ஆட்டம் ஆரம்பம்:சிங்கப்பூரில் பதுங்கிய கோத்தா?

இலங்கையின்  முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் போட்டியிலிருந்து நீக்க மைத்திரி –ரணில் தரப்பு காய் நகர்த்தலை ஆரம்பித்துள்ளதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னைய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கோத்தாவை தற்காலிகமாகவேனும் உள்ளே தள்ளி தேர்தல் வரை அதனை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதனையடுத்து  நீதிமன்ற அமர்வுகளை புறக்கணிக்க கோத்தா  திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த 24ஆம் நாள் தொடக்கம், நேற்று முன்தினம் ஜூன் 2ஆம் நாள் வரை கோத்தாபய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு கொழும்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவர் மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.
சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சைக்காக சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ச நாடு திரும்பவில்லை என்றும், அவருக்கு இன்னும் சில பரிசோதனைகள் தேவைப்படுவதால், வெளிநாட்டுப் பயண அனுமதியை நீடிக்குமாறும் அவரது சட்டவாளர் கோரினார்.
இதையடுத்து, ஜூன் 19ஆம் நாள் வரை கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான வெளிநாட்டுப் பயணத் தடையை தளர்த்தவும், ஜூன் 19ஆம் நாள் வரை வழக்கை ஒத்திவைக்கவும், மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே யாழ்.நீதிமன்றிலும் லலித் -குகன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கோத்தபாய சமூகமளிக்க வேண்டியுள்ளது.
எனினும் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என்ற வகையினில் கோத்தா மும்முரமாக உள்ளபோதும் அவரை பொறியினுள் சிக்க வைக்க முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளன.
இதிலிருந்து தேர்தல் வரை தப்பிக்கவே கோத்தா நீதிமன்ற அமர்வுகளிற்கு ஆஜராகாது டிமிக்க கொடுக்க முற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
Allgemein