Oktober 2, 2022

வடக்கு தமிழ் மக்கள் தொடர்பில் மைத்திரியின் புதிய கண்டுபிடிப்பு!

தமிழ் மக்களின் தேசியப்பிரச்சனையான இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வொன்றை முன்வைக்க முடியாமைக்கு, வடக்கில் நிலவும் சாதியப்பிரச்சனையே பிரதான காரணம் என்று சிறிலங்காவின் அரச தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன புதிய தகவலொன்றை தெரிவித்திருக்கின்றார்.

இனப்பிரச்சனைக்கான நிரந்த தீர்வை காண்பதற்கான அரசியல் தீர்வை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்குவது, பொறுப்புக்கூறல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதை வலியுறுத்தி முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை நாளைய தினம் ஜெனீவாவில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிலையில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மற்றும் குற்றவியல் டிப்ளோமா பாடநெறியையும் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறிலங்கா ஜனாதிபதி, தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இனப்பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருக்கின்ற போதிலும் அதற்கு வடக்கில் நிலவும் சாதிப் பிரச்சனைகள் தடையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான கற்கை பீடத்தின் சமூகவியல் டிப்ளோமா பாடநெறியையும் குற்றவியல் டிப்ளோமா பாடநெறியையும் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் மார்ச் 19 ஆம் திகதியான இன்றைய தினம் பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

டிப்ளோமா கற்கைநெறியை முடித்துக்கொண்ட மாணவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்பட பல்வேறு துறைகளைச்சேர்ந்த பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்கா ஜனாதிபதி, வடக்கில் நிலவும் மோசமான சாதியப் பிரச்சனையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தடையாக இருப்பதாக குறிப்பிட்டார்.

“நாட்டின் தேசிய நல்லிணக்கம் தொடர்பான பிரச்சனையை தீர்த்துவைக்க முற்படும் போது வடக்கில் சாதிப் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள முடியாது இருப்பதே நான் மிகவும் கவலைப்படும் பிரதான பிரச்சனையாக இருக்கின்றது. நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக நாம் வடக்கிற்கு சென்றால், வடக்கில் வாழும் மக்களிடையே எந்தவொரு நல்லிணக்கமும் இல்லாதிருப்பதே பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதைவிட, தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதைவிட, வடக்கில் சாதியால் பிளவுபட்டிருக்கும் மக்களை இணைக்க முடியாமை பிரதான பிரச்சனையாக இருக்கின்றது”.

சிறிலங்கா இராணுவத்தினர் உட்பட அரச படையினர் கையகப்படுத்தி வைத்திருந்த பொதுமக்களின் காணிகளில் 90 வீதமான காணிகளை விடுவித்துள்ளதாக அடித்துக் கூறும் சிறிலங்கா ஜனாதிபதி, எனினும் இவை தொடர்பான உண்மையான புள்ளிவிபரங்களை அறிந்துகொள்ளாது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேலே பெஷிலே அறிக்கையிட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் புதிய அறிக்கை குறித்த தனது எதிர்ப்பை கொழும்புக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் முன்னாள் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ஜெஃப்ரி பெர்ட்மனிடம் தெளிவாக குறிப்பிட்டதாகவும் சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்தார்.

“போரின் போது வடக்கில் படை முகாம்களுக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளை மீண்டும் பொது மக்களிடம் ஒப்படைப்பதில் சிறிலங்கா அரசு அசமந்தமாக செயற்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் ஜெனீவாவில் வெளியிட்டிருந்த அறிக்கையில் குற்றம்சாட்டியிருந்தார். அதேவேளை பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்காக அரசாங்கம் உடனடியாக விசேட ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் எந்தவித புரிதலும் இன்றி தவறான புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார் என்ற என்னை இன்று சந்தித்த ஐ.நா வின் துணைச் செயலாளர் நாயகத்திடம் குறிப்பிட்டேன். நாம் இதுவரை 90 வீதமான காணிகள் விடுவித்துள்ளோன். சரியாக 90 வீதமான காணிகளை விடுவித்திருக்கின்றோம்.

சிறிலங்கா அரசு படையினர் வசமுள்ள காணிகளை விடுவித்தாலும், வடக்கில் நிலவும் சாதியப் பிரச்சனை காரணமாக உயர் சாதியினர் உண்மையான காணி உரிமையாளர்களுக்கும், காணி இன்றி இருக்கும் ஏனைய சாதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் காணிகள் கிடைப்பதை தொடர்ச்சியாக தடுத்து வருவதாகவும் சிறிலங்கா ஜனாதிபதி பாரதூரமான குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.

“நாம் விடுவிக்கும் அந்தக் காணிகள் மக்களுக்கு செல்லாததற்கு காரணம் என்ன?. வடக்கில் நிலவும் சாதியப் பிரச்சனைகள் காரணமா நாம் காணிகளை விடுவித்தாலும், அந்தக் காணிகளை உயர் இடத்தில் இருக்கும் அதிகாரிகள், அவர்களுக்கு கீழ் மட்டத்திலுள்ள அதிகாரிகள், மாகாண சபைகளின் கீழ் உள்ள காணி ஆணையாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு தமது கடமைகளை நிறைவேற்ற முடியாதிருக்கின்றது.

விடுவிக்கப்படும் காணிகள், உயர் சாதியினருக்கு என பயன்தரு காணிகளை பிரித்தெடுத்துக்கொண்டு, ஏனைய சாதியினருக்கு ஏனைய காணிகளை பகிர்ந்தளிக்கின்றனர். அதனால்தான் மக்களின் காணிகள் உரியவர்களுக்கு சென்றடைவதில்லை. காணிகளை பகிர்ந்தளிக்கும் போது சாதியை பார்க்கின்றனர். உயர் சாதி, கீழ் சாதி என்று கூறுவதை நான் அறியேன். அதேபோல் எவ்வாறு உயர் சாதியாகினர் என்றும் எனக்குத் தெரியாது. இதுதான் வடக்கின் நிலமை”.

டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 166 மாணவர்களுக்கு இன்று சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு அதனை அடையாளப்படுத்தும் வகையில் சிறிலங்கா ஜனாதிபதி 06 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைத்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான கற்கை பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஜி.பி.எம்.சந்ரகுமார உள்ளிட்ட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட கல்விமான்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.