“விழுந்தவனை மாடேறி மிதிப்பதை போன்றது தமிழ் அரசு தொண்டர்களின் அடாவடி” – எம்.கே.சிவாஜிலிங்கம் கண்டனம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அண்மையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் கீழ்மட்ட தொண்டர்கள் என சொல்லிக்கொள்ளும் சிலர் நடந்துகொண்ட விதமானது மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதிப்பதற்கு ஒப்பானது என்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அநாகரிகமான முறையில் செயற்பட்ட தொண்டர்களுக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சி கடும் நடவடிக்கை எடுத்து, எதிர்காலத்தில் இப்படியான இழிசெயல்கள் இடம்பெறாமலிருப்பதை உறுதிசெய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (4) முல்லைத்தீவுக்கு விஜயம் செய்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் தவிசாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் உடகவியலாளர்கள் மத்தியில் பேசும்போது இதனை தெரிவித்தார்.

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் நியாயமானது. அதை யாரும் கேள்விகேட்க முடியாது. வீரசிங்கம் மண்டபத்தின் முன்னாள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் தமிழ் அரசு கட்சியின் தொண்டர்கள் சிலர் அநாகரிகமாக நடந்து கொண்ட காட்சிகளை ஊடகங்களில் பார்த்தோம். இது அநாகரிகமானது.

பிள்ளைகளையும், உறவுகளையும் பறிகொடுத்துவிட்டு அந்தரித்து திரியும் அவர்களின் மனவேதனையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அரசிடம்தான் தமது கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும். எமக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தாலும், ஏன் அடித்தாலும் அரசியல் கட்சியான நாம், அவர்களை அரவணைத்து, அவர்களை ஆறுதல்படுத்த வேண்டும்.

தமிழ் அரசு கட்சியின் தொண்டர்கள் சிலர் நடந்து கொண்டது அநாகரிகமானது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, இனிமேலும் இப்படியான சம்பவங்கள் நடக்காமலிருப்பதை அந்த கட்சி உறுதிசெய்ய வேண்டும்“ என்றார்.

தாயகச்செய்திகள்