Dezember 5, 2022

உலகத் தமிழர் கற்கவேண்டிய பாடம் !

பிஜித் தீவில் தமிழ் தெரியாத தமிழர் –

பிஜித் தமிழரிடம் உலகத் தமிழர் கற்கவேண்டிய பாடம் !

அவுஸ்திரேலியாவுக்குக் கிழக்கே 4644 கிமீ தொலைவில் காணப்படும் 300க்கு மேற்பட்ட தீவுகள் பிஜித் தீவுகள் எனப்படுகின்றன. கனடா அமெரிகர்கர்களுக்கு கியூபா போல அவுஸ்திரேலிய நியூசிலந்து மக்களின் விடுமுறைத்தீவென்றால் அது பிஜித் தீவுதான்.

இந்தத்தீவுக்கு செல்லவேண்டுமென்றொரு எண்ணம் எனக்கு நீண்டநாட்களாக இருந்தது காரணம் இங்கு மூன்றுதலைமுறையாக வாழும் தமிழர்களையும் அவர்களின் வாழ்க்கைமுறைகளையும் பார்க்கவேண்டும் என்பதே.

தமிழர்களின் புலப்பெயர்வு கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகாலப் பழமை வாய்ந்தது. தொடக்கக் காலங்களில் தமிழர்களின் புலப்பெயர்வுகள் பெரிதும் தற்காலிகப் பெயர்வுகளாகவே இருந்தன. பண்டமாற்று, வணிகம் மற்றும் பொருளீட்டல் தொடர்பாக உலகின் பல பகுதிகளுக்கும் நிலவழி மற்றும் நீர்வழியாகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து செல்லும் வழக்கம் தொன்றுதொட்டு நிலவிவந்தது. முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை என்ற தொல்காப்பிய நூற்பா தமிழர்களின் கடல்பயணம் பற்றிய அரிய குறிப்பு. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது தமிழர்களின் வாய்மொழி. கடல்பயணம் செய்யும் கலையில் தமிழர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதற்கு மொழிவழிச் சான்றுகள் பலஉள ( முனைவர் இளங்கோவின் பிஜித்தமிழர்கள் ஆய்வுக்கட்டுரையிலிருந்து )

பிஜித் தமிழர்களின் பூர்வீகம் வரலாறு என்ன என்பதை அறியும் ஆவலில் இணையத்திலும் விக்கிபீடியாவிலும் சேகரித்த பல தகவல்களில் மிகச் சிலவற்றைக் கீழே தருகிறேன்.:

1874ம் ஆண்டு பிஜித் தீவு பிரிட்டிஷாரின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் இங்குள்ள கரும்புத்தோட்டங்களில் வேலைக்காக 65000 இந்தியத்தொழிலாளர்கள் கப்பல்களில் கொண்டுவரப்பட்டார்கள் . இவர்களில் தமிழர்களும் அடங்குவர். 1903 இல் கொண்டுவரப்பட்ட 589 தென் இந்தியர்களில் 164 பேர் தமிழர்களாக இருந்தனர் 4 ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில் வேலையாட்களின் தொகை அமைந்திருந்தது. இங்குவந்ததும் அந்த மக்கள் கொத்தடிமைகளாக நடாத்தப்பட்டார்கள் துன்புறுத்தப்பட்டார்கள் . தங்களுக்கு ஏற்படுத்தப்படும் அநியாயத்தைப்பற்றிக் கேட்கும் ஆண்களும் பெண்களும் நெஞ்சில் பலமாக அடிக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார்கள் கோபப்பட்டு வன்முறையில் இறங்கியவர்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டது பலர் அநியாயமாக கொல்லப்பட்டார்கள். தமக்கு நடக்கும் அநியாயத்துக்கு முடிவு தெரியாமலும் தீர்வு இல்லாமலும் திரும்பித் தமது சொந்தநாட்டுக்குச் செல்ல முடியாமலும் அந்த மக்கள்பட்ட வேதனை எழுத்தில் வடிக்க முடியாது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

5 வருட ஒப்பந்தத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் ஒப்பந்தம் முடிவுற்றதும் காடுகளைவெட்டி விவசாயம் செய்தும் அந்தக் கம்பனிகளிலேயே தொடர்ந்து கஷ்டப்பட்டு வேலை செய்தும் வந்தவேளையில் 1915மாண்டு பிஜிக்கு வந்த தீனபந்து ஆண்ட்ரூஸ் என்ற காந்தியின் நண்பர் அந்த மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனமிரங்கி பிரிட்டிஷ் அரசுடன் பேசி கொத்தடிமைச் சட்டத்தை இல்லாமலாக்கி அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்தார்.

காலப்போக்கில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் வட இந்தியர்களின் ஆதிக்கம் ஏற்பட்டு தமிழ் மக்கள் தமது தாய்மொழியான தமிழைப் பேசுவதையும் அதை தமது அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்வதற்கும் பல தடைகள் போடப்பட்டன. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பதும் தமிழருடன் தமிழில் பேசுவதும் எந்தவித நன்மையையும் பெற்றுத்தராது மாறாக அவமானத்தையே அது பெற்றுத்தரும் என்ற தாழ்வுமனநிலைக்குள் திட்டமிட்டுக் கொண்டுசேர்க்கப்பட்ட அப்பாவித்தமிழர்கள் தமது அடுத்த சந்ததிக்கு தமிழைக் கொண்டுசேர்க்காமல் இந்தியிலேயே பேச எழுதத்தொடங்கினார்கள் இதன் விளைவாக தற்போதைய இளம் தமிழ் சமூகத்துக்கு தமிழ் எழுதப்படிக்கவோ பேசவோ தெரியாது.

தற்போது தமிழர்களின் எண்ணிக்கை மூன்றரை லட்சம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர் ஆனால் அதிர்ச்சியூட்டும் விதமாக 7000 பேர் மட்டுமே தங்களின் தாய்மொழி தமிழ் எனத் தெரிவித்துள்ளனர்.

மிக வேதனையளிக்கும் இந்தச் செய்தி புலம்பெயர்நாடுகளிலுள்ள எம் ஒவ்வொருவரையும் சிந்திக்கத் தூண்டும் செய்தியாகும். இதே நிலைமைக்கு எம் சந்ததிகள் வரக்கூடாது என்பதற்கான முன்நடவடிக்கை மிக அவசியம்.

இங்குள்ள தமிழர்கள் தமிழை மறந்து போனாலும் தம் மதத்தை மறக்கவில்லை. பல்லாண்டுகளுக்கு முன்னே அவர்கள் கட்டிய சைவக் கோயிலொன்று இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. அங்கு நிவாகத்திலீடுபட்டுக்கொண்டிருந்த பெரியவர் ஒருவரிடத்தில் தமிழில் பேச்சுக்கொடுத்தேன் என்ன ஆச்சரியம் மிக நன்றாகத் தமிழ் பேசினார். தனக்கு 70 வயது என்றும் வயதுக்காரர்கள் இன்றும் தமிழ் பேசுகிறார்கள் என்றார். கோயிலுக்குள் சென்று பார்த்தேன் தமிழனின் திடமான வேலைப்பாடு தெரிகிறது, ஆனால் „ஓம் “ என்பதைத் தவிர வேறெங்கும் தமிழ் மொழியைக் காணமுடியவில்லை ஆங்கிலத்தில் தமிழை எழுதியுள்ளார்கள்.

தமிழர் மத்தியில் வேற்று மொழிகளின் திட்டமிட்ட ஆதிக்கமும் ஆங்கிலத்துக்கு ஏற்படுத்தப்பட்டும் கவர்ச்சியும் தமிழ் மொழியின் இருப்பைக்கேள்விக்கு உள்ளாக்கப்போகிறது என்ற பயம் பல வருடங்களாக தமிழ் அறிஞர்கள் மத்தியில் இருந்துவருகிறது, இது தேவையற்ற பயம் என நினைத்தவர்களில் நானும் ஒருவன் ஆனால் தாய்மொழி தமிழைப்பற்றியே தெரிந்திராத பிஜித் தமிழர்களின் நிலையைப் பார்த்தபின் இப்போது அப்படி நினைக்கமுடியவில்லை.

பி.கு.

புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் இளங்கோ எழுதிய பிஜித் தமிழர்கள் கற்கத்தவறிய பாடங்களும் உலகத் தமிழர்கற்கவேண்டிய பாடங்களும் என்ற அருமையானஆய்வுக்கட்டுரையைப் படிக்க விரும்புவோர் கீழுள்ள லிங்கை அழுத்திப் படியுங்கள்.

http://nailango.blogspot.com/2007/09/blog-post.html?m=1