புதிய கூட்டணிக்கான பெயராக ‘ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன’ பரிந்துரை

புதிய தேர்தல் கூட்டணிக்கான பெயராக ‘ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன’ என்ற பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஜனாதிபதித் தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஏனையக் கட்சிகளை போன்றே செய்த வண்ணம் உள்ளது. கட்சியில் மறுசீரமைப்புகள் முன்னெடுக்கப்படுவதுடன், இளைஞர் அணிகள், மகளிர் அணிகள் மற்றும் தொகுதி கட்டமைப்புகள் என அனைத்தும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பலமான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கிலேயே பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. கூட்டணிக்கான பெயராக ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன என்பதை முன்மொழிந்துள்ளனர். அது ஏற்றுக்கொள்ள கூடியதாகவுள்ளது. அதேபோன்று பல விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளன. பதவிகள் குறித்தே இணக்கப்பாடு இதுவரை ஏற்படவில்லை.

பொதுஜன பெரமுனவுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுகளில் தோல்வி ஏற்பட்டால் சுதந்திர கட்சி சார்பில் கட்டாயம் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார். அதேபோன்று பொதுஜன பெரமுனவும் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவார்கள். இவ்வாறு நடைபெறுமானால் அது எதிரணிக்கே சாதகமாக அமையும்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராகுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. நபர்கள் பற்றி எமக்கு பிரச்சினையில்லை. ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கான உரிய இடமும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுடான கூட்டணிக்கு சாத்தியமில்லை.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர்களாக 5 பேர் போட்டியிடவுள்ளதான விம்பத்தை அரச நிதிகளை செலவழித்து அரசாங்கம் முன்னெடுத்துவருகிறது.

சுயாதீன தொலைக்காட்சி முதல் இதற்காக பல அரச நிறுவனங்களில் பாரிய அளவில் நிதிகள செலவழிக்கப்படுகின்றன. இதுவரை 2 பில்லியன் வரை செலவழிக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

19Shares
Allgemein