Dezember 4, 2022

யாழ் வடமராட்சி பகுதியில் உள்ள துன்னாலை கிராமத்திற்கு அண்மையில் வல்லிபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ள ஆலயம்

இது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கடற்கரையோரமாக அமைந்துள்ள ஒரு ஊர்தான் வல்லிபுரம் பகுதியாகும்.

வல்லி நாச்சியார் என்றொரு பெண் இருந்தாளாம். அவள் கற்கோளம் கடலில் படகில் ஏறி கடலுள் சென்ற போது மீன் ஒன்று துள்ளி விழுந்து அவள் மடியில் விழுந்ததாம். மீனானது சங்கு சக்ரம் உடையதாகக் காட்சி அளித்தது. அம் மீன் சிறீ சக்கரம் ஒன்றை இவளுக்கு அளித்து மறைந்தது. அச்சக்கர வடிவத்தை ஆலயத்தில் வைத்து வழிபட்டு வந்தாள். அவ்வாலயமே வல்லிபுர ஆழ்வார் என அழைக்கப்படுகிறது எனவும் நம்புகிறார்கள்.

மூலஸ்தானத்தில் சிறீசக்கரம் வழிபடப்பட்டு வருகிறது. இப்பொழுது மிகவும் பெரிய ஆலயமாகக் கட்டப்பட்டுள்ளது. மூன்று வீதிகள் அமைந்துள்ள பாரிய ஆலயமாகும். வாயிற் கோபுரமும் பெரியது. ஏழுநிலைகளைக் கொண்ட இந்த ராஜகோபுரம் புராணக் கதைகளைக் கூறும் சிற்பங்களுடன் எழுப்பப் பட்டுள்ளது.

வல்லிபுர ஆழ்வாரை வழிபடமுன் வீதிக்கு எதிர்ப்புறம் அமைந்திருக்கும் பிள்ளையார் கோவிலைத் தர்சித்துச் செல்வதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். பிள்ளையார் கோவிலின் முன் பகுதியில் ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருக்கிறார் இந்தக் குட்டிப் பிள்ளையார். பிள்ளையாருக்குக் காவல் இருக்கிறாரா அனுமார்?

பிள்ளையார் கோயிலின் பின் புறமாக கேணிஇருக்கிறது. இதில் நீராடி கோயிலுக்குச் செல்வார்கள். கேணிக்குள் இறங்கி நீராடுவதில்லை. வெளியே நின்று வாளிகளால் நீரெடுத்து நீராடுவர். விசேடதினங்களில் பெரும் கூட்டமாய் மக்கள் நீராடுவதைக் காணலாம்.

யாழ்பாணத்தில் உள்ள கோவில்களில் எல்லாம் சந்தனமே பிரசாதமாக வழங்கப்படுகையில் இங்கு மாத்திரமே வைஷ்ணவ பாரம்பரியப்படி நாமம் வழங்கப்படுகிறது. இவ்விடத்தின் மேற்குப் புறமாகக் கிடைக்கும் வெண்களியே நாமமாக வழங்கப்படுகிறது,