September 27, 2022

காலத்தை நீடிக்கிறது ஜெனிவா! காலத்தை இழுத்தடிக்கிறது இலங்கை! பனங்காட்டான்

குற்றம் புரிந்த அரசாங்கத்தின் உள்ளக நீதி விசாரணைக் கட்டமைப்பின் மீது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேர்மையான நீதி நிவாரணம் கிடைக்குமா என்ற சந்தேகமே 2015ஆம் ஆண்டு 
தீர்மானத்தில் கலப்பு நீதிப் பொறிமுறையை வலியுறுத்தியது என்பதைத் தெரிந்தும் இப்போது அதனை மறுத்துரைப்பது நீதி விசாரணைக்கு இலங்கையில் இடமில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. 

ஜெனிவாவில் இலங்கையர்களின் இவ்வருட மார்ச் மாதத் திருவிழா முடிவடைந்துவிட்டது.

நம்பகத்தன்மையையும், பொறுப்புக்கூறலையும் தேவைக்கேற்ப வாலாயம் பண்ணும் உலகநாடுகள், ஜனநாயக விழுமியம் என்னும் பெயரில் வலி சுமக்கும் ஈழத்தமிழ் மக்களின் நெற்றியில் வழக்கம்போல பெரிய நாமம் போட்டு திருவிழாவை நிறைவு செய்துள்ளன.

போர்க்கால குற்றங்களை மறைக்கவும் மனிதகுலத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்குத் திரையிடவும் தொடர்ந்து முயன்று வரும் இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை எந்த நாட்டினதும் எதிர்ப்பின்றி ஏகமனதாக ஜெனிவா நிறைவேற்றியுள்ளது.

ஜெனிவாவின் நாற்பதாவது கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு சில நாட்களுக்கு முன்னரே எடுக்கப்பட்ட இந்த முடிவு பிரேரணை மூலம் அதிகாரபூர்வமாக நிறைவு கண்டுள்ளது.

இலங்கையின் ஆறு தமிழ்க் கட்சிகள் எழுத்து மூலம் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாதெனக் கேட்க, தமிழ் மக்களின் தலைமை என்று தம்மை அழைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பூரண ஆசிர்வாதத்துடன் இரண்டு வருட கால நீடிப்பை இலங்கை பெற்றுள்ளது.

ஜெனிவா விவகாரத்தில் மைத்திரி அணி, மகிந்த அணி, ரணில் அணி என மூன்றும் முரண்பட்டுக் கொண்டிருப்பதாக ஊடகங்கள் கூறிக்கொண்டிருக்க, இலங்கைக்கு அனுசரணையாக ஜெனிவாவில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முற்றுமுழுதாக கடைந்தெடுத்த பொய்யையும் புரட்டையும் ஜெனிவா அமர்வில் எடுத்துக்கூறியவர் ரணிலின் நம்பிக்கைக்குரிய குழுவுக்குத் தலைமை தாங்கிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன. ஐக்கிய தேசிய கட்சியில் எப்போதும் தேசியப் பட்டியல் வழியாக பின்கதவால் அமைச்சர் பதவியைப் பெற்று வருபவர் இவர்.

பொறுப்புக்கூறல் பொறிமுறையை இலங்கை அரசு அமுல்படுத்துவதில் மந்தகதியாக தொழிற்படுவதாக சுட்டிக்காட்டிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பச்சலற், ஜெனிவாவில் 2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை நேர்மையாகக் கடைப்பிடிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

அடிப்படைத் தீர்மானங்களில் ஒன்றான சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிப் பொறிமுறை கட்டாயம் என்பதையும் ஆணையாளர் சுட்டத்தவறவில்லை.

இதற்குப் பதிலளித்த திலக் மாரப்பன கலப்பு நீதிப் பொறிமுறைக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதென நேரடியாகத் தெரிவித்தார். இதற்கு இவர் எடுத்துக்கூறிய காரணம் அரசியல் பாதையில் சிறுபிள்ளைத்தனமானது.

சர்வதேச நீதிபதிகளை ஏற்பதாயின் இலங்கையின் அரசமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டுமெனவும், அதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் வேண்டுமெனவும், அத்துடன் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் இது வெற்றிபெற வேண்டுமெனவும் மாரப்பன தெரிவித்தது விசித்திரமான பொய்யுரை.

2015இல் அமெரிக்க சமர்ப்பித்த ஜெனிவா பிரேரணையில் கலப்பு நீதி விசாரணைப் பொறிமுறை அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்பிரேரணையின் இணை அனுசரணையாளராக இலங்கை அரசு செயற்பட்டதை திலக் மாரப்பன மறந்திருக்க முடியாது.

அவ்வேளையில் மைத்திரி – ரணில் அரசின் சட்டம் மற்றும் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சராக பதவி வகித்த இவர், அப்போது கலப்பு நீதிப் பொறிமுறை அரசியலமைப்புக்கு முரணானதென மறந்தும் வாய்திறக்கவில்லை. நான்காண்டு கடந்த பின்னர் இப்போதுதான் இது தெரிய வருகிறதா?

அரசியலில் கால் வைப்பதற்கு முன்னர் அரசாங்க தரப்பு சட்டத்தரணியாகவும் பின்னர் சொலிஸிட்டர் ஜெனரல், அட்டர்னி ஜெனரல் ஆகிய பொறுப்பு வாய்ந்த நீதித்துறை உயர்பதவிகளை வகித்தவருமான மாரப்பன, இப்போது நேர்மையான நீதி விசாரணைக்கென தீர்மானிக்கப்பட்ட கலப்பு விசாரணை நீதிப்பொறிமுறையை, அதுவும் – காலநீடிப்புப் பெறும் வேளையில் மறுத்துரைப்பது இவரதும் இவர் சார்ந்த அரசினதும் நேர்மையின்மையை எடுத்துக்காட்டுகிறது.

மகிந்த அரசாங்கத்தில் 2011ஆம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சராகவும் திலக் மாரப்பன இருந்தது கவனிக்கப்பட வேண்டியது.

குற்றம் புரிந்த அரசாங்கத்தின் உள்ளக நீதி விசாரணைக் கட்டமைப்பின் மீது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேர்மையான நீதி நிவாரணம் கிடைக்குமா என்ற சந்தேகமே 2015ஆம் ஆண்டு தீர்மானத்தில் கலப்பு நீதிப் பொறிமுறையை வலியுறுத்தியது என்பதைத் தெரிந்தும் இப்போது அதனை மறுத்துரைப்பது நீதி விசாரணைக்கு இலங்கையில் இடமில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

மனித உரிமைகள் ஆணையாளர் தமதுரையில் முக்கியமாகச் சுட்டிக்காட்டிய சில:

– வன்முறைகளுடன் சம்பந்தப்பட்டவர்களை தண்டனையிலிருந்து தப்ப வைப்பது சிறுபான்மை மக்களின் எதிர்கால பாதிப்புக்கு இடமளிப்பதாகும்.

– போர்க்குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களை புதிதாக உயர் பதவிக்கு நியமிப்பது பொருத்தமற்றது. மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை படைத்துறை பிரதானியாக நியமித்தது கவலை தருவது.

– போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக வெளிப்படைத்தன்மையுள்ள விசாரணை அவசியம்.

– இலங்கையில் சித்திரவதைகள் தொடர்கின்றன. ஐ.நா.வின் சித்திரவதைக்கெதிரான பிரகடனத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவைகள் எதற்கும் பதிலளிக்காத அல்லது பதிலளிக்க முடியாத நிலையில் இலங்கைக் குழுவின் தலைவரான திலக் மாரப்பன அடுத்தடுத்து பல பொய்களை எடுத்துரைத்தார்.

– காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. (காலவரையற்ற இழுத்தடிப்புக்கான ஓர் அலவலகம்)

– இழப்பீடு வழங்கும் பணியகம் நிறுவப்பட்டுள்ளது. (ஜெனிவாவில் தெரிவிப்பதற்கென சில மாதங்களுக்கு முன்னர் அவசரம் அவசரமாக அறிவிக்கப்பட்ட ஒரு பணியகம்)

– உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையாளர் செயற்பாடு இறுதிக்கட்டத்தை அண்மித்துள்ளது. (பெயரளவில் அமைச்சரவைக்கு சில வாரங்களுக்கு முன்னர் இப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது)

– பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான வழக்குகளை துரிதமாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (பத்தாண்டுகளுக்கு மேலாக சொல்லப்படும் கதை இது)

– பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச முறையிலான புதிய சட்டத்தை உருவாக்கும் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. (மைத்திரி அரசு பல மாதங்களாக அறிவித்துவரும் ஒரு பம்மாத்து இது)

சில ஊடகங்கள் சில செய்திகளை வெளியிடும்போது இறுதியில் எனத் தெரியவந்துள்ளது, என அறியவந்துள்ளது| என்ற வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவது வழக்கம். இதன் அர்த்தமானது இச்செய்தி உறுதி செய்யப்படாதது, நம்பகத்தன்மையற்றது என்பதாகும்.

அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்த அனைத்தும் எந்தளவுக்கும் நம்பிக்கையற்றவை என்பதை அவரது வார்த்தைப் பிரயோகங்கள் தெரிவிக்கின்றன.

மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட காணாமலாக்கப்பட்டோர் ஆணைக்குழு இப்போது பெயர் மாற்றப்பட்டு புதிய உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டு ஏதோ புதிதாக உருவாக்கப்பட்டது போன்ற தோற்றப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பழைய பானம் புதிய பாத்திரத்தில் என்பது மட்டுமே.

மறுபுறத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் போராட்டம் ஆண்டுக்கணக்கில் நீண்டு செல்கிறது.

எல்லாவற்றுக்கும் பொதுவான ஒரு சொல்லாக ஷநடவடிக்கை எடுக்கப்படுகிறது| என்பது அமைந்துள்ளது.

இதனை நம்பியே மீண்டும் இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் புதிய தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டாண்டுகளில், காலங்கள் குறிப்பிடப்பட்டு, காலவரையறையில் இத்தீர்மானத்தின் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இனி என்ன? அடுத்த இரண்டாண்டுகள் இலங்கை அரசுக்குப் பொற்காலம். இக்காலத்தில் பல தேர்தல்கள் அங்கு நடைபெறும். கட்சிகள் கட்டில்களில் மாறி ஏறும். சில புது முகங்கள் அங்குமிங்கும் காட்சி தரும். ஜெனிவாத் தீர்மானமும் அவ்வப்போது புது வடிவங்கள் பெறும்.

இம்மாதம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிராகரிக்கப்படலாம். அவைகளை ஏற்க முடியாதென புதிய சிங்களத் தலைமைகள் நிச்சயம் சொல்லும்.

தமிழர் தலைமை சிங்கள தேசத்துக்கு உடன்பாடுள்ளதாகத் தொடரும்வரை, ஜெனிவா என்பது தமிழருக்கு ஒரு தொடர்கதைதான்.

காலத்தை நீடிக்கிறது ஜெனிவா. காலத்தை இழுத்தடிக்கிறது இலங்கை.

முள்ளிவாய்க்கால் பத்தாண்டு நிறைவுக்காலம் முன்வாசலில் வந்து நிற்கிறது ஞாபகமிருக்கட்டும்!