ஐ.நா. விசாரணையைச் சந்திக்கிறது பிலிப்பைன்ஸ்? காரணம் இதுதான்

பிலிப்பைன்ஸில் போதைப்பொருளுக்கு எதிராக அந்நாட்டு ஜனாதிபதி ரோட்ரிகோ டியுடெர்ட் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக ஐஸ்லாந்து அறிக்கையை சமர்பித்துள்ள நிலையில் இதற்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவும் அளித்துள்ளன.

இது தொடர்பாக விசாரணைக்கு பிலிப்பைன்ஸுக்கு அழைப்பு விடுக்குமாறு அந்நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையை கேட்டுக் கொண்டுள்ளன.

பிலிப்பைன்ஸில் போதைப் பொருளுக்கு எதிராக அந்நாட்டு ஜனாதிபதி ரோட்ரிகோ டியுடெர்ட் நடத்தும் கடும் நடவடிக்கைகளின் மூலம் இதுவரை 5,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது கடுமையான மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கிளப்பியுள்ளது.

ஆனால் பிலிப்பைன்ஸ் இராணுவத்தால் இதுவரை 20,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன.

இதில் கடந்த வாரம் பிலிப்பைன்ஸ் பொலிஸார் போதை பொருள் கும்பலுக்கு எதிராக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று வயது சிறுமி தவறுதலாக கொல்லப்பட்டது அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

டியுடெர்ட் பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியாக கடந்த 2016ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.

டியுடெர்டின் இந்தச் செயலுக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், அமெரிக்கா போன்ற உலக நாடுகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தன. இருப்பினும் அதற்கெல்லாம் சற்றும் செவி சாய்க்காமல் குற்றவாளிகளுக்கு எதிரான மிகக் கடுமையான தண்டனைகளை டியுடெர்ட் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பிலிப்பைன்ஸ் போதைப்பொருளுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கையை இலங்கை ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உலகச்செய்திகள்