September 29, 2022

தன் பிரதேச மக்கள் அபிவிருத்தியில் முன்னிற்கும் கிளி மாவட்ட மக்கள் ஒன்றியம்

இந்த வருடம் ஜூன் மாதம் கிளிநொச்சி மாவட்டத்தில், பாடசாலை செல்லும் வறிய மாணவரிகளுக்கு 500 துவிச்சக்கரவண்டிகளை வழங்கும் மாபெரும் உதவிக்கரம் நீட்டும் திட்டத்தை கிளிநொச்சி மாவட்ட மக்கள் ஒன்றியம் கையில் எடுத்துள்ளது. இதற்காக கூறப்பட்ட துவச்சக்கர வண்டிக்கு அதிகமாக இதுவரை 548 துவிச்சக்கரவண்டிகளை பெற்றும் உள்ளது என்று கிளி மக்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது .

இம்மாதம் 2ம் திகதி இலண்டன் ஹரோவில் கிளிநொச்சி மாவட்ட மக்கள் ஒன்றியத்தின் ஒன்று கூடலில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் சத்தியமூர்த்தி பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வில், ஐ.பி.சி தமிழ் தங்கக்குரல் மிருதுளா உட்பட இசைக் கலைஞர்களின் இசை நிகழ்வும் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் வைத்தியர் சத்தியமூர்த்தியின், போர்க்கால உணர்வு மிக்க கடமையினையும் முள்ளிவாய்க்கால் வரையான அவரது பொறுப்பான சேவையினையும் கருத்தில் கொண்டு அவருக்கு “2019ம் ஆண்டின் மண்ணின் மைந்தன்“ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கிளி மக்கள் ஒன்றியத்தின் செயற்பாட்டை பாராட்டி மண்ணின் மைந்தன் வைத்தியர் சத்தியமூர்த்தி வழங்கிய நினைவுப்பரிசை, குறித்த ஒன்றியத்தின் செயலாளர் சுப்ரம் சுரேஸ் பெற்றுக்கொண்டார்.