Januar 31, 2023

தமிழர்களுக்கு முதலமைச்சர் தேவை என்றால் அவர்களே முடிவு செய்யட்டும்!

தமிழர்களுக்கு முதலமைச்சர் தேவை என்றால் அவர்களே முடிவு செய்யட்டும்!

தமிழ் மக்களுக்கு ஒரு முதலமைச்சர் தேவை என்றால் தமிழ் மக்கள் முடிவு செய்யட்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நவம்பர் 16 ம் திகதி உங்களுக்கு மிகமுக்கியமான நாள். நாங்கள் 2015 ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி ஒரு முக புரட்சியை ஏற்படுத்தினோம். அந்த யுக புரட்சியை முன்கொண்டு சென்று இளைஞர்களுக்கு சிறந்த எதிகாலத்தை ஏற்படுத்துவதுதான் எமது நோக்கம். அதை செயற்படுத்தி கொடுப்பதை தான் நாங்கள் செய்யவேண்டி இருக்கிறது.

இளைஞர் இந்த அபிவிருத்தியோடு தொடர்ந்தும் பயணிக்க போகின்றோம் என்பதை முடிவெடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

அன்று நாங்கள் ராஜபக்ஸவின் சர்வாதிகாரம், ஏகாதிபத்தியத்தை, இனவாதத்திற்கு பதிலாக நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டிருக்கின்றோம். நாட்டில் அபிவிருத்தியை ஆதரிக்கின்றோம்.

நவம்பர் 16ம் திகதி நாங்கள் இதனை முன்கொண்டு செல்ல போகிறோமா அல்லது இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தை இருளில் தள்ள போகிறோமா என முடிவு செய்ய வேண்டியுள்ளது.

எங்களது கட்சியை ஆரம்பித்த டி.எஸ்.சேனாநாயக்கவை கருப்பு மாபெரும் சிங்களவன் என்று சொன்னார்கள். அவர் இலங்கை மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டி இலங்கை நாட்டின் அடையாளமாக இருக்கின்றார். அந்த பாதையிலே நாங்கள் பயணிக்கின்றோம். ராஜபக்ஸவும் மொட்டும் வேறு வழியில் பயணிக்கிறது. நாங்கள் செய்திருக்கும் பணிகளுக்கு பதிலளிக்க முடியாமல் இனவாதத்தை பேசிக்கொண்டு திரிகிறார்கள்.

கிழக்கு மாகாணத்தை முஸ்லிகளுக்கு கொடுக்க போகிறேன், ஆகவே தமிழர்களுக்கு இடம் கிடையாது எனவே தான் நான் பிள்ளையானை விடுதலை செய்யப்போகிறேன் என ராஜபக்ஸ சொல்கின்றார். தமிழ் மக்களுக்கு ஒரு முதலமைச்சர் தேவை என்றால் தமிழ் மக்கள் முடிவு செய்யட்டும்.

கிழக்கு மாகாணத்தில் வாழும் சகல இன மக்களும் தங்கள் இன சார்பான ஒரு முதலமைச்சரை தெரிவு செய்யும் அதிகாரம் இருக்கிறது. கிழக்கு மாகாண மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வதால் முதலமைச்சரை தெரிவு செய்யும் பணியை அந்த மக்களிடமே விட்டு விடுகிறேன். கோத்தபாய ராஜபக்ஸவுக்கோ, எனக்கோ இங்கு வாக்கு கிடையாது. இங்கு வாக்களிப்பவர்கள் அதனை தீர்மானிக்கட்டும்.

தெற்கிலே போய் நான் தமிழ் கட்சிகளுடன் இரகசிய ஒப்பந்தங்களை செய்துள்ளதாக இனவாதத்தை பரப்புகின்றனர். உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் பின்னரும் அதைத்தான் செய்தார்கள். இன்றும் அதனையே செய்கிறார்கள்.

இவர்களுடன் நல்லிணக்கத்தை செய்ய முடியுமா. அவர்களுக்கு தேவை வாக்குகள் மட்டுமே. நாடு எவ்வாறு போனாலும் பரவாயில்லை. இவர்களுக்கு எதிராக நவம்பர் 16ம் திகதி அன்னம் சின்னதிற்கு வாக்களிக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

வடகிழக்கு, மொனராகலை மாவட்டங்களில் யுத்தம் இடம்பெற்ற பின்னர் பல அபிவிருத்தியடையாமல் இருக்கிறது. இவற்றை நாங்கள் அபிவிருத்தி செய்ய இருக்கின்றோம். இவற்றை அபிவிருத்தி செய்ய அதிகளவு நிதியை ஒதுக்கி தருமாறு சர்வதேசத்திடம் கோரி நிற்கின்றேன். அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதலீட்டு வலயத்தை உருவாக்குவோம்.

மட்டக்களப்பு விமான நிலைத்தை அமைத்து சர்வதேச விமான சேவையை அமைப்பதற்கு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். இவ்வாறான உலர் வலயத்தில் விவசாயத்தை குறிப்பாக நெல் உற்பத்தியை நவீனப்படுத்தி உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுத்திருகின்றோம்.

சுற்றுலா துறையை ஊக்குவிப்பு, வாகரை தொடக்கம் அறுகம்பை வரை விருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். தொழில்நுட்ப கல்லூரி, கைத்தொழில் பயிற்சி நிலையங்களை அதிகரிப்பது தான் எமது அபிவிருத்தியாக இப் பிரதேசத்தில் இடம்பெறும் என்றார்.