எம்ஜிஆர்க்கு இருந்த தமிழ் அக்கறை இப்போ யாருக்கும் இல்லை;

எம்ஜிஆர்க்கு இருந்த தமிழ் அக்கறை தற்கால ஜெயலலிதா, கருணாநிதி , தற்போதைய ஆட்சியாளர்களிடம் இருக்கவில்லை என நாம்தமிழர் கட்சி சீமான் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணலில்:-
கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள் இங்கே தமிழகத்திலேயே காட்சிப்படுத்தப்பட்டது வரவேற்கத்தக்கது. முன்பு பெங்களூரில்தான் கண்காட்சிக்கு வைப்பார்கள். தற்போது இங்கேயே அதனை செய்வது பாராட்டுக்குரியது. ஏனென்றால் வருங்கால சந்ததியினருக்கும் தொல்பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்.
ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் என இந்த மூன்றும் அத்தியாவசியமானது. இந்த மூன்றையும் அரசு கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்காத பட்சத்தில் நாடு குற்ற சமூகமாக மாறும் என்று குன்றக்குடி அடிகளார் சொல்கிறார். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத நாட்டை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணித்தாலும் கட்டுப்படுத்த முடியாது.
ஆந்திரா, கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்களில் அவர்களது மாநில மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். நேற்று தமிழ்நாடு தினவிழா தமிழகத்தில் கொண்டாடப்பட்டது வரவேற்கத்தக்கது. இந்த விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட வேண்டும்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் கொண்டு வந்த சட்டத்தில் வழிகாட்டி பலகை, விளம்பரம் போர்டு, இடத்தை குறிக்கும் போர்டு ஆகியவற்றில் தாய் மொழியான தமிழ் மொழியை முதலில் பெரிய எழுத்தாகவும், அதற்கு அடுத்தபடியாக ஒரு மடங்கு பொதுமொழி இருக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் இந்த சட்டத்தை கருணாநிதி ,ஜெயலலிதா ஆகியோர் நிறைவேற்றவில்லை. தற்போது ஆட்சி நடத்திவரும் ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளவில்லை.
தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் ஜாதி பெயரை சொல்லி கொண்டாடுவதை விட நம் இனத்தின் பேரரசர் என்று கொண்டாட வேண்டும். அப்போது தான் நம் தமிழினத்தின் ஒற்றுமை சிறந்து விளங்கும் எனக் கூறினார்.