பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக கடும் குற்றச்சாட்டுக்கள்!

இராணுவமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் இரு சிங்களவர்கள் உட்பட பத்து பேர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள்.

கோத்தபாயவிற்கு எதிராக தாக்கல் செய்துள்ள பெண்களில் ஒருவர், தனது மனுவில் சில தகவல்களை குறிப்பிட்டு இருக்கிறார்.

இதில், உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். அப்போது நான் தடுத்துவைக்கப்பட்டிருந்த முகாமின் பொறுப்பதிகாரியான மேஜர் முனசிங்க என்பவர் என்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார்.

அதன் பின்னர் நான் வேறு சில தமிழ் பெண்களுடன் முகாமொன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்தேன் அங்கும் பாலியல் வன்முறைகள் இடம்பெற்றன. பின்னர் பொலிஸ் தலைமையகத்திலும் இராணுவ முகாமொன்றிலும் இதே வன்முறைகளை அனுபவிக்க நேர்ந்தது.

இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மனித உரிமை சட்டத்தரணி ஸ்கொட் கில்மோர் நான் எனது வாழ்நாளில் மிக மோசமான சந்தித்த பாலியல் அடிமைத்தனம் இதுவென சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கள் கட்சிக்காரர்களிற்கு எதிராக கோத்தபாய ராஜபக்சவின் பாதுகாப்பு படையினர் புரிந்துள்ள பாலியல் வன்முறைகளும், இதனை புரிந்தவர்கள் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டமையும் பாலியல் வன்முறைகள் இலங்கையில் நிறுவனமயப்படுத்தப்பட்ட கொள்கையாக விளங்கின என்பதை புலப்படுத்துகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய காலத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவர்களே கலிபோர்னியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Allgemein