September 27, 2022

“ஈழப் பிரச்னையில் ராகுல் நிலைப்பாடு மாறும்” வைகோ உறுதி!

அரசியலில், எதிரிகளுக்கு நேராக வார்த்தை வாளெடுத்து கம்பீரமாக முழங்குவதும், உணர்வுபூர்வமான தருணங்களில், சட்டென உடைந்து கண்கலங்குவதுமாக… எப்போதுமே உணர்ச்சிப்பிழம்பானவர் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ!

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காகத் தாயகத்திலிருந்து பரபரப்புடன் கிளம்பிக்கொண்டிருந்தவரை நேரில் சந்தித்துப் பேசினேன்…

‘‘கருணாநிதி மறைவுக்குப் பிறகு, தி.மு.க சந்திக்கவிருக்கும் முதல் தேர்தல்… எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘அண்ணன் கலைஞர் சுயநினைவுடன் இருந்த காலத்திலேயே அவரை நேரில் சந்தித்து, ‘29 வருடங்களாக உங்களுக்குக் கவசமாக, நிழலாக, உயிரைக் கொடுக்கவும் சித்தமாக இருந்த இந்த வைகோ, மீண்டும் உங்களிடமே வந்துவிட்டேன். உங்களுக்கு எப்படி இருந்தேனோ அதேபோல், தம்பிக்கு – தளபதிக்கும் உறுதுணையாக இருப்பேன்’ என்று சொன்னேன். அவரது முகமே உணர்ச்சிப் பிரவாகத்துடன் பிரகாசமானது.என்னுடைய பொதுவாழ்க்கையில் இந்தச் சந்திப்பு மட்டும் நிகழ்ந்திராமலேயே போயிருந்தால், இந்த நெஞ்சு வேகாது!

தமிழக அரசியலில், பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் இடம் என்பது… காலத்தால், நிரப்பப்பட முடியாதது. கலைஞர் என்ற மாபெரும் ஆளுமை கொண்ட தலைவர் இன்று நம்மிடையே இல்லையே என்ற வெற்றிடச் சிந்தனை தோன்றாத அளவுக்கு, எல்லாவற்றையும் யோசித்து, அனைவரையும் அரவணைத்து, கட்சியைக் கட்டுப்பாட்டுடன் கொண்டுசெல்லும் ஆளுமையும் திறமையும் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு தலைவரின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது!’’
‘‘ `ஆரம்பிக்கப்பட்ட இடத்துக்கே வந்துசேர்ந்துவிட்டார் வைகோ!’ என்று சிலர் விமர்சிக்கிறார்களே…?’’

‘‘அவர்கள் சொல்வதில், தவறேதும் இல்லையே…! இந்த மண்ணில் பிறந்து மண்ணிலேயே முடிவதுதானே வாழ்க்கைச் சக்கரம்.

மாணவனாக இருந்த சமயத்திலேயே திராவிட இயக்கத்தால், ஈர்க்கப்பட்டு கருணாநிதியால் அடையாளம் காணப்பட்டு வளர்ந்தவன் நான். வாழ்க்கையின் பெரும்பகுதியை வாழ்ந்து கழித்துவிட்டேன்; இன்னும் சொற்ப நாள்களே மிச்சமிருக்கின்றன.எத்தனையோ எதிர்ப்புகளைத் தாண்டி வளர்ந்துவந்த தியாகக் கோட்டையான இந்தத் திராவிட இயக்கத்தை ‘சிதைத்துவிடுவோம், அழித்துவிடுவோம்’ என்று பரம வைரிகளான இந்துத்துவ சக்திகள் இப்போது கொக்கரித்துக் கொண்டி ருக்கின்றன.

திராவிட இயக்கத்துக்கே பேராபத்தான இந்தக் காலகட்டத்தில், நம்முடைய உறுதியான சக்தியை தி.மு.க-வின் பக்கம் கொண்டுபோய் நிறுத்தவேண்டும் என முடிவுசெய்தே, தாய் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறோம். ஆனாலும் எங்களுடைய இயக்கம் என்றென்றைக்கும் தனித்தன்மையுடன் இருக்கும்; தி.மு.க-வுக்குப் பக்கபலமாக இருக்கும்!’’

‘`2014-ல் மோடியைப் பிரதமராக்கப் பாடுபட்ட வைகோ, இந்தத் தேர்தலில், ‘பிரதமர் மோடி பதவியில் இருப்பது நாட்டின் சாபக்கேடு’ என்று சொல்வதை மக்கள் எந்தளவு ஏற்றுக்கொள்வார்கள்?’’

‘‘மோடியும் நானும் ஒருவர்மீது ஒருவர் மிகுந்த அன்பு கொண்டவர்கள். அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது, அகமதாபாத்தில் நடைபெற்ற அமைதிப் பேரணி ஒன்றில் கலந்துகொண்டு நான் ஆங்கிலத்தில் உரையாற்றினேன். அப்போது என் பேச்சை இந்தியில் மொழிபெயர்க்க வந்த முரளிமனோகர் ஜோஷியைத் தடுத்து நிறுத்திய மோடி, ‘வைகோ பேச்சை, குஜராத் மொழியில் நானே மொழிபெயர்க்கிறேன்’ என்றுகூறி ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கக்கூடிய மோடி மொழிபெயர்த்தார்.

இப்படியொரு ஆழமான நட்பின் அடிப்படையில்தான் அவரிடம் இரண்டு கோரிக்கைகள் வைத்தேன். ‘விவசாயிகளின் வாழ்வைச் செழிக்க வைக்க, ‘நியூ டீல்’ (புதிய விடியல்) கொண்டு வரவேண்டும்; ஈழத் தமிழர் பிரச்னையில், கடந்தகால வாஜ்பாய் அரசு கையாண்ட அணுகுமுறையையே நீங்களும் கையாள வேண்டும் என்றெல்லாம் கேட்டுக்கொண்டேன். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயித்ததும் பதவிப் பிரமாண விழாவில் கலந்துகொள்ளச் சொல்லி, கொலைகார ராஜபக்சேவுக்கே அழைப்பு விடுத்தார். அடுத்ததாக, விவசாய நிலங்களைப் பிடுங்கி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்தார். ஹைட்ரோ கார்பன் திட்டம், முல்லைப் பெரியாறு, நியூட்ரினோ திட்டம், காவிரிப் பிரச்னை, ஸ்டெர்லைட் விவகாரம், நீட் தேர்வு, சமூக நீதிக்கு வேட்டு என… தொடர்ந்து தமிழக நலன்களுக்கு எதிரான நிலைப்பாடுகளைத் திட்டமிட்டு முன்னெடுத்தார்.

கஜா புயல் பாதிப்புகளைப் பார்வையிடக்கூட வராதவர், இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லி அறிக்கை விடக்கூட மனமில்லாத பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிப்பொறுப்புக்கு வந்துவிடக் கூடாது.’’

‘’ஈழத்தமிழர் விவகாரத்தில், தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியை மிகக்கடுமையாக விமர்சித்த நீங்கள் இப்போது அதே கூட்டணியில் இணைந்திருப்பதை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது நியாயம்தானே?’’

“அதற்கு அ.தி.மு.க-வுக்குத் தகுதி கிடையாது. ஈழத்தமிழர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எம்.ஜி.ஆர் உதவி செய்தார். ஆனால், ஜெயலலிதாவோ ‘ராணுவத்தை அனுப்பி விடுதலைப்புலிகளைக் கைது செய்யவேண்டும்’ என்றார். புலிகள் அமைப்பின் மீது தடையும் கொண்டுவந்தார். மத்திய பா.ஜ.க அரசும்கூட கடந்த 5 ஆண்டுகளில், ஜெனிவா மனித உரிமை கவுன்சிலில், முழுக்க முழுக்க இலங்கையை ஆதரித்தேதான் நிலைப்பாடு எடுத்தது.

ஈழத்தமிழர் பிரச்னையில், இந்திராகாந்தி எடுத்த நிலைப்பாட்டையே ராஜீவ் காந்தியும் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக அதிகாரிகளோடு மற்றும் பலர் சேர்ந்து அவருக்குத் தவறான வழிகாட்டுதலைக் காட்டிவிட்டனர். ஆனால், ராகுல்காந்தி, தமிழர்களுடைய உணர்வுகளை ஆழமாகப் புரிந்துவைத்திருக்கிறார். ஆகவே, ராகுல்காந்தியின் நிலைப்பாடு மாறும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ‘இனி ஈழத்தமிழர்களைப் பாதுகாத்தால்தான், பூகோள ரீதியாக இந்தியாவையும் பாதுகாக்க முடியும்’ என்ற உண்மை நிலையை ராகுல்காந்தியும் புரிந்துகொள்வார்.

சுதந்திரத் தமிழீழம்தான் என் வாழ்க்கையின் லட்சியம்! அந்த லட்சியத்தை எட்டுவதற்கு ஆழமாக யோசித்து, ரொம்பவும் எச்சரிக்கையாகத்தான் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். என்னுடைய வியூகம் எப்படியிருக்கும் என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்!’’
‘`பா.ம.க-அ.தி.மு.க கூட்டணி பற்றிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், ‘தி.மு.க மீது வைகோ வைக்காத விமர்சனமா?’ என்று எதிர்க்கேள்வி கேட்டிருக்கிறாரே…?’’

‘`அ.தி.மு.க-வுடன் பா.ம.க கரம் கோத்தது அவர்களது விருப்பம். ஏனெனில், ஐயா ராமதாஸ் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஆனால், அவர்கள் கூட்டணி வைத்ததையும், அண்ணன் தம்பிகளான நாங்கள் சண்டை போட்டுவிட்டு, திரும்பக் கூட்டணி சேர்ந்ததையும் ஒப்புமை காட்டுவதில், ஒரு விழுக்காடுகூட அர்த்தமில்லை. ஏனெனில், நான் திராவிட இயக்கத்தால் வார்க்கப்பட்டுக் கலைஞரால் வளர்க்கப்பட்டவன். பா.ம.க-வும் அ.தி.மு.க-வும் அண்ணன் தம்பிகளாக இருந்தார்களா?’’

‘`அற்புதம்மாள் நடத்திய மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் ம.தி.மு.க பங்கேற்காததற்குக் காரணம் என்ன?’’

‘`ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை ம.தி.மு.க நடத்தியது. அதில் தி.க, தி.மு.க, வி.சி.க, கம்யூனிஸ்டுகள் என அனைவரும் கலந்துகொண்டனர். ஆக, இவ்விஷயத்தில் நாங்கள் எங்கள் கடமையைச் செய்தோம். இப்போது அவர்களது முயற்சியில், ‘மனிதச் சங்கிலிப் போராட்டம்’ நடத்தியிருக்கிறார்கள். இதுவும் நல்லதொரு வரவேற்கத்தக்க முயற்சிதான்!’’

‘`அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தீர்களா?’’

‘`விஜயகாந்த்மீது நான் மிகுந்த அன்பும் மதிப்பும் வைத்திருக்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பே அவர் உடல்நலமில்லாமல், மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோது இரண்டு முறை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தேன். ஆனால் அப்போதும் கூட என்னுடன் போட்டோகிராபரையோ பத்திரிகையாளரையோ அழைத்துப் போகவில்லை.

இப்போது, கூட்டணி சம்பந்தமாக எல்லோரும் சந்தித்துக்கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், விஜயகாந்தை நேரில் சந்தித்தால்… அது பல்வேறு யூகங்கள் மற்றும் விமர்சனங்களுக்கு வழி வகுத்துவிடும். அதனால், தொலைபேசியிலேயே விஜயகாந்தின் நலம் குறித்து சுதீஷிடம் கேட்டுக்கொண்டேன்.’’

‘`ஆதரித்தாலும் எதிர்த்தாலும் வைகோ அளவுகடந்து செயல்படுகிறார் என்ற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

(சிரிக்கிறார்…) ‘`அது என்னுடைய பலவீனம் என்று மற்றவர்கள் கருதுகிறார்கள். ஆனால், அது என் பலம் என்றே நான் கருதுகிறேன்.

எந்தவொரு முடிவெடுத்தாலும் அதில், ஊசலாட்டம் எதுவுமின்றி உறுதியாக நிற்பேன். சக மனிதனின் கண்ணீரைத் துடைப்பதற்கும், இந்தப் பூமிப்பந்தில் தமிழனுக்கென்று ஒரு நாடு அமைவதற்கும் என் வாழ்க்கை துரும்பளவாவது பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்கிறேன்!’’

‘`தேர்தலுக்குப் பிறகு, ராஜ்யசபாவில், வைகோவின் கம்பீர கர்ஜனையை எதிர்பார்க்கலாமா?’’

‘`தி.மு.க எங்கள்மீது கொண்ட அளவற்ற அன்பினால், ஒரு லோக்சபா தொகுதியையும் ஒரு ராஜ்யசபா தொகுதியையும் தந்திருக்கிறது. மாநிலங்களவைத் தேர்தல் வருகிற ஜூன் மாதம்தான் நடைபெறவிருக்கிறது. அதில், வேட்பாளராக யார் கலந்துகொள்வது என்பதைக் கட்சிதான் முடிவெடுக்கும்!’’

-ஆனந்த விகடன் –