உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை ருசிபார்த்தது இலங்கை!

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை ருசிபார்த்தது இலங்கை!

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், நேற்று இடம்பெற்ற ஏழாவது லீக் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

அதன்படி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இலங்கை அணி 34 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், கார்டிப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த 7ஆவது லீக் போட்டியில் முன்னாள் சம்பியன் இலங்கை அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதியது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 36.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களாக குசல் பெரேரா 78 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக மொஹமட் நபி 30 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இப்போட்டி மழையால் சிறிதுநேரம் இடைநிறுத்தப்பட்டமையினால் போட்டி 41 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

எனவே ஆப்கானிஸ்தான் அணிக்கு ‘டக்வொர்த்-லீவிஸ்’ முறைப்படி 187 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

குறித்த வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, ஆரம்பத்தில் சிறப்பாக ஓட்டங்களைக் குவித்தாலும், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், 32.4 ஓவர்களில் 152 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அதிகபட்சமாக நஜிபுல்லா ஜட்ரன் 43 ஓட்டங்கைளைப் பெற்றார். இதன் மூலம் இலங்கை அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வேகப்பந்து வீச்சாளர்கள் நுவான் பிரதீப் 4 விக்கெட்டுகளும் மலிங்க 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். நுவான் பிரதீப் ஆட்டநாயகன் விருதைப்பெற்றார்.

உலகக் கிண்ணத்தொடரில், தனது முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி கண்ட இலங்கை அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். ஆப்கானிஸ்தானுக்கு தொடரில் 2ஆவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு