விலைக்கு வாங்கப்படும் நடிகர்கள்! பணப்புழக்கத்தில் நடிகர் சங்க தேர்தல்;

தமிழ் திரையுலகில் நடிகர் சங்க தேர்தல் தான் தற்போதைய பரபரப்பான முக்கிய செய்தி. வழக்கமாக தேர்தல் என்றால் பதவியில் இருப்பவர்கள் ஏற்கனவே தாங்கள் செய்த சாதனையை சொல்லி ஓட்டு கேட்பார்கள். அவர்களை எதிர்த்து நிற்பவர்கள் குற்றச்சாட்டு, முறைகேடு என சொல்லி வாக்கு கேட்பார்கள்.
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி ஏற்கனவே செய்த சாதனைகளைச் சொல்லி அது தொடர மீண்டும் வாய்ப்பு கேட்கிறது. கடந்த முறை பாண்டவர் அணியில் இருந்த பலரும் இப்போது கரன்சி கவனிப்பால் அங்கிருந்து விலகி பாக்யராஜ் -ஐசரி கணேஷ் என இரட்டைத் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியாக தேர்தலில் போட்டியிடுயிடுகிறார்கள்.
பாண்டவர் அணி மீது முறைகேடு குற்றச்சாட்டு, நிர்வாகக் குற்றச்சாட்டு என எதையும் வைக்க முடியாமல் நடிகர் சங்கப் புதிய கட்டடப் பணிகளை சொன்னபடி முடிக்காததால் அவர்களை எதிர்த்து போட்டியிடுவதாக சொல்கிறது பாக்யராஜ் அணி.
உண்மையில் அந்தப் பகுதிவாசிகள் பலரின் வழக்கு, எஸ்.வி.சேகர் தொடர்ந்த வழக்கு ஆகியவற்றால் தான் இந்த தாமதம் என்பது சுவாமி சங்கரதாஸ் அணியினருக்குத் தெரிந்தும், தேர்தலுக்காக இருக்கும் ஒரே ஆயுதமாக தாமதமான கட்டட விவகாரத்தை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகின்றனர்.
இயக்குனர்சங்கத்தின் தலைவராக தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்த பாக்யராஜ் திடீரென நடிகர் சங்கத் தலைவர் வேட்பாளராக முன்மொழியப்பட காரணமே அவர் மீது இருக்கும் “மிஸ்டர் கிளீன்” இமேஜ் தான்.
மனதில் பட்டதை அப்படியே பேசி பழக்கப்பட்ட பாக்யராஜ் சமீபத்தில் எழுத்தாளர் சங்கத்தில் “சர்கார்” படக் கதை திருட்டு விவகாரத்தில் அதிரடி முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த கிளீன் இமேஜ், மனதில் பட்டதை பட்டென பொது வெளியில் உடைப்பதுதான் நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்யராஜுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
சுவாமி சங்கரதாஸ் அணி வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்து முடித்து விட்டு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்…
தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்யராஜ் பேசும் போது… “சிலர் சொல்வாங்க நாடக நடிகர்களுக்கு காசு கொடுத்து ஓட்டு கேக்குறாங்கன்னு… நாடகக் கலைஞர்களை பாக்க போனா காசு கேப்பாங்க… ஏன்னா அவங்க எப்பவுமே கஷ்டத்துலதான் இருக்காங்க… நாங்க கஷ்டத்துல இருக்கோம் ஓட்டு கேக்க வந்துட்டான்னு சொல்வாங்க… அதனால இந்தா இப்போதைக்கு இத வைச்சிக்க ஆட்சிக்கு வந்ததும் மத்தத பாத்துக்கலாம்னு சொல்லுவோம்… அது நான் போனாலும் அதான்… வேற யார் போனாலும் அதான்.” என நாடக நடிகர்களுக்கு காசு கொடுத்து தான் ஓட்டு வாங்கப் போகிறோம் என்று பாக்யராஜ் பகிரங்கமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஒரு வேட்பாளர் தங்களது அணி வெற்றிக்கு ஓட்டுக்களை பணம் கொடுத்து தான் வாங்கப் போகிறோம் எனப் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பாண்டவர் அணியைச் சேர்ந்த பலரையும் “வெயிட்டாக” கவனித்து தன் பக்கம் இழுத்துக் கொண்டார் என்று பொது செயலாளர் பதவிக்கு போட்டி போடும் ஐசரி கணேஷ் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அதை உறுதிபடுத்தும் விதமாக ஐசரி கணேஷ் அருகில் இருக்கும் போதே நாடக கலைஞர்களுக்கு பணம் கொடுப்போம் என பாக்யராஜ் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பாக்யராஜ் இப்படி பகிரங்கமாக பேசியது தேர்தல் விதிமுறை மீறிய செயல் என்பதால் பாக்யராஜ் வேட்புமனுவை தள்ளுபடி செய்யவும் தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலை விட இந்த முறை நடிகர் சங்க தேர்தலில் பல சுவாரஸ்யமான அதிரடிகள் நடக்கலாம். சாதனைகள், வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறக்க; கலர் கலரான கரன்சிகள்தான் நடிகர் சங்கத் தேர்தலைத் தீர்மானிக்கப் போகிறது என்கின்றனர் திரையுலகினர்.
– தமிழகத்திலிருந்து இராமானுஜம்-
இந்தியச்செய்திகள்