சிறிலங்காவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார் – இந்தியப் பிரதமர்

தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், நெருக்கமான இருதரப்பு ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கு, உறுதி பூண்டிருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் ஹவுசில் இன்று முற்பகல் நடந்த இருதரப்பு பேச்சுக்களின் போ தே அவர்கள் இதனைக் கூறியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது, இந்தியப் பிரதமருக்கு வாழ்த்துகளை தெரிவித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிராந்தியத்தின் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்புக்காக, இரண்டு நாடுகளும் இணைந்து செயற்பட விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்ற சிறிலங்கா அதிபருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்ட இந்தியப் பிரதமர், சிறிலங்கா அரசாங்கத்துடன் இருதரப்பு உறவுகளை, மேலும் வளர்ப்பதில் தமது அரசாங்கம் உறுதி பூண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதம் என்பன மனித குலத்துக்கு தொடர்ந்தும், அச்சுறுத்தலாக இருப்பதாகவும், தெற்காசியா மற்றும் இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு, அமைதிக்காக இரண்டு நாடுகளும் நெருங்கிய ஒத்துழைப்பை பேணவும் இரண்டு நாடுகளின் தலைவர்களும் இணங்கியுள்ளனர்.

மேலும், எதிர்காலத்தில் சிறிலங்காவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

உலகச்செய்திகள்