தெரிவுக்குழுவின் அழைப்பை நிராகரித்த தயாசிறி  சிக்கலில் மாட்டுவாரா?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அழைப்பை, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நிராகரித்துள்ளார்.

தெரிவுக்குழுவின் நேற்றைய அமர்வின் போது, முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு அடுத்ததாக, தயாசிறி ஜயசேகரவிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, அதற்கான அழைப்பும் தெரிவுக்குழுவினால் விடுக்கப்பட்டது.

தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி, நேற்றைய அமர்வின் போது, தயாசிறி ஜயசேகரவை சாட்சியமளிக்க அழைத்தார். எனினும் அவர் அங்கு முன்னிலையாகியிருக்கவில்லை.

இதையடுத்து அவருக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்படும் என்று ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

அதேவேளை, தாம் தெரிவுக்குழு முன்பாக தோன்றி சாட்சியமளிக்கப் போவதில்லை என்று தயாசிறி ஜயசேகர ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில், தெரிவுக்குழுவின் அழைப்புக்கு தயாசிறி ஜயசேகர இணங்கவில்லையெனில், அவருக்கு எதிராக தெரிவுக்குழுவினால் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Allgemein