September 28, 2022

சூடுபிடித்த ஜெனீவா! கடுமையாக நிராகரித்த சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு!!

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய ஆட்சியிலும் ஆட் கடத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகள் உட்பட கொடூரமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை சிறிலங்காவின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஜெனீவாவில் வைத்து நிராகரித்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் மார்ச் 20 ஆம் திகதியான இன்றைய தினம் சிறிலங்காவின் மனித உரிமைகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையடலிலேயே சிறிலங்கா அரசைப்போல் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவும் சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்திருக்கின்றது.

இந்த விவாதத்திற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேலே பெஷிலே முன்வைத்த விசேட அறிக்கையில், சிறிலங்கா இராணுவத்தினர் உள்ளிட்ட அரச படையினரால் 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் ஆட் கடத்தல்கள், சட்டவிரோதமாக தடுத்துவைத்தல் மற்றும் சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகள் தொடர்பில் நம்பத்தகுந்த தகவல்கள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு தொடர்ந்தும் கிடைத்துவந்தன.

இந்த குற்றங்கள் பெண்களுக்கு மாத்திரமன்றி ஆண்களுக்கு எதிராக வடக்கில் மேற்கொள்ளப்படுவதாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.பீ.சீ தமிழுக்கு கிடைத்த தகவல்களுக்க அமைய ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் இருவர் பல மாதங்களாக, புலம்பெயர்ந்துள்ள பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் உட்பட இலங்கைப் பிரஜைகளை சந்தித்து இந்த விசாரணைகளை நடத்தியிருக்கின்றனர்.

இந்த தகவல்கள் தொடர்பில் உடனடியாக சுயாதீன மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையொன்றை மேற்கொள்ளுமாற சிறிலங்கா அரசிடம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பெஷிலே கோரிக்கை விடுத்திருந்தார்.

எவ்வாறாயினும் இவ்வாறான முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கவில்லை என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு இன்றைய தினம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் தெரிவித்திருக்கின்றது.

இவ்வாறான பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டுமாயின், தேவையான தகவல்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெஷிலேயிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இன்றைய அமர்வுகளில் சிறிலங்கா தொடர்பில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட முக்கியமான கருத்துக்கள் மற்றும் சிறிலங்கா அரசின் பதில்கள் தொடர்பான விரிவான செய்திகள் பிரித்தானிய நேரப்படி இரவு எட்டு மணிக்கு ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்தி நேரத்தில் எதிர்பாருங்கள்…