தமது கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானது அல்ல என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வடக்கின் முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷவை, அவரது கட்சியின் தலைமையகத்துக்குச் சென்று சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்து இரகசிய பேச்சுக்களை நடத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர், “பசில் ராஜபக்ஷவை இறுதியாயாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே சந்தித்தேன். அவருக்கும் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. அவரைச் சந்திக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக எதிர்க்கட்சியுடன் நான் இணைந்துகொள்வதாக காட்டிக்கொள்வதற்காக சதி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. நான் பசில் ராஜபக்ஷவை சென்று சந்தித்தாக கூறப்படுவது முற்றிலும் பொய்யானது.

நான் எனது கட்சியை பலப்படுத்துவதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். எனது கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான அணி என்று கூறமுடியாது.

நாங்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டும். கூட்டமைப்பு எந்த காரணங்களுக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்டதோ, அதன் அடிப்படையில் அவர்கள் நடந்துகொள்ளவில்லை.

இதன் காரணமாக அடிப்படை கொள்கை ரீதியாக ஒத்துச்செல்லும் ஒரு அணிக்கு நான் தலைமை தாங்குகின்றேன் என்றே கூறமுடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.