புலனாய்வு அதிகாரிகளை சாட்சியமளிக்க அனுமதியேன் – சிறிலங்கா அதிபர் விடாப்பிடி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளிக்க, புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் எவரையும், அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்று நடந்த உயர் காவல்துறை அதிகாரிகளுக்கான மாதாந்த கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.

”இதுவரை தெரிவுக்குழுவின் முன்பாக, சேவையில் இல்லாத அதிகாரிகளே முன்னிலையாகி சாட்சியமளித்துள்ளனர்.

சேவையில் உள்ள அதிகாரிகள் சாட்சியமளிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்த முடிவுக்கு நானே முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக உச்சநீதிமன்றில் 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நீதிமன்ற வழக்குகளை தெரிவுக்குழு அமர்வுகள் பாதிக்கும் என, சட்டமா அதிபர் எனக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் அனுப்பிய இந்த கடிதத்தை நான் சபாநாயகருக்கு அனுப்பியிருந்தேன்.

ஆனால் அந்தக் கடிதத்தை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் சமர்ப்பிக்கவில்லை.” என்றும் சிறிலங்கா அதிபர் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

Allgemein