November 27, 2022

10 வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு – 2019 ( சிக்காகோ )

சிக்காகோ தமிழ் சங்கத்தின் பொன்விழா மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முப்பத்திரண்டாவது வருட நிறைவு விழாவுடன், 10 வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடும் இணைத்து முப்பெரும் விழாவாக கடந்த 04 சூலை 2019 ஆரம்பித்து 07 சூலை 2019 வரை அமெரிக்காவின் புகழ்பெற்ற, இலினொய்ஸ் (Illinois) மாநிலத்தில் உள்ள பழமைவாய்ந்த சிக்காகோ (Chicago) நகரின் schaumburg convention center எனும் மிகப்பெரிய பண்பாட்டு மண்டபத்தில் பல சவால்களை எதிர்கொண்டு, அரங்கு நிறைந்த உலகத் தமிழர் மத்தியில் இனிதே நிறைவு பெற்றது.

முதல் இரண்டு நாட்களும் பொன்விழா நிகழ்வாக கலைநிகழ்வுகள், போட்டி நிகழ்வுகள் என கடந்து, இறுதி இரண்டு நாட்களும் தமிழாய்வு மாநாடாக சிறப்புப் பெற்றது. அவ்விரு நாட்களில் 10 வது தமிழாய்வுக்கு எனக் கிடைக்கப் பெற்றிருந்த பலநூறு ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து, தேர்வு செய்யப்பட்ட சுமார் 80 ஆய்வுக்கட்டுரைகள் குறித்த ஆய்வாளர்களால் சபையோருக்கு சமர்ப்பிக்கப்பட்டமையானது சிறப்பம்சமாகும். இதற்காக உலகெங்கிலுமிருந்து பல தமிழறிஞர் பெருமக்களும், கலைஞர்களும், பார்வையாளர்களும் அதனோடிணைந்து அமெரிக்க வாழ் தமிழர்களும் கலந்து விழாவினை ஆக்கபூர்வமாக்கியிருந்தனர்.

தமிழின் பழம்பெருமைகளையும், பண்பாட்டு விழுமியங்களையும் சந்ததிக்கும், உலக மக்களுக்கும் எடுத்துச் சொல்ல, வரலாற்றுடன் உலகத்த தமிழர்கள் நிமிர்ந்து நிற்கவும், விழிப்புணர்வு ஊட்டவும் இலங்கையின் வடக்கு ஊர்காவற்றுறையின் கரம்பொன் கிராமத்தில் பிறப்பெடுத்த தனிநாயகம் அடிகள் என்கிற வண. சேவியர் தனிநாயகம் (Rev. Xavier S. Thani Nayagam) அவர்களால் 1964 இல் உருவாக்கப் பட்டதுதான் ” உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்” International Association for Tamil Research (IATR) அந்த நிறுவனத்தின் முதல் உலகத்தமிழாராய்ச்சி மாநாடு 1966 இல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இடம்பெற்றது. இதன் தொடர்ச்சியாகத்தான் நான்காவது மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றதும், அங்கே படுகொலைகள் இடம்பெற்றதும் வரலாறு மட்டுமல்ல, ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள பேரினவாதத்தின் முகத்திரைகள் வெளியுலகம் காண ஆரம்பித்த சம்பவங்களில் அதுவும் ஒன்று. இப்படி அழிக்கமுடியாத சில வரலாறுகளைத் தண்டி கடந்து வந்து, 10 வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2019 இல் இடம்பெற்று முடிந்திருக்கிறது.

ஆய்வரங்குகள் தொடங்கப் பட்ட நாளில் முனைவர் சிவசிதம்பரம் அவர்களின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து சில அறிஞர் பெருமக்களின் சிற்றுரைகளும் அறிமுக உரைகளும் உலகத் தமிழாராய்ச்சி மன்றத் தலைவர் தான் சிறீ. முனைவர் மாரிமுத்து மற்றும் ஆய்வுக்குழுத் தலைவர் புலவர், முனைவர் பிரான்சிசு சவரிமுத்து போன்றோரின் சிற்றுரைகளும் குறிப்பிடத்தக்கவை.

சிக்காகோ தமிழ்ச் சங்கத்தின் பொன்விழாவின் முக்கிய கருப்பொருளாக “கீழடி நம் தாய்மடி” என்ற வாசகத்தைத் தாங்கி நின்றதை அவதானிக்க முடிந்தது. கீழடியின் மாதிரி உருவமைப்புகளும் செய்து வைக்கப்பட்டிருந்ததுடன், இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு சிந்து சமவெளி நாகரீகத்தில் இருந்து என்பது மாறி தமிழகத்தின் வைகைக் கரை நாகரீகத்தில் இருந்து தொடங்குவதற்கான அத்தனை ஆதாரங்களும் கீழடியில் இருப்பதாக உலகத் தமிழ் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அது அமைந்திருந்தது.

அதையும் கடந்து, உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு ஆய்வரங்கு எங்கிலும் அதி பேசு பொருளாக “கீழடி” இருந்ததை அவதானிக்க முடிந்தது. கீழடி பற்றிய ஆய்வாளர்களின் பேச்சிலே ஒரு பெருமிதம் இருந்தாலும், இன்றைய இந்திய- தமிழக அரசியல் சூழ்நிலைகளின் தாக்கங்களால் ஏற்படும் இடையூறுகள் பற்றிய கவலைத் தொனிகளும் ஆங்காங்கே கலந்திருந்தன.

பெரும்பாலான ஆய்வு அமர்வுகளில் கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் தொடர்பில் தொட்டுக் காட்டப்பட்டிருந்ததுடன், அகழாய்வில் கிடைக்கப் பெற்ற தடயங்களையும், சங்ககால இலக்கிய பாடல் குறிப்புகளையும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் அதிகம் இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.

இந்திய வரலாறு தொடர்பில் 2013 டிசம்பரில் BBC யுடன் இணைந்த ஒரு ஆவணப்படத்தில் இந்திய மண்ணின் ஆதி மனிதனைத் தேடிய ஒரு பகுதியில் தென் தமிழகத்தில் விருமாண்டி என்கின்ற ஒரு நபரை இனம் கண்டு, அவரது மரபணு எழுபதாயிரம் வருடங்கள் பழமையான தூய மரபணு என்றும், மனித இனம் உருவாகி நகரத் தொடங்கிய காலத்து மரபணு என்றும் அந்த ஆவணப் படத்தில் Dr. Pitchappan Ramaswamy அவர்கள் நிறுவியிருந்தார். அதனைத் தொடர்ந்து செய்ப்பப்பட்ட ஆய்வுகள் தொடர்பிலும், “மரபணு” மூலமாக தமிழரின் வேரைத் தேடுகிற ஆய்வுகள் பேராசிரியர் முனைவர் பிச்சப்பன் ராமசுவாமி அவர்களாலும், National Geographic இதழின் மரபணுத்துறை இயக்குனர் Dr. Spencer Wells அவர்களாலும் மாநாட்டில் அமர்வுகள் நிகழ்த்தப்பட்டமை முக்கியமானது. கவனிக்கப்பட வேண்டிய அமர்வாகவும் இருந்தது.

மேலும் ஒரு விடயமாக “குமரிக் கண்டம்” தொடர்பில் சிலபல ஆய்வுகள் இந்த மாநாட்டில் பரவலாக அவதானிக்க முடிந்தது. அதாவது இதுவரை காலமும் சங்க இலக்கியங்கள் என்கின்ற ஒன்றை மட்டும் வைத்துக் குமரிக்கண்டத்தை நிறுவ முடியாது என்றும், அது கற்பனையே என்றும் பரவலாகச் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சங்க இலக்கியம், தொல்லியல், புவியியல் மற்றும் செய்மதி உதவிகளுடன் குமரிக்கண்ட நிலப்பரப்பும், அங்கே காணப்பட்ட ஆற்றுப் படுக்கையின் எச்சங்களையும் இனங்காண முடிகின்றது என்றும், முன்னர் சொல்லப்பட்டது போல குமரிமுனை, மடகஸ்கார், அவுஸ்திரேலியா தொட்டு அந்த நிலப்பரப்பு இருப்பதற்கான கடலடி நில அமைவு ஆதாரங்கள் இல்லை. ஆனாலும் குமரிமுனை மாலைதீவு, இலங்கை சூழ கடலடி ஆதாரங்கள் சங்ககால இலக்கியங்கள் சொல்வது போல அசலாக இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்கள். ஏற்கனவே உலகப் புவியியல் வரலாற்று அறிஞர்களுடன் ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாகவும், இன்னும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த நிலம் தொடர்பாக இன்னும் இன்னும் ஆய்வுகள் ஆழமாக எடுத்துச் செல்லப்பட இருக்கின்றது என்ற நம்பிக்கைகள் நிறைவாக ஆய்வரங்குகள் காணப்பட்டமை விசேடமானது.

அதிலும் சிங்கப்பூர், மலேசியா மற்றும் உலகளாவிய ஆய்வாளர்கள் தமிழக ஆய்வாளர்கள் இணைந்து செயற்படுகிறார்கள் என்பது மகிழ்ச்சியே. “குமரி” என்பதுடன் சேர்ந்து தற்போது கரையிலிருந்து 30 கிமீ தூரத்தில் கடலில் மூழ்கியிருக்கும் “பூம்புகார்” கடலாய்வுகளும் அதனோடிணைந்து நடைபெறுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். அவை தொடர்பான கருத்தரங்குகளை Dr. Francis Muthu, Dr. SM Ramasamy போன்றோர் நிகழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்கள் இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டும் கட்டுக்கரைத் தொல்லியல் அகழாய்வுகள் தொடர்பில் ஆய்வரங்கை நிகழ்த்தியிருந்தார். 2018 க்குப் பின்னரே இந்த அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதனடிப்படையிலேயே அந்த தொல்லியல் சான்றுகள் சங்க காலத்துக்கும் முற்பட்ட பெருங்கற்காலப் பண்பாட்டுக்கு எடுத்துச் செல்கின்றதை நிறுவினார். நாகர் என்கின்ற குழுவுக்கு உடையதாக அந்த சின்னங்கள் இருக்கலாம் என விளக்கியிருந்தார். மேலும் கண்டு பிடிக்கப்பட்ட பானை ஒட்டு எழுத்துக்கள், குறியீடுகள் தொடர்பிலும் தமிழக சான்றுகளுடனும் ஒப்பிட்டு ஆய்வை செய்திருந்தார். ஆய்வாளரின் பெருமைக்குரிய ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான Dr. K. Rajan அவர்களும் உடன் இருந்து வழிகாட்டியமையும் சிறப்பம்சமாகும். தமிழரின் பூர்வீக வரலாற்றுக்கு இட்டுச் செல்லும் இந்த ஆதாரங்கள் தொடர்பாக இலங்கை அரசின் அசமந்தப் போக்கினை அவரின் பேச்சில் காண முடிந்தது. விஜயனது வருகையோடு தொடங்கும் இலங்கையின் வரலாறானது இப்படியான தொடர்ச்சியான அகழாய்வுகளால், மறுசீரமைப்புக்குள் கொண்டுவரலாம் என்பது ஆய்வரங்கின் முடிவாக விளங்கிக் கொள்ளப்பட்டது.

மேற்கூறப்பட்ட தொல்லியல் ஆய்வரங்குகள் இப்படியிருக்க சங்க கால தமிழ் இலக்கியங்களில் இருந்து பல ஆய்வுகள் பிரித்துப் பிரித்து நுணுக்கமாக தலைப்புகளை தேர்நதெடுத்து ஆய்வாளர்களால் நிகழ்த்தப்பட்டிருந்தன. அதிலும் குறிப்பாக பழங்கால கல்வி நிலை, வேளாண்மையில் நீர் மேம்பாடு, உளநோய் மருத்துவ மேலாண்மை, தொன்மை அறிவியல் கோட்பாடு, நவீன சட்டமும் தமிழ் இலக்கியமும், சங்க இலக்கியத்தில் எதிர்கால உலக கோட்பாடுகள், இலக்கியத்தில் மருத்துவம் இப்படிப் பல ஆய்வுக் களங்கள் சங்ககால இலக்கியங்களுக்குள் இருந்து எடுத்து ஆய்வு செய்யப்பட்டிருந்தன.

அதனோடு தொல்காப்பியம், தமிழ் இலக்கணம், இலக்கியம் என்று இருந்தாலும் “திருக்குறள்” என்ற இணைந்த தலைப்புகளில் பல ஆய்வரங்குகள் இடம்பெற்றமை அவதானிக்க முடிந்தது. அதிகமாக திருக்குறளை ஆய்வுக்குட்படுத்தியமை ஒரு நல்ல நிகழ்வாக பார்க்கமுடியும். ஏனெனில் தமிழரின் இருப்பு என்பது தத்துவங்களால் நிறையப் பெற்றது. அறம் என்பது அனைத்திலும், அனைவராலும் கடைப்பிடிக்கப் பட்டிருந்தது. சமயமானது, மதம் என்பதை விட தமிழன் அறத்துக்கே அதிக முக்கியத்தும் கொடுத்திருப்பதை இலக்கியங்கள் சுட்டுணர்த்துகிறது. ஆக திருக்குறள் இன்னும் தமிழருக்குள் ஆழமாக கொண்டுவரப்பட்ட வேண்டும் என்பது ஆய்வாளர்களின் உட்கருத்தாக தொனித்தது.

ஆவணப்பட இயக்குனர் R.R. Srinivasan அவர்களின் ஆதிச்சநல்லூர் தாமிரபரணி நாகரிகம் என்கின்ற ஆய்வு அமர்வு பலராலும் விரும்பி கவனிக்கப்பட்ட விடயமாக இருந்தது. காரணம் அவர் ஒரு தொல்லியல் ஆய்வாளர் அல்லாத பொழுதும் கூட ஒரு விடயத்தை அவரது பார்வையில் பார்க்கின்ற கோணம் என்பது சற்று வித்தியாசமாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருந்ததுதான் காரணமாகும்.

ஜெர்மனியில் இருந்து வருகை தந்திருந்த சர்வதேச தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவுனர் Dr. K. Subhashini அவர்களின் ஆய்வுக்களமும், இலங்கை தமிழக வரலாற்றாய்வாளர்களால் நிறையவே கருத்தில் எடுக்கப்பட வேண்டும் என்பதுபோல் தோற்றமளித்தது. ஐரோப்பிய ஆவணப் பாதுகாப்பகங்களில் உள்ள அரிய தமிழ் ஓலைச் சுவடிகளும், ஆவணங்களும் என்கின்ற தலைப்போடு அவரது ஆய்வுக்களம் அமைந்திருந்தது. அதாவது தெற்காசியா மீதான ஐரோப்பிய காலனித்துவ ஆட்சிக்காலங்களில் இலங்கை, தமிழகம் சார்ந்த பெருமளவான ஆவணங்கள், ஓலைச் சுவடிகள் அங்கே காணப்படுவதாகவும், கடந்த ஐநூறு வருட சமூக வாழ்க்கை அரசியல் பொருளாதார தரவுகளை ஆய்வு செய்யக்கூடிய காலமாக ஐரோப்பிய ஆவணக் காப்பகங்கள் காணப்படுகின்றன என்பதை நிலைநிறுத்தி ஆய்வை செய்திருந்தார். அதிலும் அவர் குறிப்பாக சொல்கிற ஆவணக் காப்பகங்களாக டென்மார்க் கோப்பன்கேகன் தேசிய ஆவணக் காப்பகம் மற்றும் அரச நூலகம், பிரான்ஸ் பாரிஸ் அரச நூலகம், ஹாலே பிராங்கே கல்வி நிறுவனம் போன்றவற்றை சுட்டிக் காட்டினார்.

ஐரோப்பாவில் ஓலைச் சுவடிகள் என்பதை திரு. நெல்லைக்கு கண்ணன் அவர்களும் அடிக்கடி வலியுறுத்துவதை காணமுடியும். இலங்கையின் சில பழைய வரலாற்று வரைபடங்கள், ஆவணங்கள் பல ஐரோப்பாவில் காணப்படுவதாக பல ஆண்டுகளுக்கு முன் இலங்கையிலும் சில அறிஞர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

இதனை விட பொது ஆய்வுக் களங்களில் தனிநாயகம் அடிகளார், தனித்த தமிழ் இயக்கம், சிந்து வெளி நாகரீகம், ஆசிவகம், தமிழ் பிராமி கல்வெட்டு எழுத்துக்கள் மற்றும் வாசிப்புகள், பரதக்கலை, நவீன உலகத்துக்கான கலைச் சொல் ஆய்வுகள், மலேசிய நாட்டுப் புறப் பாடல்கள், தமிழர் தொல்லியலில் மாட்டு வண்டிச் சக்கரம் என்று களங்கள் மிகப் பெரிதாக இருந்தன. அரங்குகள் செம்மையானதாக காணப்பட்டன.

உலகத்தின் நாடுகள் அனைத்திலும் புலம்பெயர் தமிழ் இலக்கியங்களுக்கு ஈழத் தமிழர்கள்தான் மூலக்காரணம் என்றாலும், இந்த ஆய்வு மாநாட்டிற்கு புலம்பெயர் ஈழத் தமிழர்கள் என்று எவரும் வருகை தராததும், அவர்களது கட்டுரைகள் என்று எதுவும் உள்வாங்கப்படாததும் கவலைக்குரியவை என்று வெளிப்படையாகவே மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் சிங்கப்பூரைச் சேர்ந்த முனைவர் சிறீ இலக்குமி அவர்கள் மிகவும் மனவருத்தத்தோடு பதிவுசெய்திருந்தார். அதனை மறுப்பதற்கும் இல்லை. புலம்பெயர் தமிழ் அறிஞர்கள் மொழியில், அறிவில், பணத்தில், எண்ணத்தில் கூட வறுமைப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

என்னதான் ஆய்வுகள் பெரிதாக, பயனுள்ளதாக இருந்தாலும் அவற்றுக்கு வழங்கப்பட்ட நேரம் இருபத்தைந்து நிமிடங்களே ஆகும். ஒவ்வொரு தலைப்பும், ஒவ்வொரு ஆய்வும் ஆகக்குறைந்தது ஒருநாள் ஆய்வு செய்யக் கூடியதான தன்நிறைந்த தரவுகள் ஆதாரங்களோடு ஒவ்வொரு ஆய்வாளர்களும் இருந்தமை காணமுடிந்தது. அவர்களது பேச்சிலே அவ்வளவு பெரிய ஆய்வுப் பரப்பை இருபத்தைந்து நிமிடங்களுக்குள் சொல்ல முடியாத இயலாமையும், அதனாலமைந்த கவலையையும் அவர்களிடம் காணமுடிந்தமை மனவருத்தத்துக்குரியவை. காலமும், இடமும், செலவும் இப்படியான குறுகிய பரப்புக்குள் அமைந்தமை தமிழுக்கும், ஆர்வலர்களுக்குமான நற்பேறின்மையே. வரும் காலங்களில் களங்களும், ஆய்வுப் பரப்புகளும் இன்னும் பெரிதாக இருக்க வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு தமிழை நேசிக்கின்ற அனைவருக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது.

தமிழுக்கான ஒரே ஊடகம் என முன்னிலைப்படுத்தும் உலகின் எந்த தமிழ் ஊடகமும், குறிப்பாக தமிழக ஊடக சந்தையில் இருந்து ஒரு ஊடகமும் இந்த நிகழ்வை முன்னிலைப்படுத்தி ஒளிபரப்பாதது மிகவும் வேதனையானதே! அதே நேரம் சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களாலும் அதிகம் கண்டுகொள்ளப்படவில்லை. இந்த மாபெரும் மாநாடு தொடர்பில் நிகழ்வு ஏற்பாட்டாளர்களால் விளம்பரங்கள் மேற்கொள்ளப்படவில்லையா? அல்லது இலாபம் கிடைக்காது என ஊடகங்கள் புறக்கணித்தனவா?

இருப்பினும், சமகாலத்தில் ஐக்கிய அமெரிக்காவின் குடிவரவு குடியகல்வு தொடர்பான கெடுபிடிகளுக்கு மத்தியிலும், அமெரிக்கர்களின் மனங்களில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் மாறுபாட்டிற்கிடையிலும், தமிழாராய்ச்சி நிகழ்வுகளை இவ்வளவு பிரமாண்டமாகவும், நேர்த்தியாகவும் செவ்வனே பொறுப்பேற்று ஒழுங்கமைத்த சிக்காகோ தமிழ்ச் சங்கம், வடமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றிற்கு, ஒன்றுபட்ட உலகத் தழிழர்கள் நன்றிக்கடன் பட்டிருக்கின்ற அதே வேளை, தலைநிமிர்ந்த தமிழுக்காக பெருமிதமும் அடைகிறார்கள்.

தமிழின் கனவாக, எங்கள் கனவாக இந்த உலகத்திசையில் தமிழுக்கென்று ஓரு சொந்த நிலம் தோன்றும் பொழுது, சுயமரியாதையும் சுதந்திரமும் அடங்கப்பெற்று, அடங்காத்தமிழாக உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடாத்த வேண்டும் என்பது கனவாகவே இருக்கிறது. கனவு ஒர்நாள் கருத்தரித்தால் மீண்டும் அங்கேயும் தமிழோடு சந்திக்கலாம். தமிழைக் கொண்டாடலாம்.