Oktober 1, 2022

நாட்டை துண்டாட முற்பட்டால் நந்திக்கடல் நிலையே ஏற்படும் -எச்சரிக்கிறார் போரை நடத்திய இராணுவ தளபதி!

நாட்டை துண்டாட எவராவது முற்பட்டால் அவர்களுக்கும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நந்திக்கடலில் நேர்ந்த நிலைமையே ஏற்படும் என்று சிறிலங்கா இராணுவத்தின் ஓய்வுபெற்ற தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் வைத்து புலம்பெயர் தமிழர்களை “கழுத்தை அறுக்கும்” சைகைளை காண்பித்து தற்போது வழக்கு விசாரணைக்கு முகம்கொடுத்துள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் செயல் சரியானது என்று தெரிவித்துள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, உண்மையான இராணுவ அதிகாரியின் வெளிப்பாடே அது என்றும் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான வியத்மக அமைப்பினால் “நாடும் – நாளையும்” என்ற தலைப்பில் நாடு தழுவிய ரீதியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள கருத்தரங்கின் முதலாவது கருத்தரங்கு மார்ச் 31 ஆம் திகதியான நேற்றைய தினம் கொழும்பை அண்மித்த பியகம பகுதியில் இடம்பெற்றது.

அங்கு சிறப்புப் பேச்சாளராக கலந்துகொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றார்

“அனுபவம்மிக்க இராணுவ அதிகாரியொருவருக்கு அரிதாகவே மயிர் கூச்செறியும். ஆனால் சாதாரண மனிதனுக்கு உத்வேகம் அடையும் சந்தர்ப்பங்களிலும், அதிர்ச்சியடையும் நிகழ்வுகளிலும் மயிர் கூச்செறியும். ஆனால் அனுபவம்மிக்க இராணுவ அதிகாரிக்கு அவ்வாறு நிகழ்வது என்பது அரிதாகவே இடம்பெறுகின்றது. எமது வணக்கத்துக்குரிய பௌத்த பிக்குகளே! இன்று இந்த மண்டபத்தில் இருக்கும் போது அனுபவமிக்க இராணுவ அதிகாரியான எனது மயிர் கூச்செறிந்தது. நீங்கள் கேட்கலாம் ஏன் ஜெனரல் அப்படி நடந்தது என்று. இங்கு காண்பிக்கப்பட்ட காணொளியில் எமது நாட்டின் தேசியக் கொடியை கீழேபோட்டு மிதித்துக்கொண்டிருப்பதைக் கண்டதும் மயிர் கூச்செறியாவிட்டால் அவன் சிறிலங்கா பிரஜையே அல்ல. உங்களுக்கு நினைவில் இருக்கும் இற்றைக்கு ஒரு வருடமும், ஒரு மாதத்துக்கும் முன்னர் இலண்டனிலுள்ள சிறிலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இடம்பெற்ற சுதந்திரத்தினக் கொண்டாட்டம் இடம்பெற்றபோது, புலம்பெயர் தமிழ் அமைப்பினர் வந்து தடைகளை ஏற்படுத்தினர். அப்போது அங்கிருந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ வெளியில் வந்து, ஒருவகையான சைகையை காண்பித்துவிட்டு உள்ளே சென்றார்.

எமது நாட்டில் நல்லிணக்கம் தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளும் பலரும், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் அந்த செயல் இராஜதந்திர செயற்பாடுகளுக்கு பொருத்தமற்றது என்றும், கீழ்த்தரமான செயல் என்றும் குற்றம்சாட்டினர். எனினும் தனது தாய்நாட்டின் தேசியக் கொடியை கீழே போட்டு மிதித்துக்கொண்டிருப்பதை கண்டதும் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கும் இராணுவ அதிகாரியொருவர் இருந்தால், அந்த நபர் இராணுவ அதிகாரியாக இருக்க முடியாது, நடிப்பதற்காக இராணுவ சீருடை அணிந்தவராகவே இருக்க முடியும். உங்களுக்கு நினைவில் இருக்கலாம், அந்த இராணுவ அதிகாரி “கழுத்தை அறுப்பதாக” மிகவும் பயங்கரமான சைகையை காண்பித்து அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் இடம்பெற்ற மறுநாள் திவயின ஆசிரியரான எனது நண்பர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இது என்ன என்று கேட்டார். அதற்கு நான், இதுதான் இரத்தம் துடிப்பது என்று பதிலளித்தேன்.

கடந்தவாரம் வடமாகாணத்தின் முன்னாள் உறுப்பினரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் மைத்துனரான சிவாஜிலிங்கம் என்ற நபர் ஜெனீவாவில் வைத்து எமது பிரதிநிதிகளை, அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அல்ல, எம்மையும், உங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சென்ற குழுவினரை அச்சுறுத்தியதை நாம் கண்டோம். எமது கோரிக்கைகளை பெற்றுக்கொடுக்காவிட்டால் நாட்டை இரண்டாக அல்ல நான்காக துண்டாடுவோம் என்றார் சிவாஜிலிங்கம். நாட்டை இரண்டாக துண்டாட உங்களைவிட பல மடங்கு பலம்வாய்ந்த, சக்திமிக்க நபர் ஒருவர் வந்தார். அவரது பெயர்தான் வேலுப்பிள்ளை பிரபாகரன். நாட்டை துண்டாடவந்த அந்த வேலுப்பிள்ளை பிரபாகரனை நாம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி நந்திக்கடலில் வைத்து ஒட்டுமொத்தமாக இல்லாதொழித்தோம். நாட்டை இரண்டாக துண்டாட வந்ததால் நேர்ந்த நிலமை அது. அப்படியாயின் யாராவது ஒருவர் நாட்டை நான்கு துண்டுகளாக பிளவுபடுத்த வருவாரானால் அந்த நபருக்கு நாம் உயிருடன் இருக்கும் வரை, இந்த நாட்டை நேசிப்பவர்கள் என்ற இனத்தவர்களின் இறுதி மூச்சு இருக்கும் வரை கனவாகவே இருக்கும். அவ்வாறு செய்ய வந்தால் அதன் விளைவுகளை அப்போது பார்த்துக்கொள்ளலாம்.

தாய்நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்டமை, பயங்கரவாதிகள் வசமிருந்த நிலப் பிரதேசத்தை முழுமையாக மீட்டு தாய்நாட்டுடன் மீண்டும் இணைத்தமை, சிறிலங்கா பிரஜைகளான சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் என சிறிலங்கா பிரஜைகள் நாளாந்தம் உயிரிழப்பதை தடுத்தமை, கிராமங்களுக்கு நாளாந்தம் சடலங்கள் செல்வதை நிறுத்தியமை, பேருந்துகள், ரயில்களில் குண்டு வெடிப்பதை நிறுத்தியமை, தற்கொலைதாரிகளை முற்றாக ஒழித்தமை, எமது நாட்டு மக்களினதும் எதிர்கால சந்ததியினரும் ஒற்றுமையாகவும், சமாதானமாகவும், அச்சமின்றி, சந்தோசமாகவும், கௌரவமாகவும் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக்கொடுத்தமை குற்றம் என்றால், அவ்வாறான நிலமையை ஏற்படுத்த போரிட்டமை, குற்றம் என்றால் அதற்காக வெலிக்கடை அல்ல தூத்துக்குடி சிறைச்சாலைக்கும் சென்று எமது எஞ்சிய வாழ்நாளை கழிக்க நாம் தயாராக இருக்கின்றோம். நண்பர்களே, நாட்டுக்காக இந்த அளவுக்கு சேவையாற்றியதற்காகவும், எதிர்கால சந்ததியினர் நிம்மதியாகவும், அச்சமின்றியும் வாழ்வதற்காக சூழலை ஏற்படுத்திக்கொடுத்தமை குற்றமாக கூறி, சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் படையினரை பழிவாங்கும் படலமொன்றை முன்னெடுப்பது நியாயமா?. குறைந்தபட்சம் கௌரவமாக தாய்க்கும் – தந்தைக்கும் பிறந்த குழந்தைக்கு இவ்வாறு சிந்திக்க முடியுமா அல்லது இவ்வாறான செயல்களைத்தான் செய்ய முடியுமா?

அளப்பரிய அர்ப்பணிப்பை செய்து நாம் இந்த வெற்றியை பெற்றுக்கொண்டது எதற்காக?. இந்த வெற்றிக்காக நாம் எமது ஒட்டுமொத்த இளம் பராயத்தையும் அர்ப்பணித்தது அன்று பிரபாகரனுக்கு துப்பாக்கியாலும், குண்டுகளாலும் பெற்றுக்கொள்ள முடியாது போன தமிழீழத்தை, உங்களதும் – எங்களதும் வாக்குகளால் ஆட்சிபீடம் ஏறியவர்கள் தட்டில் வைத்து தானம்செய்வதற்கு அல்ல. ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே!. இன்று எமது நாட்டில் இரண்டு இனங்களே உள்ளன. அன்றுதொட்டு இந்த நாட்டில் சிங்கள இனம், தமிழர்கள், முஸ்லீம்கள், பறங்கியர்கள் மற்றும் மலாயர்கள் என இனங்கள் இருப்பதாக கூறிவருகின்றோம். ஆனால் இவை இன்று பின்னால் தள்ளப்பட்டு இன்று இரண்டு இனங்கள் மட்டுமே முன்னால் வந்திருக்கின்றன. அந்த இனங்கள், தாய் நாட்டை நேசிப்பவர்களின் இனம், தாய்நாட்டுக்கு துரோகம் இழைக்கும் – காட்டிக்கொடுப்பவர்களின் இனம். இன்று இந்த மண்டபத்தில் இருக்கும் நான் உட்பட நீங்கள் அனைவரும், தாய் நாட்டை நேசிக்கும் இனத்தை சேர்ந்தவர்கள். அப்படியாயின் நண்பர்களும் தாய்நாட்டையும், எதிர்கால சந்ததியினரையும் நேசிக்கும் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ரீதியில், நல்லிணக்கம் என்ற போர்வையில் தற்போதைய அரசாங்கத்துக்கு, புலம்பெயர் தமிழர்களுடனும், சர்வதேச சமூகத்துடனும் கூட்டுச் சேர்ந்து, அன்று பிரபாகரனின் அதிகாரம் வடக்கில் இருக்கும் போது வாலை சுருட்டிக்கொண்டு நாய்குட்டிகளைப் போல் இருந்துவிட்டு இன்று வெளியில் வந்து நாய்களைப் போல் குரைத்துக்கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலருக்காக எமது நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுக்க நாம் தயாரில்லை.

காட்டிக்கொடுப்பது தொடர்பில் நீண்ட வரலாற்றைக்கொண்ட இவர்களது முழுமையான பட்டியலை நான் இங்கு கூறப்போவதில்லை. எனினும் அண்மைக்காலமாக அதாவது 2500 ஆண்டுகள் வரலாற்றைக்கொண்ட இனத்தவர்கள் என்று பெருமிதம் கூறிக்கொண்டிருக்கும் எமது இனத்தை இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து முதன்முதலாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கு சென்ற எமது நாட்டின் வெளிவிவகார அமைச்சர் கைகளை உயர்த்தி நாட்டைக் காட்டிக்கொடுத்தார். எனினும் எமது அரசாங்கத்துக்கு தேவை இருந்திருந்தால், குறைந்தபட்சம் இம்முறை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில், அன்று வெளிநாட்டவர்களின் அடிமைகளைப்போல் ஜெனீவாத் தீர்மானத்துக்கு வழங்கியிருந்த இணை அனுசரணையிலிருந்து விலகியிருக்கலாம். ஆனால் வெளிவிவகார அமைச்சர் அங்கு சென்று ஜெனீவாத் தீர்மானத்தின்படி வெளிநாட்டு நீதிபதிகளை இணைத்துக்கொள்ள எமது நாட்டின் அரசியல் சாசனத்தில் இடமில்லை என்று அறிவித்தார். அதனை நாம் பாராட்டுகின்றோம். அப்படியாயின் எதற்காக மீண்டும் அந்தத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கினீர்கள். அன்று செய்த அதே துரோகத்தை எதற்காக இம்முறையும் செய்தீர்கள். அவ்வாறு ஜெனீவாத் தீர்மானத்துக்கு மீண்டும் இணை அனுசரணை வழங்கிவிட்டு நாட்டுக்கு திரும்பிய நிலையில், வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்க முடியாது என்று கூறுவதால் என்ன பிரயோசனம் இருக்கின்றது. அன்று செய்த இந்தத் துரேகம் உலக நாடுகளில் எந்தவொரு நாட்டிலும், எமது நாட்டின் வரலாற்றில் எவரும் செய்யாத துரோகத்தை இரண்டாவது தடவையாகவும் தற்போதைய நல்லிணக்க அரசாங்கம் மீண்டும் ஜெனீவாவில் செய்துவிட்டது”என்றார்.