November 27, 2022

‘இலங்கையில் மீண்டும் தாக்குதல்கள் நடக்கலாம்’: இராணுவத் தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை!!

இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம். பயங்கரவாதம் நூறு வீதம் முடிவுக்கு வந்து விட்டது என கூற முடியாது. அந்த அச்சுறுத்தல் இன்னமும் உள்ளது என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்த்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரிக்கும் தெரிவுக்குழு முன்னிலையில் இன்று புதன்கிழமை(26) பிற்பகல் ஊடகங்களின் முன்பாக அளித்த சாட்சியத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்துள்ள பதில்களினதும் ஒரு பகுதி வருமாறு,

கேள்வி:- இந்த தாக்குதலை அடுத்து நீங்கள் முன்னெடுத்த தேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகளின் போது அவற்றை தடுக்கும் வகையில் எவரதும் எந்த அரசியல் தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுத்தனரா?

பதில்:- நீங்கள் கேட்கும் கேள்வி தெளிவானது, ஏப்ரல் 21 ஆம் நாள் சம்பவம் இடம்பெற்ற பின்னர் இராணுவ தளபதி என்ற வகையில் இராணுவத்தினரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தினேன். எனக்குரிய அதிகாரங்களுக்கமைய தேடுதல்கள் , விசாரணைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.

அந்த சந்தர்ப்பத்தின் போது ஏப்ரல் 26 ஆம் நாள் இசான் அஹமட் என்பவர் தெகிவளை பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார். அப்போது எனக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் தொலைபேசி அழைப்பை எடுத்தார். எனது தொலைபேசி இலகத்தை அனைவரும் அறிவார்கள்.

அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கதைப்பார்கள். இதன்படி அவரும் கதைத்துள்ளார். குறித்த தினத்தில் அந்த நபரின் பெயரை குறிப்பிட்டு அவரை கைது செய்தீர்களா என கேட்டார். அது பற்றி எனக்கு தெரியாது நான் ஆராய்ந்து கூறுவதாக கூறினேன்.

பின்னர் இராண்டாவது தடவையாகவும் கேட்ட போது இன்னும் தேடுவதாக கூறியிருந்தேன். இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களிடம் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளாரா என கேட்டேன். பின்னர் கேட்ட போது அவர் கைது செய்யப்பட்டிருந்தமை தொடர்பாக உறுதியாகியிருந்தது.

அப்போது இது பற்றி இன்னும் ஒன்றரை ஆண்டுகளின் பின்னரே இனி தொலைபேசி அழைப்பை எடுக்க வேண்டுமென கூறியிருந்தேன். பயங்கரவாத தடுப்பு பிரிவில் அவரை ஒன்றரை ஆண்டுகளுக்கு விசாரணைக்காக வைத்திருக்க முடியும். என்ற காரணத்திற்காகவே நான் அவ்வாறு கூறியிருந்தேன். எவ்வாறாயினும் அவர் எனக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை.

கோரிக்கையையே செய்திருந்தார். தனது அமைச்சில் பணியாற்றும் உயர் அதிகாரியின் மகன் என்பதனால் அது தொடர்பாக ஆராய்ந்து பார்க்குமாறே கூறியிருந்தார், அதை தவிர்ந்து அமைச்சரோ அல்லது வேறு எந்த அதிகாரியோ எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்க எவரும் அழுத்தம் கொடுக்கவில்லை.

கேள்வி:- வேறு அமைச்சர்கள் எவராவது அழுத்தம் கொடுக்கவில்லையா?

பதில்:- இல்லை, விசாரணைகள் இடம்பெற்ற நேரங்களில் சிலர் குறித்து தேடிப் பார்ப்போம். ஆனால் அதனை தவிர எந்த தரப்பில் இருந்தும் அழுத்தம் வரவில்லை. குறிப்பாக இந்த அமைச்சர் (றிசாத் ) எக்காரணம் கொண்டும் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும்.

கேள்வி:- நீங்கள் உங்களின் விசாரணைகளை முன்னெடுக்க சகல சுதந்திரமும் இருந்தது அப்படித்தானே?

பதில்:- இந்த விடயத்தில் சிறிலங்கா அதிபரோ பிரதமரோ எந்தவொரு அமைச்சரோ எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இராணுவம் சுயாதீனமாக செயற்படவே முடிந்தது.

குழு:- பாதுகாப்பு விவகாரங்களில் சில முக்கிய அம்சங்கள் உள்ள காரணத்தினால் வேண்டுமென்றால் ஊடகங்களை நீக்கிவிட்டு விசாரணைகளை நடத்துவோம்.

சரத் பொன்சேகா:- முதல் கேள்வியுடன் தொடர்புபட்ட சில கேள்விகள் உள்ளன அவற்றை கேட்டுவிட்டு அனுப்பலாம்.

கேள்வி:- ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் மீண்டும் தொலைபேசியில் அழையுங்கள் என நீங்கள் ஏன் கூறினீர்கள்?

பதில்:- எனது அறிவுக்கு அமைய பயங்கரவாத தடுப்புசட்டமே அப்போது இருந்தது. அதன் பின்னர் அவசரகால சட்டம். இந்த காலத்தில் ஒருவர் ஒன்றரை ஆண்டுகள் தடுப்பில் தடுத்து விசாரணைகளை நடத்த முடியும் என்பது எனக்கு தெரியும். அண்மையில் இந்த சட்டம் ஒரு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.

எனினும் அந்த தொலைபேசி அழைப்பிற்கு நான் யதார்த்தமாக ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் என பதில் தெரிவித்தேன். இதில் நான் ஆழமாக சிந்திக்கவில்லை. இவரை ஒன்றரை வருடங்கள் கைது செய்து தடுப்பில் வைத்திருப்பேன் என நான் வேண்டுமென்று கூறவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.