Oktober 1, 2022

ஐ.நா. தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறது –விக்னேஸ்வரன்!!

இலங்கை அரசாங்கத்துக்கு ஐ. நா தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு இனிமேலும் கால அவகாசம் வழங்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ள வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் வடக்கு கிழக்கில் ஐ. நா உயர்ஸ்தானிகராலயத்தின் அலுவலகங்களை அமைப்பது உட்பட மாற்று நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஐ. நா மனித உரிமைகள் சபையும் சர்வதேச சமூகமும் ஆராயவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த விக்னேஸ்வரன் இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொலைசெய்யப்பட்டு இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டபோது பாதுகாப்பதற்கான தனது பொறுப்பபில் ( Responsibility to Protect) இருந்து தவறிய ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் போருக்குப் பின்னராவது பொறுப்புக்கூறல் மற்றும் நீதி ஆகியவற்றில் காத்திரமான ஒரு வகிபாகத்தை செய்வார்கள் என்று எதிர்பார்த்து தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றம் அடையும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டார்.

இலங்கைக்கு மீண்டும் கால அவகாசம் வழங்குவதானது மனித உரிமைகள் சபை தன்னை தானே ஏமாற்றி பாதிக்கப்பட்ட எமது மக்களையும் ஏமாற்றுவதாகவே அமையும் என்றும் விக்னேஸ்வரன் எடுத்துரைத்தார்.

விக்னேஸ்வரன் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கல்வி செயற்பாடுகள், நாளாந்த வாழ்வாதார செயற்பாடுகள் மற்றும் முக்கியமான பல கருமங்களை எல்லாம் ஒதுக்கிவைத்து செலவழித்து எமக்கான உரிமைகளையும் நீதியையும் சர்வதேச சமூகத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அரசாங்கத்துக்கும் வலியுறுத்துவதற்காக வடக்கு கிழக்கின் பல பாகங்களில் இருந்தும் இங்கு வந்துள்ள அனைவரையும் காணும் போதுமகிழ்ச்சி அடைகின்றேன். முதற்கண் அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேபோல வியாபார நிலையங்களை மூடி இன்றைய மக்கள் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு நல்கியுள்ள வர்த்தகர்களுக்கும் எனது நன்றிகளைக் கூறிக்கொள்கின்றேன்.
காணாமல்ப் போனவர்களின் குடும்பத்தினர் நடாத்தும் இந்த போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கவே நாம் இங்கு கூடி வந்துள்ளோம். வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மக்கள் ஒன்று திரண்டு சாத்வீக வழிமுறையில் இன்றைய நாளில் மேற்கொள்ளும் இன்றைய போராட்டத்தின் தாற்பரியத்தை ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் புரிந்துகொள்ளவேண்டும். எமது மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு உரிய மாற்று நடவடிக்கைகளை காலம் தாமதிக்காமல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை மேற்கொள்ளவேண்டும். மனித உரிமைகள் சபை தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு மீண்டும் கால அவகாசம் வழங்குவதானது மனித உரிமைகள் சபை தன்னைத் தானே ஏமாற்றுவதோடல்லாமல் பாதிக்கப்பட்ட எமது மக்களையும் ஏமாற்றுவதாகவே அமையும்.

போர்க்குற்ற விசாரணை உட்பட மனித உரிமைகள் சபை தீர்மானத்தின் பல விடயங்களை நிறைவேற்றப்போவதில்லை என்று ஜனாதிபதி வெளிப்படையாக கூறியுள்ள நிலையில் கால அவகாசம் எதற்காக என்பதை உறுப்பு நாடுகளும் ஐ.நா மனித உரிமைகள் சபை ஆணையாளரும் சிந்தித்துப் பார்த்து மாற்று நடவடிக்கைகளை எடுக்க முன் வர வேண்டும். அதனால்த் தான் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கையாள வேண்டும் என்று கோரியுள்ளோம். அது சாத்தியப்படாவிட்டால் சர்வதேச சட்டங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு அமைவான பொருத்தமான ஒரு பொறிமுறையின் கீழ் மனித உரிமைகள் சபை இதனைக் கையாள வேண்டும் என்று கோரி தமிழ் மக்கள் பேரவை ஊடாகத் தீர்மானம் ஒன்றை இன்று அனுப்பியுள்ளோம். அதேவேளை, தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ஐ. நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயம் வடக்கு கிழக்கில் தனது அலுவலகங்களை திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

இறுதிப் போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஏராளமான ஆதாரங்கள் வெளிவந்துள்ள நிலையிலும் சர்வதேச விசாரணை ஒன்றை ஐ. நா மனித உரிமைகள் சபை மேற்கொள்வதை இலங்கை அரசாங்கம் சவாலுக்கு உட்படுத்திவரும் விதம் எதிர்காலத்தில் மனித உரிமைகள் சபையின் இறைமையைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கில் எமது மக்கள் கொலைசெய்யப்பட்டு இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டபோது பாதுகாப்பதற்கான தனது பொறுப்பில் (Responsibility to Protect-R2P) இருந்து தவறிய ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் போருக்குப் பின்னராவது பொறுப்புக்கூறல் மற்றும் நீதி ஆகியவற்றில் காத்திரமான ஒரு வகிபாகத்தை அமைப்பார்கள் என்று எதிர்பார்த்து எமது மக்கள் மீண்டும் ஏமாற்றம் அடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் மற்றும் நீதி தொடர்பில் இலங்கைக்கு இருக்கின்ற கடப்பாடுளை வலியுறுத்தி 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை அமுல்படுத்துவதற்கு ஐ.நா மனித உரிமைகள் சபையும் சர்வதேச சமூகமும் தேவைக்கு அதிகமாகவே சகல விதமான ஒத்துழைப்புக்களையும் வழங்கி நெகிழ்ந்த தமது தன்மையை காட்டி இருக்கின்றன. ஆனால் இவற்றைத் து~;ப்பிரயோகம் செய்யும் விதமாகவே இலங்கை அரசங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. பெரும்பாலும் கண்துடைப்பு நடவடிக்கைகளிலேயே ஸ்ரீலங்கா அரசாங்கம் கடந்த 4 வருடங்களில் ஈடுபட்டுவந்துள்ளது. குறிப்பாக காணாமல் போனவர்கள் தொடர்பில் அமைக்கப்பட்ட அலுவலகம் இன்று செயல் இழந்துள்ளது. ஏற்கனவே அதன் செயற்பாடுகள் அரசாங்கத்தின் போர்க்குற்றங்களை மூடி மறைக்கும் விதமாகவே அமைந்திருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டி அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி இருந்தார்கள். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. தொடர்ந்தும் எமது நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகள் கூட இன்னமும் கட்டிக்கொடுக்கப்படவில்லை. இழைக்கப்பட்ட குற்றங்களை மறந்துவிடுவோம். விசாரணை எதுவும் தேவை இல்லை என்று நாட்டின் பிரதமர் சில வாரங்களுக்கு முன்னர் கூறி எமது மக்களின் மனங்களைப் புண்படுத்தி இருப்பதுடன் எமது நம்பிக்கையீனத்தை மேலும் அதிகரிக்கச்செய்துள்ளார்.

ஆகவே தான் இலங்கை அரசாங்கத்துக்கு ஐ.நா தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு குறிப்பாக போர்க்குற்ற விசாரணையை நடாத்துவதில் இனிமேலும் கால அவகாசம் வழங்கக்கூடாது என்றும் வடக்கு கிழக்கில் ஐ.நா உயர்ஸ்தானிகராலயத்தின் அலுவலகங்களை அமைப்பது உட்பட மாற்று நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி நிற்கின்றோம்!
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo