கதிர்காமத்தில் உருவெடுத்துள்ள புதிய சர்ச்சை!

கதிர்காமத்தில் உருவெடுத்துள்ள புதிய சர்ச்சை!

அவரவர் மதத்தில் அவரவர்களின் தேவைப்பாடுகளை உணர்ந்து சுதந்திரமாக செயப்படுவதற்கு உரிமையுண்டு என அகில இலங்கை இந்து குரு சபை தலைவரும், மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் செயலாளருமான சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா தெரிவித்துள்ளார்.

கதிர்காம கந்தனின் வருடாந்த உற்சவக் கொடியேற்றம் கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

பாரம்பரிய சைவ சம்பிரதாயத்தின் படி கதிர்காம முருகன் கோயிலில் முருகனின் சேவல் கொடி ஏற்றப்பட்டு, அங்கிருந்து தெய்வானை அம்மன் கோயிலுக்கு கொடி எடுத்து வரப்பட்டு, அங்கு கொடிக்கு பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்ட பின் பக்கீர் மடத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள கொடிக்கம்பத்தில் கட்டப்படும்.

கதிர்காமம் பற்றி எழுதப்பட்டுள்ள பழைய நூல்களில் இந்த விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இம்முறை கதிர்காமத்தில் வருடாந்த திருவிழா ஆரம்பிக்கும் போது கதிர்காமத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசலிலேயே கொடி ஏற்றப்பட்டுள்ளது என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், முருகன் கோயிலிலோ, தெய்வானை அம்மன் கோயிலிலோ கொடி ஏற்றப்படுவதில்லை. அதுவும் அரபு எழுத்துக்கள் எழுதப்பட்ட பச்சை நிறக் கொடியே பள்ளிவாசலிலே ஏற்றப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதேவேளை, முருகனின் செம்மஞ்சள் நிற சேவல் கொடிக்கு பதிலாக இஸ்லாமிய பச்சை நிற அரபுக்கொடி வந்தது எப்படி? பாரம்பரிய சைவ சம்பிரதாயத்தை மாற்ற திட்டமிட்ட சதியா? என சந்தேகம் எழுந்துள்ளதாக பக்தர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த புதிய சர்ச்சை தொடர்பில் நேற்று மாலை ஹட்டனில் ஊடக சந்தப்பொன்று நடத்தப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

பிறிதொரு மதத்தின் கொடியையோ அல்லது சினனத்தையோ ஏற்றுவது அது அவரவர் விருப்பம். அவரவர்களின் மதத்தலத்தில் அவரவர்களின் கொடிகளை ஏற்றுவதில் எவ்வித தவறுமில்லை.

இந்த நிலையில் இவ்வாறு கொடியை வைத்து கொண்டு இந்த நாட்டில் மீண்டும் ஒரு இனவாதத்தையோ, மதவாதத்தையோ தூண்டுவதற்கு இடமளிக்கக்கூடாது.

இந்து மதம் என்பது ஒரு பரந்து விரிந்த மதம். அனைவராலும் போற்றக்கூடிய புனிதமான மதமாகும்.

அவர்கள் இந்து மதத்தின் கொடியை இவ்வளவு காலமும் ஏற்றி வந்தது அவர்கள் அதன் புனித தன்மையை உணர்ந்ததனால் தான்.

இவ்வருடம் ஏற்றவில்லை என்று முரண்படுவதில் எவ்விதமான அர்த்தமும் கிடையாது. அவரவர் மதத்தில் அவரவர்களுடைய தேவைப்பாடுகளை உணர்ந்து சுதந்திரமாக செயப்படுவதற்கு அவரவருக்கு உரிமையுண்டு.

இந்து ஆலயத்தில் இந்துக் கொடி ஒன்றை ஏற்றவில்லை என்றால், அதனை கேட்பதற்கு எமக்கு உரிமையுண்டு. ஆனால் பிறிதொரு மதத்தினர் கொடியேற்றவில்லை என்பதை சர்ச்சையாக கொள்ள வேண்டிய தேவைப்பாடு எதுவும் கிடையாது.

எனினும் கடந்த காலங்களில் சமயங்களிடையே நல்லிணக்கம் சகவாழ்வு ஏற்படும் வகையில் கொடிகள் ஏற்றப்பட்டு மத வழிபாடுகளில் ஈடுபடக்கூடிய வகையில் காணப்பட்டமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றே.

இது தொடர்பாக இந்து மக்கள் அச்சமடைய தேவையில்லை. வீண் வாக்குவாதங்களையோ, மனத்தாங்கள்களையோ ஏற்படுத்தி கொள்ளவும் வேண்டாம் என நாம் முருகப் பெருமானின் பக்தர்களிடமும் இந்து மக்களிடமும் மிகவும் வினையமாக கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Allgemein