Oktober 1, 2022

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருக்கு புகழாரம் சூட்டிய மைத்திரி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் பெருமைப்படுத்தி உரை நிகழ்த்தியுள்ளார்.

இலங்கையிலுள்ள 28 சதவீத வனப்பகுதியில் 20 வீதத்தை தலைவர் பிரபாகரனே பாதுகாப்பு செய்து வந்துள்ளதாக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தனது சொந்த மாவட்டமான பொலன்னறுவையில் வைத்து கூறியுள்ளார்.

சர்வதேச சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பொலன்னறுவை – திம்புலாகல வெஹெரகல மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், ஸ்ரீலங்காவிலுள்ள 28 சதவீத வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்டிருப்பதாக பெருமையாக நாம் கூறிக்கொண்டாலும் அதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரே காரணகர்த்தா என்று தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

‘ஸ்ரீலங்காவிலுள்ள வனப்பகுதியின் அளவு நூற்றுக்கு 28 வீதம் காணப்படுகின்றது. இந்த 28 சதவீத வனப்பகுதியில் அதிகளவான பகுதி வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்றது. வடக்கில் வனப்பகுதிகளை அப்படியே பாதுகாத்து வந்தது யார்? தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் செய்தது அனைத்துமே தவறுகளாகும். அவர் ஆயுததாரி. அவர் மிகவும் கெட்டவர். எனினும் அவர் செய்த மிகச் சிறந்த செயற்பாடுதான் வனப்பகுதிகளைப் பாதுகாத்ததாகும்.

வனப்பகுதிகளை அவர் பாதுகாத்ததற்கான நோக்கமானது, அவர் ஒரு கெரில்லாத் தாக்குதல் தலைவராவார். கெரில்லா தாக்குதல்களுக்கு வனப்பகுதி அவசியமாகும். அதற்காகவே அவர் வனப்பகுதியை பாதுகாப்பு செய்தார். யுத்தம் இடம்பெற்ற பகுதிகளைத் தவிர ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் உள்ள வனப்பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன.

அரசியல்வாதிகள், ஊழல்மிகுந்த சில அரச அதிகாரிகள், மரக்கடத்தல் காரர்கள், சட்டவிரோத வர்த்தகம் செய்கின்ற பிரிவினர் ஆகியோர் நாட்டின் வனப்பகுதிகளை அழித்தார்கள். பிரபாகரன் தனக்குரிய பகுதிகளைப் பாதுகாப்பு செய்தார். அதனால் நாங்கள் மிகவும் பெருமையாக கூறுகின்றோம் எமக்கு 28 வீத வனப்பகுதி பாதுகாப்பாக உள்ளது என்று. அதிலும் 20 சதவீதமான வனப்பகுதி வடக்கிலேயே காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.