கருணா தலைமையில் தமிழ் துணை இராணுவக் குழு

கடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று திடீரென ஒரே சமயத்தில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்களினால் கதிகலங்கி போயுள்ள பாதுகாப்பு உயர் வட்டாரங்கள் இந்த தீவிரவாதத்தை அடக்கும் அவசர நடவடிக்கைகளில் ஒன்றாக கருணா தலைமையில் தமிழ் துணை இராணுவ குழுக்களுக்கு மீண்டும் உயிரூட்டியிருப்பதாக அறியவருகிறது.

இந்த விடயம் தொடர்பில் பொலனறுவைப் பகுதியில் உள்ள முக்கிய படைத்தளம் ஒன்றுக்கு கடந்த மே தினத்தன்று கருணாவை அழைத்து இரகசியமாகப் பேச்சுக்களில் ஈடுபட்ட பாதுகாப்பு மற்றும் புலனாய்வு உயர் மட்டங்கள் மீண்டும் விரைந்து தமிழ் துணை இராணுவ குழுவை உருவாக்கிச் செயற்படுத்துவதற்கான பச்சைக் கொடியை அவருக்கு காட்டி இருப்பதாகவும் அவர் தனது பூர்வாங்க வேலையை ஆரம்பித்து விட்டார் எனவும் அறிய வந்தது.

இஸ்லாமிய தீவிரவாதம் கிழக்கில் அதிகம் வேர் கொண்டு இருப்பதாகக் கருதும் பாதுகாப்பு வட்டாரங்கள் கிழக்குக்கு ஊடுருவி அதனை அடக்க கருணாவின் நேரடி பங்களிப்பு தவிர்க்க முடியாது என்று கருதும் அதே நேரம் இராணுவ செயற்பாடு ரீதியிலும் அரசியல் ரீதியிலும் செயலிழந்து செல்லாக்காசாகி இருக்கும் கருணாவும் இது கொழும்புக்குத் தனது உயர் விசுவாசத்தை காட்டவும் மீண்டும் ஒரு வலுவான சக்தியாக எழுச்சி பெறவும் அருமையான வாய்ப்பு எனக் கருதுகிறார் என்றும் தெரிகின்றது.

ஏற்கனவே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த சமயம் முஸ்லிம்களுடன் அதிகளவில் முரண்பட்டு புலிகளுக்கு எதிராகவும், அதேபோன்று தமிழர்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களை சீற்றம் கொள்ளவைத்தவரும் பின்னாள்களில் புலிகள் இயக்கத்தை பலவீனப் படுத்துவதில் அரசு தரப்புக்கு அதிகம் பங்களித்த வரும், இயல்பாகவே முஸ்லிம் எதிர்ப்பு நிலைப்பாட்டுடன் செயற்பட்டு வருபவருமான கருணாவே முஸ்லிம் தீவிரவாதத்திற்கு அல்லது இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்படக் கூடிய தமிழ் துணை இராணுவ குழுவுக்கு தலைமை தாங்க பொருத்தமானவர் என்று பாதுகாப்பு தரப்புக்கள் கருதியே கருணாவிடம் துணை இராணுவக் குழுவின் தலைமைப் பதவியை வழங்கியதாக அறியமுடிந்தது.

இதேவேளை வடக்கிலும் கூட முன்னாள் போராளிகள் இயக்கங்களில் செயற்பட்டோரை ஒன்றிணைத்து துணை இராணுவக் குழுக்களை உருவாக்க அரசாங்கமும் படைத்தரப்பும் முயன்றுவருவதாக அறிய முடிகின்றது.

வடக்கில் யுத்தம் முடிவடையும் வரை  ஈபிடிபி குழு, புளொட் குழு போன்றன துணை இராணுவக் குழுக்களாகச் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Allgemein