நாடு பாரிய அழிவை சந்திக்க நேரிடும்; பிரதமர் ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை!

சிறிலங்காவில் மீண்டும் இன வன்முறைகள் இடம்பெறுமானால் நாடு பாரிய அழிவை சந்திக்க நேரிடும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்திருக்கின்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து பாதுகாப்பு தொடர்பில் எழுந்திருந்த அச்சுறுத்தல்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இன வன்முறைகள் வெடிக்கலாம் என்று வெளிநாடுகள் பல சந்தேகம் கொண்டுள்ளதாகவும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்திருக்கின்றார்.

இதற்கான அலங்காரப் பந்தல்களை அமைக்கவும், தானங்களை வழங்கவும் தேவையான நிதிணை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகவும் இன்றை தினம் அலரி மாளிகையில் நடைபெற்ற பொசோன் பௌரணமி தின ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடலில் சிறிலங்கா பிரதமர் தெரிவித்திருக்கின்றார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் இன்றைய தினம் முற்பகல் பொசோன் பௌரணமி தின ஏற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்ற இடம்பெற்றது.

நாட்டின் அனைத்து மாவட்ட செயலாளர்கள், மாகாணங்களின் தலைமைச் செயலாளர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்த இந்த கலந்துரையாடலில் அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்களும் இணைந்துகொண்டிருந்தனர்.

ரணில் – அனைத்து மாவட்டங்களிலும் பொசொன் நிகழ்வுகளை நடத்துவதற்க குறிப்பாக பாடசாலை மட்டங்களிலும் இந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு நாம் நிதி ஒதுக்கியுள்ளோம். அதேபோல் அனைத்து பிரதேச செயலாளர் அலுவலகங்களிலும் தான நிகழ்வுகளையும், மத வழிபாடுகளையும் ஏற்பாடுசெய்து நடத்துவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாடு முழுவதும் பொசொன் பௌர்ணமி நிகழ்வுகளை பெரும் எடுப்பில் நடத்தி நாம் அச்சமடையவில்லை, நாம் பலமுடனேயே இருக்கின்றோம் என்பதை காண்பிக்க வேண்டும். மஹிந்த தேரர் சிறிலங்காவிற்கு பௌத்த தர்மத்தை கொண்டுவந்த தினமான பொசோன் பௌர்ணமி நாள் என்பது சிறிலங்காவில் வாழும் சிங்கள பௌத்த மக்களின் மிக முக்கிய நாள் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் எமது நாட்டில் வாழும் எந்தவொரு சமூகத்தையும் ஒதுக்கி வைக்காது அனைவரையும் இணைத்துக்கொண்டு இந்த நிகழ்வுகளை ஒழுங்கு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்”.

பௌத்த தலைமை பிக்குகளும், புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம உள்ளிட்ட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்த இந்த கலந்துரையாடலில், எந்தவொரு நிலையிலும் மீண்டுமொரு இனவன்முறை இடம்பெற அனுமதிக்க முடியாது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ரணில் – “ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சிறிலங்காவிற்கு விஜயம் செய்கின்றார். இந்த விஜயத்தின் ஊடாக சிறிலங்காவில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஒட்டுமொத்த உலகத்திற்கும் நிரூபணமாகும். அதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்க முடியாது போயிருந்தாலும், அதனை அடுத்து நாம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எமது படைத் தரப்பினர் செயற்பாடுகள் காரணமாக ஒட்டுமொத்த நாடாக நாம் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம் என்பதை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.

எனினும் சிறிலங்காவில் இன வன்முறைகள் இடம்பெறலாம் என்ற சந்தேகம் அவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. அதனால் இன வன்முறைகள் ஏற்படாத வகையில் மாவட்ட செயலாளர்கள் மாவட்ட மட்டங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் எங்காவது ஒரு சம்பவம் நிகழ்ந்தாலும் எமது நாட்டின் சுற்றுலாத்துறை மீண்டும் வீழ்ந்துவிடும். சிலர் குறுகிய அரசியல் லாபங்களுக்காக இன வன்முறைகளை தூண்டுவதற்கு முயல்கின்றனர். எனினும் இறுதியில் நாடு பொருளாதார ரீதியாக மோசமான அழிவிற்குள் தள்ளப்பட்டுவிடும். அதனால் அனைவரும் பொறுப்புடன் செயற்பட்டு மீண்டுமொரு இன வன்முறைகள் ஏற்படாது இருப்பதை உறுதிசெய்ய அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ’என அவர் மேலும் தெரிவித்தார்.

Allgemein