April 17, 2024

இந்திய ஆயுள்வேத மருந்தால் கொரோனாவில் இருந்து மீண்ட பிரிட்டிஷ் இளவரசர்

இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த ஒரு ஆயுர்வேத பயிற்சியாளர் பரிந்துரைத்த ஆயுர்வேத மருந்தை பயன்படுத்தி பிரிட்டனின் இளவரசர் சார்லஸ் கொரோனாவில் இருந்து மீண்டதாக மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் கொரோனா தொற்று, நாட்டின் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. அதில் பிரிட்டன் இளவரசர் சார்லஸூம் ஒருவர். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்.

இந்நிலையில், பிரிட்டன் இளவரசர் சார்லஸ் ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக் கொண்டு தான் குணமடைந்தார் என்று மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார். ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருந்துகள் கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்க எவ்வாறு உதவுகின்றன என்பதை இது காட்டுகிறது என அவர் தெரிவித்தார்.

மேலும், ‘பெங்களூரில் ‘சக்யா’ என்ற ஆயுர்வேத ரிசார்ட்டை நடத்தி வரும் ஒரு ஆயுர்வேத பயிற்சியாளர்தான் இளவரசர் சார்லஸூக்கு ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருந்தை அளித்துள்ளார். இதையடுத்து இளவரசர் சார்லஸ் முழுவதுமாக கொரோனா நோயில் இருந்து மீண்டுள்ளார்’ என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து, ‘மருந்துகளை விஞ்ஞான ரீதியாக சரிபார்க்கும் முன் பரிந்துரைக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை . அதனால் தான் இதை எப்போதும் தடுப்பு மருந்து என்று கூறுகிறோம். இந்த மருந்தில் பக்க விளைவுகள் எதுவும் இல்லை. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்தாக ஹோமியோபதி மருந்துகளைப் பயன்படுத்திய பலர் உள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைத் தடுக்க ஹோமியோபதி பயன்படுத்தப்படலாம் என்று அமைச்சகம் முன்னர் ஒரு ஆலோசனையை வெளியிட்டது. கொரோனா வைரஸுக்கு எதிரான பாரம்பரிய மருந்துகள் குறித்து மற்ற நாடுகளிலும் பேசப்பட்டு வருகிறது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் சீனா பாரம்பரிய மருத்துவத்தை (டி.சி.எம்) பயன்படுத்தியது. டி.சி.எம் என்பது 3,000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான சிகிச்சை முறையாகும். எனவே, பாரம்பரிய மருந்துகளை பயன்படுத்தி கொரோனாவை ஒழிக்க முடியும்’ என்று கூறியுள்ளார்.