Dezember 4, 2022

நல்லைக் கந்தன் பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள செய்தி!!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் இம்முறை வருடாந்த உற்சவத்தின் போது தேர் வெளி வீதி உலா வராதென ஆலய நிர்வாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தற்கொலைத் தாக்குதலையடுத்து ஏற்பட்டுள்ள அச்சநிலைமை காரணமாக குறித்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

ஆலய வெளிவீதியில் தேர் வீதியுலா வராத போதிலும் ஆலயத்தின் உள்வீதியில் சிறிய தேர் உலா வருமெனத் தெரியவருகிறது.

அத்துடன் ஆலயத்தின் நான்கு வாசல்களிலும் வைத்து அடையாள அட்டை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பக்தர்கள் ஆலயத்தினுள் அனுமதிக்கப்படுவரெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமாத்திரமன்றி இவ்வருட மஹோற்சவப் பெருவிழாவில் ஆலயத்திற்கு அருகில் வியாபார நிலையங்களை அமைக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் என்றாலே அனைவருக்கும் உடனடியாக ஞாபகத்துக்கு வரும் வழிபாட்டுச் சின்னமாக நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் விளங்குகிறது. இவ்வாலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இடம்பெறும் 25 தினங்களும் நல்லூர் ஆலயச் சூழல் மாத்திரமன்றி அயற்பகுதிகளும் களைகட்டியிருக்கும். அதுமாத்திரமன்றி நல்லூர்க் கந்தசுவாமி தேர்த் திருவிழாவையொட்டி யாழ்.குடாநாட்டின் பல பாகங்களிருந்து மாத்திரமல்லாமல்  மட்டுமல்லாமல் தூரவிடங்களிலிருந்தும், புலம்பெயர் தேசங்களிருந்தும் கூட வருடம் தோறும் பெரும்  எண்ணிக்கையான அடியவர்கள் ஆலயத்திற்கு வருகை தருவது வழமை. இந்நிலையில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் இம்முறை தேர் வீதியுலா வருவது இடம்பெறாது என வெளியான தகவல் உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களுக்கும், சைவமக்களுக்கும் அதிர்ச்சி தரும் செய்தியாக மாறியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

{எஸ்.ரவி-}