Dezember 4, 2022

கனடாவிற்கு தமிழர்களை ஏற்றிக் கொண்டு சென்ற எம்.வி. சன் சீ கப்பலை உடைக்கிறது கனடா!

நூற்றுக்கணக்கான இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிக் கொண்டு கனடாவிற்கு சென்ற எம்.வி. சன் சீ (MV Sun Sea) கப்பல் உடைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபெடரல் அரசாங்கம் அந்த கப்பலை உடைப்பதற்காக 4 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.

இலங்கையின் யுத்தம் முடிந்ததன் பின்னர், பலர் நாட்டை விட்டு வெளியேறினர். ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த நிலையில், 2010ம் ஆண்டு கனடாவிற்கு ஒரு குழு சென்றது.

தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் புறப்பட்ட சன் சீ கப்பல், கனடாவின் வான்கூவர் தீவை அடைந்தது. அதன் பின்னர் பல ஆண்டுகளாக பிரிட்டிஷ் கொலம்பியாவிலேயே கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கப்பலுக்கு யாரும் உரிமை கோராத நிலையில், அது பின்னர் கனேடிய எல்லை பாதுகாப்பு முகவரகத்தின் சொத்தாக மாறியது.

52 மீற்றர் நீளம் கொண்ட அந்த கப்பலை கொள்வனவு செய்வதற்கு யாரும் முன்வராததால், அதை உடைப்பதென கனடா அரசு தீர்மானத்தது.

ஆனால் அதை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. 2016ம் ஆண்டு ஜனவரி மாதம், அந்த கப்பலில் ஆஸ்பஸ்டாஸ் பாதரசம் உட்பட பல நச்சுப்பொருட்கள் இருப்பதாக சோதனை நடவடிக்கையொன்றின் போது கண்டறியப்பட்டது.

அத்துடன் அந்த கப்பலை பராமரித்து பாதுகாப்பதற்காக ஒட்டாவா நிர்வாகத்திற்கு சுமார் 970,000 டொலர்கள் செலவு ஏற்பட்டது. இந்த நிலையில், ஜூலை மாதம் 12ம் திகதி ஃபெடரல் அரசு அந்த கப்பலை உடைப்பதற்காக 4,151,070.39 டொலர்கள் ஒதுக்கியது.

அந்த கப்பல் கனேடிய சட்டங்களுக்கு உட்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதகமில்லாத வகையில் உடைக்கப்படலாம், மொத்தமாக ஒதுக்கப்படலாம் அல்லது மறு சுழற்சிக்கு உட்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.