தமிழீழ பிரச்சனையை சிக்கலாக்கியவர்; மோடியின் வெளியுறவுத்துறை அமைச்சரானார்!

தெற்காசிய பிராந்தியத்தில் நிகழும் புவிசார் அரசியலின் அனைத்து நிகழ்ச்சிநிரல்களிலும் தமிழர்களாகிய நாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புபடுத்தப்பட்டுள்ளோம். அதன்பொருட்டு, தமிழீழத்தில் ஒரு இனப்படுகொலையை சந்தித்துள்ளோம். நாம் வாழும் இந்த பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த தமிழர் கடல் பகுதி தான் இன்றைய அமெரிக்க-சீனா போட்டியிடும் களம். அப்படியென்றால் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை பாகிஸ்தானை மையமாக கொண்ட காலம் இனி இருக்கப்போவதில்லை. அமெரிக்கா-அமெரிக்க ஆதரவு நாடுகள், சீனா-சீன ஆதரவு நாடுகள் என்று இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் என முடிவுசெய்யப்படும். இப்படிப்பட்ட வெறியுறவுக் கொள்கைகளை இனி கையாளப்போகிறவர் தான் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர்.

தமிழரென்று சிலரால் சொல்லப்படும் இந்த ஜெய்ஷங்கர், தனது பணிக்காலத்தில் முதன்முதலாக பெற்ற மிகப்பெரிய பொறுப்பு என்றால் அது, ராஜிவ்காந்தி காலத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமைதி காக்கும் படையை வழிநடத்தியது. IPKF படையின் முதன்மை செயலாளராகவும், அரசியல் ஆலோசராகவும் இருந்துள்ளார். இவரது ஆலோசனையின் படி தான் IPKF ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்றுகுவித்தது. ஆனாலும் இந்தியாவின் மிகப்பெரிய படையை விடுதலைப்புலிகளின் சிறு படை தோற்கடித்து ஓட செய்தது. தமிழர்களுக்கு எதிரான கொள்கையை வகுத்து, தமிழீழ பிரச்னையை சிக்கலாக்கி, இந்தியாவிற்கு தோல்வியை பெற்று தந்தவர் தான் இந்த ஜெய்ஷங்கர்.

கடந்த 2011ம் ஆண்டு சீனாவிற்கான இந்திய தூதராக பணியாற்ற சென்ற இவர், 5 ஆண்டு காலம் அங்கு நீடித்தார். இவர் சீனாவில் இருந்த காலத்தில் தான், சீனா, BRI (Belt and Road Initiative) எனப்படும் ஆசிய-ஐரோப்பிய-ஆப்பிரிக்க நாடுகளை தனது வணிக வளையத்திற்குள் கொண்டுவரும் திட்டத்தை பெரிய அளவில் முன்னெடுத்து சென்றது. முதல்பத்தியில் சொல்லப்பட்ட சீனா-அமெரிக்காவின் புவிசார் அரசியல் இதனை மையமாக கொண்டதே. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டம் குறித்து இந்தியா புரிந்துகொள்ளவோ, சீனாவின் ஆதிக்கத்திற்கு மாற்றாக சமாளிக்கக் கூடிய திட்டங்களை இந்தியா உருவாக்கவோ வேண்டுமெனில் அதில் சீனாவின் தூதரான ஜெய்ஷங்கரின் பங்களிப்பு கண்டிப்பாக தேவைப்பட்டிருக்கும். இந்தியா அதில் தோல்வியுற்றதிற்கு மிகமுக்கிய காரணமும் இந்த ஜெய்ஷங்கர் தான்.

மோடியின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியின் மிகமோசமான வெளியுறவுக்கொள்கை தோல்வி என்றால், இந்தியா நேபாளம் நாட்டின் மீதான தனது கட்டுப்பாட்டை இழந்தது தான். நேபாளத்தில் புதிதாக வந்து ஒலி தலைமையிலான இடதுசாரி ஆட்சி, புதிய அரசியலமைப்புச்சட்டத்தை உருவாக்க அதை இந்தியா எதிர்க்கிறது. பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்தப்பட்டிருக்க வேண்டிய இந்த விசயம், இறக்குமதிக்காக இந்தியாவின் கடல் எல்லையை பயன்படுத்தும் நேபாளத்திற்கு பொருட்களை கொண்டுசெல்ல எல்லையில் தடைவிதிக்கிறது. உள்நாட்டில் இந்தியாவிற்கு எதிராக பெரிய கலவரங்கள் வெடிக்க, சீனா தனது பொருட்களை ஏற்றுமதி செய்து காப்பாற்றுகிறது. இந்தியாவின் தேவை இனி தேவையில்லை என்று முடிவுக்கு வந்த நேபாளம் இன்று சீனாவின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டது. இப்படிப்பட்ட இந்த நேபாள விவகாரத்தை கையாண்டது இந்த ஜெய்ஷங்கர் தான். பொருளாதார நெருக்கடி என்ற பெயரில் நேபாளத்தை சீனாவின் பக்கம் தள்ளியது ஜெய்ஷங்கரின் தவறான கொள்கை தான்.

அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி தேவயாணி கோபர்கடே என்பவர் போலியான ஆவணங்கள் கொண்டு விசா வழங்கிய பிரச்சனையையும், சீனாவுடனான டோக்லாம் பிரச்சனையையும் சுமுகமாக தீர்த்து வைத்ததாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றனர். உண்மையில் இரு பிரச்சனைகளிலும் காலில் விழுந்தும், இந்தியாவின் சந்தையை அந்நாட்டு வணிக நிறுவங்களுக்கு திறந்துவிட்டும், அணுஉலைகள், ஆயுத கொள்முதல் என, எப்படி எடப்பாடி அரசு மோடி அரசுடன் பேரம் பேசுகிறதோ, அதே போல் பேரங்கள் பேசி இந்தியாவை அடமானம் வைத்து பிரச்சனைகளிலிருந்து இந்தியா தப்பியது. இதில் இந்தியாவின் செல்வாக்கை கூட்டும் வகையில் எந்த நடவடிக்கையையும் அவர் மேற்கொள்ளவில்லை.

இவையெல்லாம் ஊடகங்கள் சொல்ல மறந்த அல்லது தவறாக சொல்லிய ஜெய்ஷங்கரின் பரிதாபங்கள். இப்படிப்பட்ட ஒருவர், தமிழினத்தை சூழ்ந்துள்ள வெளியுறவுக்கொள்கைகளை தீர்மானிக்க போகிறார் என்றால் நாம் கவனமாக இருக்க வேண்டிய சூழல் இது. தமிழினத்தை பலியிடவும் தயங்கமாட்டார்கள் என்பது தான் உண்மை.

இந்தியச்செய்திகள்