September 28, 2022

தென்தமிழ்த்தேச மக்களின் தாயகம் தழுவிய போராட்டத்திற்கு பூரண ஆதரவு

தென்தமிழ்த்தேச மக்களின் தாயகம் தழுவிய போராட்டத்திற்கு பூரண ஆதரவு
தென்தமிழ் தேசத்திலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது ஏற்பாட்டில்  தமிழர் தாயகத்தில்  19.03.2019 அன்று இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி பூரணமான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றது.

ஸ்ரீலங்கா ஆயுதப் படைகளால் கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களதும், யுத்த முடிவில் சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்படவர்களதும் நிலை என்ன என்பதனை அறிந்து கொள்வதற்காக அவர்களது உறவினர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களும் குரல் எழுப்பி வருகின்றனர்.

அதேபோன்று கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்ட எமது மக்களின் படுகொலைக்கு நீதிகோரி தாயகம், தமிழகம், புலம்பெயர்ந்து வாழும் உறவுகளும் குரல் கொடுத்து வருகின்றனர்.

மேற்படி காணாமல் ஆக்கப்பட்டவிவகாரம், படுகொலைக்கான நீதி ஆகிய விடயங்களை கையாள்வதற்காகவே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது. குறிப்பாக சாதாரண நடைமுறைகளுக்கு மாறாக ஒரு நாட்டின் பெயர் குறித்து தீர்மானம் ஒன்றினை இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா முன்வந்தபோது இலங்கைக்கு ஆதரவான வல்லரசு நாடுகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

அச்சந்தற்பத்தில் இலங்கையில் மிகப் பாரிய அளவிலான மனித உரிமைக் மீறல்களும், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களும் இடம்பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டிய அமெரிக்கா அக்குற்றச்சாட்டுக்களை விசாரிக்க விசேடமாக இலங்கையின் பெயர் குறித்த தீர்மானம் அவசியமானது என நியாயப்படுத்தியிருந்தது. ஆனாலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக முன்வைக்கப்பட்ட பிரதான நோக்கம் மறக்கப்பட்டுள்ளது.   கடந்த 2015 செப்ரெம்பரில் நிறைவேற்றப்பட்ட 30ஃ1 இலக்க தீர்மானமானது குற்றங்களைப் புரிந்த ஸ்ரீலங்கா அரசாங்கமே தான் செய்த குற்றங்களை விசாரிக்கும் நீதிபதியாக அமர்வதற்கு வாய்ப்பளித்துள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளில் ஸ்ரீலங்கா தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஸ்ரீலங்கா அரசுக்கு பாரிய நெருக்கடியாக அமைந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடாபிலோ அன்றி இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விசாரணைகளிலோ எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில் சர்வதேச வல்லாதிக்க சக்திளின் பூகோள ஆதிக்க நலன்களுக்காக அவர்களின் கைப்பாவைகளான தமிழ் தலைமைகளின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா அரசுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்குவதற்கு மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நகல் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது இறுதி முடிவு எடுக்க முன்னதாக தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் பல்லாயிரமாகத் திரண்டு எமது எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்தல் காலத்தின் கட்டாயமாகும்.
அந்த வகையில் ஸ்ரீலங்கா அரசின் உள்ளக விசாரணை மீது நம்பிக்கையில்லை
இலங்கை அரசின் பொறுப்புக் கூறல் விவகாரத்தில் மேலும் இரண்டுவருட காலநீடிப்பை வழங்குவதானது ஸ்ரீலங்கா அரசு பொறுப்புக் கூறலில் இருந்து தப்பித்துக் கொள்ளவே வழிவகுக்கும் என்பதுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்களின் குடும்பங்களுக்கும், போரில் பாதிக்கப்பட்ட ஏனையவர்களுக்கும் நீதி கிடைக்கவிடாது தடுப்பதாகவுமே அமையும் என்பதனை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தவும்
இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணைகளை ஐ.நா பாகாப்புச் சபை ஊடாக சர்வதே குற்றவியல் நீதிமன்றில் அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் மூலம் முன்னெடுக்கபட வேண்டும் என வலியுத்தும் தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படல்; வேண்டுமென வலியுத்தி முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு எமது அரசியல் இயக்கம் பூரண ஆதரவு தெரிவித்துக் கொள்வதுடன் மேற்படி போராட்டத்திற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் இஸ்லாமிய சகோதரர்களையும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டிநிற்கின்றோம்.

நன்றி

செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்