இலங்கையை தமிழர் தேசம் என இந்தியா அறிவிக்க வேண்டும் – சீமான் !

இராமர் பாலத்தை இந்திய தேசிய சின்னமென அறிவிக்கும் முன்னர் இலங்கையை தமிழர் தேசமென அறிவிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொஞ்சம் இரத்தம் தாருங்கள் ழுமு சுதந்திரம் தருகின்றேன் என்று கூறிய சுபாஷ் சந்திரபோசை முன்னோடியாக எடுத்துகொண்டு, நாங்கள் நிறைய இரத்தத்தை தந்துவிட்டோம் கொஞ்சம் சுதந்திரம் தாருங்கள் என்றே பிரபாகரனும் போராடுவதற்கு வந்தாரெனவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சீமான் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“தமிழர்களை இரண்டாம் தர குடிமக்கள் ஆக்கியமையினாலேயே ஈழப் போராட்டம் தோற்றம் பெற்றது. நாங்கள் பூர்வீக குடிகளாவர். நான் கூட இராமர் பாலத்தை இந்திய தேசிய சின்னமான அறிவிக்க வேண்டுமென்று கூறினேன். அதற்கு அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்.

குறித்த செயற்பாட்டுக்கு முன்னர் இராமர் பாலம் எதற்காக கட்டப்பட்டது என்பதை மக்கள்தான் கூற வேண்டும். அதாவது இராவணனை அழிப்பதற்காக இலங்கைக்கு செல்லவே குறித்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழ் மன்னனான இராவணன் இலங்கையை ஆட்சி செய்ததன் ஊடாக இலங்கை தமிழர்களுக்கு உரித்துடையதென்பது உறுதியாகின்றது.

எமது பரம்பரையினர் ஆண்ட நாடுதான் இலங்கை. பண்டார வன்னியன் ஆண்ட காரணத்தினாலேயே வன்னிகாடு என்ற பெயர் கூட இன்னும் காணப்படுகின்றது.

பண்டார வன்னியனுக்கு சிலை வைத்து அவனை போற்றினார் எமது தலைவர். ஆனால் அச்சிலையை உடைத்து பெரும்பான்மையினர் தரைமட்டமாக்கினர்.

ஆனால் விழுந்த சிலை எழாது என்று கூற முடியாது. தமிழர் பிரதேசத்துக்கு வாழ்வாதாரத்துக்கு வந்த பெரும்பான்மையினர் அதனை கைப்பற்றவே முனைகின்றனர்.

தமிழ் மக்களை இரண்டாம் குடிகளாகவே இலங்கையிலுள்ள பெரும்பான்மையினர் நடத்த முனைகின்றனர். இந்தியாவிலும்  இரண்டாம் தர குடியினராக கூட தமிழ் மக்களை கருதுவதில்லை. இந்திய பேராதிக்கம் தமிழர்களை இந்திய குடிகளாக கூட மதிப்பதில்லை.

அடிமையாக வாழ்வதனைக் காட்டிலும் உரிமை சாவு மேலானதென கருதிய தலைவைர் பிரபாகரனை பயங்கரவாதி, தீவிரவாதி, பிரிவினைவாதி என உலகத்திலுள்ள ஏனைய புரட்சியாளர்களை கூறியதை போன்றே இந்த உலகம் கூறியது.

ஆகையால் இராமர் பாலத்தை இந்திய தேசிய சின்னமென அறிவிக்கும் முன்னர் இலங்கையை தமிழர் தேசம் என அறிவிக்க வேண்டும்.

இதேவேளை, மக்களுக்கு தீங்கு செய்பவர்கள் ஆட்சியிலிருந்து வீழ்த்தப்பட்டு மக்கள் அதிகாரத்தை பெறும் காலம் விரைவில் வரும்” என சீமான் தெரிவித்துள்ளார்.

இந்தியச்செய்திகள்