அமெரிக்க இராஜாங்கச் செயலர் பொம்பியோ இம்மாத இறுதியில் சிறிலங்கா வருகிறார்

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இம்மாத இறுதி வாரத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இதுகுறித்து அறிவிக்கப்பட்டது.

நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்கச் செயலர் பொம்பியோ, இந்தியாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்துடன் உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்காக இம்மாத இறுதியில் அங்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, இந்தியா, சிறிலங்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்காக, அமெரிக்க இராஜாங்கச் செயலரின் பயணத் திட்டம் குறித்த அறிவிப்பை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்கன் ஒடாகஸ் வெளியிட்டார்.

“சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்தோ- பசுபிக் என்ற எமது இலக்கை முன்னேற்றுவதற்கு,எமது முக்கியமான பங்காளி நாடுகளுடன் விரிவானதும், ஆழமானதுமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் பொம்பியோ இந்தோ- பசுபிக் பிராந்தியத்துக்கு வரும், ஜூன் 24ஆம் நாள் தொடக்கம் 30ஆம் நாள் வரை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அவர் முதலில், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கான பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

அதையடுத்து, அவர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார்.

ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிராக, ஒன்றுபட்டு நிற்கும் சிறிலங்கா மக்களுக்கான அமெரிக்காவின் தோழமையை அவர் வெளிப்படுத்துவார்.

அத்துடன் அவர், சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்தோ –பசுபிக் பிராந்தியத்தில் பகிரப்பட்ட கடப்பாடுகள் தொடர்பாக, அமெரிக்க- சிறிலங்கா ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஊக்குவிப்பது குறித்தும் அவர் கலந்துரைரயாடவுள்ளார்.

அதன் பின்னர், ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் மைக் பொம்பியோ பங்கேற்கவுள்ளார். ஜூன் 28,29ஆம் நாள்களில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

அதன் பின்னர், அமெரிக்க இராஜாங்கச் செயலர் தென்கொரியாவுக்குப் பயணமாகவுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் பொம்பியோ, சிறிலங்காவுக்கு எப்போது வருவார், எத்தனை நாட்கள் தங்கியிருப்பார் என்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.

எனினும் அவர், 26ஆம் நாள் அல்லது 27ஆம் நாள் சிறிலங்கா வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர், சிறிலங்கா வரவுள்ள, உலகின் மிகமுக்கியமான இரண்டாவது பிரமுகர் இவராவார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சிறிலங்கா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகச்செய்திகள்