யாழ் நீதவான் பீற்றர் போல் கடும் கண்டனம்

யாழ் நீதவான் பீற்றர் போல் கடும் கண்டனம்

தொழிலாளர் ஒருவர் விடுதியில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்த நிலையில் விடுதியின் உரிமையாளர் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டமைக்கு யாழ்ப்பாணம் நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்த பணியாளர் தொடர்பான இறப்பு விசாரணை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது விடுதியின் உரிமையாளர் மன்றில் வாக்குமூலம் வழங்கினார்.

“தற்கொலை செய்து கொண்ட பணியாளர் 5 ஆண்டுகள் பணியாற்றுகின்றார். அவரைப் பிள்ளை போன்றே வளர்த்தேன். அதனால்தான் அவரின் முடிவை ஏற்க முடியாது சடலத்தைப் பார்வையிட வரவில்லை.

எனது வங்கி அட்டை எடுத்து பணம் செலவிடப்பட்டமை தொடர்பில் கண்டித்ததை அடுத்தே அவர் இந்த முடிவுக்கு வந்திருப்பார் என நினைக்கின்றேன்” என்று விடுதியின் உரிமையாளர் மன்றில் வாக்குமூலம் வழங்கினார்.

 இதனை அடுத்து அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்த நீதவான் “விடுதியின் பணியாளர் விடுதிக்குள் தற்கொலை செய்து பிணமாகக் கிடக்கின்றார். அவரின் முதலாளியான நீர் சடலத்தைக் கூடப் பார்க்கச் செல்லவில்லை. என்ன மனிதாபிமான இருக்கின்றது. தொழிலாளர்கள் மீது முதலாளிக்கு அக்கறை அவசியம்.

தொழிலாளி 5 ஆண்டுகள் பணியாற்றினார் என்றும் பிள்ளை போல் பார்த்தாகவும் கூறுகின்றீர். அவர் தற்கொலை செய்தமை தொடர்பில் பொலிஸாருக்கு உரிய அறிவித்தல் வழங்கலாம் அசண்டையாகச் செயற்பட்டுள்ளீர்.

இவ்வாறு செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – மனிதாபிமானமற்றது” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல் கண்டித்தார்.

யாழ்ப்பாணம், திருநெல்வேலியிலுள்ள விடுதி ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் நேற்று (திங்கட்கிழமை) தற்கொலை செய்துகொண்டார்.

ஹட்டனைச் சேர்ந்த ரி. சிந்துஜயந்த் என்ற 23 வயதுடைய இளைஞரே தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம் தொடர்பில் நேற்று இரவு யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் சம்பவ இடத்துக்குச் சென்று இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார்.

பணியாளர் ஒருவர் விடுதிக்குள் தற்கொலை செய்துகொண்டமை தொடர்பாக விடுதியின் உரிமையாளர் பொலிஸ் அவசர இலக்கத்துக்கு மாத்திரம் அறிவித்துவிட்டு இருந்துவிட்டார்.

பொலிஸ் நிலையத்துக்கு உரிய அறிவித்தலை வழங்கவில்லை என்று சம்பவ இடத்தில் நடந்த விசாரணையின் போது நீதிவானிடம் பொலிஸார் தெரிவித்தனர்.

அதனால் விடுதி உரிமையாளரை நீதிமன்றில் இன்று முற்படுத்மாறு உத்தரவிட்ட நீதவான், பணியாளரின் சடலத்தை ஊடற்கூற்று விசாரணையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

Allgemein