங்களுக்கு பெரும் அச்சத்தை ஊட்டும் விடயமாகியுள்ளது.

ஆனால், அரசு அவர்களுடைய அச்சத்தை குறைக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அரசின் பொருளாதார விவகாரங்கள் செயலகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, சுவிட்சர்லாந்தில் 750,000 பேர் முழுமையான வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இது நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 15 சதவிகிதமாகும்.

டிசினோ மாகாணத்தைப் பொருத்தவரை இந்த எண்ணிக்கை இன்னும் அதிகம், அங்குள்ளோரில் 39 சதவிகிதத்தினர் பகுதி நேர பணியாற்றுவோர்தான்.

ஆகவே, அவர்களில் பெரும்பாலானோர் நேரத்திற்கு தங்கள் வீட்டு வாடகையை செலுத்த இயலாமல் தவிப்பதால் பெடரல் கவுன்சில், வீட்டு வாடகை செலுத்தும் திகதியை 30 முதல் 90 நாட்களுக்கு தள்ளிவைத்துள்ளது.

இதன் பொருள் என்னவென்றால், வாடகை செலுத்த வேண்டியவர்கள், வாடகை செலுத்த அதிகபட்சமாக 90 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளலாம்.

என்றாலும், இதுவும் வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு ஒரு வகையில் சுமைதான், காரணம் மூன்று மாத வாடகையை அவர்கள் சேர்த்து செலுத்துவதும் பெரும் பிரச்சினைதான் என்கிறது வாடகை வீடுகளில் வசிப்போர் சங்கம்.