ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து விட்டார் -செல்வம் MP

னாதிபதி மைத்ரிபால சிரிசேன தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து விட்டார் என டெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு பத்து வருடங்கள் நிறைவடைந்தும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு நாடளாவிய ரீதியில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு பல்வேறு தரப்பினராலும் பல கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டுள்ளன. இருந்தும் இவை எவற்றுக்குமே செவி சாய்க்காத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரரை விடுதலை செய்துள்ளார்.

இதனை சுட்டிக் காட்டி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறை தண்டனை வழங்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏன் தமிழ் அரசியல் கைதிகளை விடுக்க முடியாது என்பதே எமது கேள்வியாகும். இதன் மூலம் ஜனாதிபதியை நன்றி மறந்தவராகவே கருதுகின்றோம்.

தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் குறித்து நேரடியாகவும், எழுத்து மூல கடிதங்கள் கோரிக்கைகளுக்கு ஊடாகவும் வலியுறுத்தியிருக்கிறோம். ஆனால் ஜனாதிபதி சிறிசேன எதனையும் கவனத்தில் கொள்ளவில்லை. இதில் அவர் பாரா முகமாகவே செயற்பட்டார்.

எனவே இது குறித்து பாராளுமன்றத்திலும் வலியுறுத்துவோம். அத்தோடு ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனுமதி கோரியுள்ளோம். அவர் அதற்கான நேரத்தை ஒதுக்கித் தரும் போது இந்த விடயம் தொடர்பில் வலியுறுத்துவோம் எனவும் தெரிவித்தார்.

Allgemein