41 வங்கிக் கணக்குகளில் 134 மில்லியன் முடக்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டு சி.ஐ.டி மற்றும் ரி.ஐ.டியின் தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களின் வங்கிக் கணக்குகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

மேற்படி வங்கிக் கணக்குகளில் சுமார் 134 மில்லியன் ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதுடன் மேலும் 14 மில்லியன் ரூபாய் பணத்தை குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பயங்கரவாதிகளுடன் தொடர்பை பேணி வந்துள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் 5 சந்தேக நபர்களை ஹொரவப்பொத்தானை பொலிஸார் நேற்றுக் காலை கைது செய்துள்ளனர். இவர்களில் ஹொரவப்பத்தானை பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி அதிகாரி ஒருவரும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்றுக் மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளிக்கையில்,

பயங்கரவாதிகளுடன் நேரடித் தெரடர்பை பேணி வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் சொத்துக்கள் தொடர்பில் கண்டறியும் பொருட்டு பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைக் குழுவினரே 134 மில்லியன் ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ள 41 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனர். அத்துடன் பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்புடைய சந்தேக நபர்களிடமிருந்து ஏற்கனவே 7 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.

Allgemein